உலகின் முதல் இளம் பணக்காரர்



ஆண்டிப்பட்டியிலிருந்து அமெரிக்கா வரை எல்லா பேட்டைகளிலும் இளசுகளின் கனவுக்காதலி கைலி ஜென்னர். மாடல், நடிகை, தொழில் அதிபர்,  ரியாலிட்டி ஷோ பர்சனாலிட்டி என்று பன்முகங்களுடன் வலம் வந்த கைலி, சமீபத்தில் தாயாகவும் புரொமோஷன் ஆகிவிட்டார். தனது அக்கா கிம்  கர்தாஷியனைப் போல் அழகையும், பிரபலத்தையும் முதலீடாக்கி பண மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கைலி.

இந்த வருடம் ‘ஃபோர்ப்ஸ்’  பத்திரிகை, ‘உலகின் முதல் இளம் கோடீஸ்வரர்!’ என்ற பட்டத்தைக் கொடுத்து கைலியை அட்டைப்படத்தில்  அலங்கரித்திருக்கிறது. கைலியின் சொத்து மதிப்பு 7 ஆயிரம் கோடி ரூபாய். அத்தனையும் சுய சம்பாத்தியம் என்பது இதில் ஹைலைட்.

இப்போது அவர் நிர்வகித்து வரும் ‘கைலி காஸ்மெட்டிக்ஸ்’ நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்! இதுபோக இன்ஸ்டாவில்  அவரின் ஒவ்வொரு அசைவும் கோடிகளைக் குவிக்கிறது. ஆம்; பிரபல நிறுவனங்கள் கைலியின் கால்ஷீட் வேண்டி இரவு பகலாக காத்துக்கிடக்கின்றன. 

‘‘எங்கள் நிறுவன புரொடக்ட்டுடன் ஒரேயொரு செல்ஃபி எடுத்து, இன்ஸ்டாகிராமில் எங்களைப் பற்றி ஓரிரு வரிகளை கைலி எழுதினாலே போதும். எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்...’’ என்கின்றன நிறுவனங்கள். ஆனால், இந்த காஸ்மெட்டிக்ஸ் குயினோ தனக்குப் பிடித்த,  விருப்பமான நிறுவனங்களுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டுகிறார்.

சமீபத்தில் ஒரு ஃபிட்னஸ் நிறுவனம் இன்ஸ்டாவில் அவருடைய ஒரு செல்ஃபிக்காக ஏழு கோடி ரூபாயை அள்ளித் தந்திருக்கிறது! இதன் மூலம்  இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் முதல் நபர் என்ற பெருமையையும் தன்வசமாக்கிவிட்டார் கைலி. இன்ஸ்டாவில் கைலியை 10.6 கோடிப்  பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

அவரைவிட அதிக ஃபாலோயர்களை வைத்துள்ள பாடகி செலினா கோமஸும், கால்பந்து வீரர் ரொனால்டோவும்  வருமானம் ஈட்டுவதில் கைலிக்குப் பின்னால்தான் நிற்கிறார்கள். இத்தனைக்கும் கைலியின்  வயது 21 தான்!