சாதிக்க வயது தடையில்லை!



மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு துறையில் சாதித்து தனது பெயரை வரலாற்றில் நிலைநாட்டிட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், குடும்பச்சூழல், வறுமை, வயது... போன்ற காரணங்கள் தடையாக இருந்து நம்முடைய கனவுக்கு முட்டுக்கட்டையாக விழும்.
ஒருவேளை வயது மட்டுமே உங்களின் கனவு நனவாக தடையாக இருந்தால் தயவுசெய்து நிலைகுலைந்து போகாதீர்கள். தொடர்ந்து உங்களின் கனவை நோக்கி பயணியுங்கள் என்று தனது சாதனை மூலம் சொல்கிறார் பெட்டி பட்லர்.

அடர்ந்த நீலநிற வானம், மேகத்தைக் கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது ஸ்கை டைவிங் நிறுவனத்தைச் சேர்ந்த குட்டி விமானம் ஒன்று. தரை மட்டத்திலிருந்து 13 ஆயிரம் அடி உயரே சென்றதும் விமானத்தின் வேகம் மெதுவாகக் குறையும். அப்போது விமானத்தின் கதவைத் திறந்துகொண்டு பயிற்சியாளர் ஒருவரின் துணையுடன் தரையை நோக்கி ஸ்கை டைவிங் அடிக்கிறார் பட்லர்!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்த பட்லரின் கனவு, வாழ்க்கையில் ஒருமுறையாவது ஸ்கை டைவிங் செய்ய வேண்டும். தனது குடும்பமும் நண்பர்களும் தான் செய்கின்ற ஸ்கை டைவிங்கைப் பார்க்க வேண்டும்.

ஆனால், பட்லரின் கனவு அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறவில்லை. தவிர, இளசுகளுக்கு மட்டுமே உகந்த ஒரு விளையாட்டு இந்த ஸ்கை டைவிங். அத்துடன் இந்த விளையாட்டுக்குப் பணத்தை தண்ணீராக இறைக்க வேண்டும். எல்லோரும் பயந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் விளையாட்டாகவும் இது இருந்துவருகிறது.

ஆனால், பெட்டி பட்லர் அசால்ட்டாக இந்த விளையாட்டில் கலந்துகொண்டு துணிச்சலாக ஸ்கை டைவிங் அடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை அள்ளியிருக்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 90வது வயதில் விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் அடித்ததைப் பார்த்திருக்கிறார் பெட்டி. ‘‘அந்த நிகழ்வுதான் எனக்கு உந்துதலாக இருந்தது...’’ என்கிறார்.

ஸ்கை டைவிங் செய்வதற்கு முன்பு சூடான ஏர் பலூனிலும், ஜெட் வேகத்தில் நீரில் செல்கின்ற படகிலும் சவாரி செய்து எல்லாரையும் அசத்தியிருக்கிறார் பட்லர். வெறும் சாகசத்துக்காக இதை இவர் செய்யவில்லை.

பாராசூட்டின் உதவியோடு மேலிருந்து கீழே மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தபோது பட்லரின் உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் உற்சாகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருக்க, ஸ்கை டைவிங்கின் ஒவ்வொரு வினாடியையும் உணர்வுபூர்வமாக அனுபவித்து செயல்பட்டிருக்கிறார் என்பதை அவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே நமக்குக் காட்டுகிறது.

விரும்புவதை, நேசிப்பதை செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை இந்த நிகழ்வு நமக்குச்  சொல்லாமல் சொல் கிறது. ஆம்; பெட்டி பட்லரின் வயது 95. பட்லர் கீழே இறங்கியதும், ஸ்கை டைவிங் அனுபவம் எப்படியிருந்தது என்று ஒருவர் கேட்க, ‘‘வொண்டர்ஃபுல்...’’ என்று அவர் சொல்ல அந்த இடமே குதூகலமாக மாறியது.

நூறு வயதைத் தொடக் காத்திருக்கும் பட்லர் அடுத்து என்ன சாகசத்தைச் செய்யப்போகிறார் என்பதே இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. இன்னும் பல சாதனைகளை பாட்டி படைக்கட்டும்!ஆம்; சாதிக்க வயது தடையில்லை.

த.சக்திவேல்