பாம்புத் திருவிழா



இத்தாலியில் நடக்கின்ற விநோதமான திருவிழா ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்து செம ஹிட்டாகிவிட்டது. 11-ம் நூற்றாண்டில் இத்தாலியின் கிராமங்களில் இருந்த வயல் வெளிகளை விஷப் பாம்புகள் சூழ்ந்திருந்தன.
அதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மக்களும் வயல்வெளிக்குள் செல்லவே பயந்தனர். அப்போது புனித துறவியான டொமினிக் தனது மாய சக்தியால் பாம்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். விவசாயமும் செழிப்படைந்தது.  

அவரைக் கௌரவிக்கும் விதமாக வருடந்தோறும் மே மாதம் 1-ம் தேதியன்று பாம்புத் திருவிழா இத்தாலியிலுள்ள கோகுல்லா கிராமத்தில் சிறப்பாக அரங்கேறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முப்பது விதமான விஷமற்ற பாம்புகளைத் தூக்கிக்கொண்டு வீதியில் ஊர்வலமாக வரும் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

இதைப் புகைப்படமெடுக்க உலகெங்கும் இருந்து கலைஞர்கள் கோகுல்லாவில் குவிகின்றனர். தவிர, பாம்புக் காதலர்களும் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இந்த விழாவிற்காகவே சிலர் ரகசியமாக பாம்புகளை வளர்க்கின்றனர் என்பதுதான் இதில் ஹைலைட்.