விஞ்ஞானி கேட்டி பௌமன்



நம் கண்களில் அகப் படுகிற மனிதர்கள், இயற்கைக் காட்சிகளைக் காட்சிப்படுத்தி கேமராவுக்குள் கொண்டு வருவதற்கே தனிப்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.  அப்படியிருக்கையில் நம் கண்களுக்கு அகப்படாமல் மிகத் தொலை வில் இருக்கும் ஒன்றைக் காட்சிப்படுத்தி கேமராவுக்குள் கொண்டு வர பெரிய அளவில், அதே சமயம் நவீனமான தொழில்நுட்பம் வேண்டும்.

உதாரணத்துக்கு, பூமியிலிருந்து நிலாவில் இருக்கும் ஏதோவொரு பொருள் அல்லது கேலக்ஸியில் இருக்கும் பிளாக் ஹோலைப் புகைப்படமாக்கி கேமராவுக்குள் கொண்டு வருவதாகும். சமீபத்தில் பூமியிலிருந்து பல ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிளாக் ஹோலைப் புகைப்படம் எடுத்து அசத்தியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தப் புகைப்படத்துக்கு முதுகெலும்பாக இருந்தவர் கேட்டி பௌமன்.

ஆம்; மூன்று ஆண்டுகளுக்கு முன் பிளாக்ஹோலை எப்படி புகைப்படமாக்க வேண்டும் என்று ஒரு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார் கேட்டி பௌமன். அதில் பிளாக்ஹோலை காட்சிப்படுத்துவதற்கான வழிமுறைகளைத் துல்லி யமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் விஞ்ஞானிகள் பிளாக்ஹோலைப் புகைப்பட மாக்கியிருக்கின்றனர். ஏப்ரல் 10, 2019 அன்று பிளாக்ஹோலின் புகைப் படம் முதன் முதலாக மக் களின் பார்வைக்கு வந்தது. அதுவரைக்கும் கேட்டி பௌமனின் பெயர்கூட வெளியே வரவேயில்லை. அவருடன் வேலை செய்த சில ஊழியர்களுக்கு மட்டுமே பிளாக்ஹோலின் பின்புலமாக இருக்கும் கேட்டியின் உழைப்பு தெரியும். இன்று இணையமே தேடும் ஒரு நபராக மாறிவிட்டார் கேட்டி.

இப்போது கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கேட்டி பௌமன் ஒரு இமேஜிங் விஞ்ஞானியும் கூட. இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டரின் துணை கொண்டு மனிதனின் கண் பார்வைக்குத் தட்டுப்படாத விஷயங்களை உருவாக்குதல் இவரது பணி. பள்ளியில் படிக்கும்போதே இமேஜிங் துறைக்கு வந்துவிட்டார். இத்தனைக்கும் கேட்டியின் வயது 29.