புளூ ஆரிஜின்



‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்கின் கனவு செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும்; விரைவில் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது. சமீபத்தில் ‘அமேசானி’ன் நிறு வனர் ஜெஃப் பெஸோஸ், ‘‘முதலில் இமையலைக்குப் போய் அங்கே கொஞ்ச நாள் இருந்து பாருங்கள். பிறகு செவ்வாய்க்குப் போவதைப் பற்றி யோசிக்கலாம்...’’ என்று எலன் மஸ்க்கை சீண்டியிருந்தார். இத்தனைக்கும் ஜெஃப் பெஸோஸும் விண்வெளிச் சுற்றுலாவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இதற்காக  ‘புளூ ஆரிஜின்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

‘‘நாம் எல்லோரும் நிலவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட வேண்டும்...’’ என்று வேடிக்கையாகச் சொல்கிறார் ஜெஃப் பெஸோஸ். மிகக் குறைந்த செலவில், அதிகளவில் மக்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்வதே பெஸோஸின் முக்கிய நோக்கம். 2005-ம் வருடத்திலிருந்து 15 முறைக்கு மேல் சோதனை ஓட்டங்களை நிகழ்த்தியிருந்தாலும், இன்னும் ஆறு சோதனை ஓட்டங்களைச் செய்து பார்த்தபிறகே மக்களை விண்வெளிக்கு  அழைத்துச் செல்லவிருக்கிறது ‘புளூ ஆரிஜின்’. மணிக்கு 3,675 கி.மீ. வேகத்தில் செல்கின்ற இவர்களின் விண்கலம் சோதனை ஓட்டத் தில் விண்வெளிக்குச் சென்று வர 11 நிமிடங்களே ஆகியிருக்கிறது.

‘புளூ ஆரிஜின்’ இந்த வருடத்தின் இறுதிக்குள் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.தொழில் போட்டியின் காரணமாக எலன் மஸ்க்கை ஜெப் பெஸோஸ் சீண்டியிருக்கலாம். ‘வர்ஜின் கேலக்டிக்’, ‘ஸ்பேஸ்எக்ஸ்’, ‘புளூ ஆரிஜின்’ ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. யார் முதலில் மக்களை விண்வெளிக்கு அழைத்துப் போகிறார்கள் என்பது இந்த வருடத்தின் இறுதிக்குள் தெரிந்து விடும்.