உயிர் வாழ்வதற்காக எழுதுகிறேன்!



முத்தாரம் நேர்காணல்

லெபனானில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தபோது பிறந்தவர் ஜூமனா ஹடாட். அணுகுண்டுகளுக்கும் அப்பாவிகளின் மரணத்துக்கும் இடையில் வளர்ந்த ஜூமனாவின் குழந்தைப்பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை. பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஜூமனாவின் ஆன்மாவைச் சிதைக்காமல் காப்பாற்றியவை புத்தகங்கள் மட்டுமே. வாசிப்பில் தன்னை மூழ்கடித்துக்கொண்ட ஜூமனா, இன்று லெபனானின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக மிளிர்கிறார்.

எழுத்தாளர் மட்டுமல்லாமல், பெண் உரிமைப் போராளி, பேச்சாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்களுடன் வலம் வருகிறார். ஏழுமொழிகளில் எழுதப்பேசத் தெரிந்தவர்கள். ‘அரேபியன் பிசினஸ்’ என்ற பத்திரிகை ஜூமனாவை உலகின் சக்தி வாய்ந்த 100 அரபுப் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது.

அரபு மொழியில் ‘Jasad’ என்ற காலாண்டு இதழை நடத்தி வருகிறார். ஏராளமான கவிதைகள், கட்டுரைகளை எழுதிக்குவித்து விருதுகளையும் அள்ளியிருக்கிறார். இவரது புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியன், ஸ்பானிஷ் அகிய மொழிகளில் வெளியாகி யுள்ளன. கடந்த வாரம் ஜூமனா ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதன் ஒரு பகுதி இது.

உங்கள் வாழ்க்கையில் புத்தகங்கள் என்ன மாதிரியான இடத்தை வகிக்கின்றன?

புத்தக வாசிப்பு தான் என் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு எதிரான விஷயங்களே என்னைச் சுற்றி எப்போதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் பிணங்களும், வன்முறைகளும்தான். வெளியே நடமாட முடியாத ஒரு சூழல். பயமும் பரிதவிப்பும்தான் என்னைச் சூழ்ந்திருந்தன.
இந்நிலையில் புத்தகங்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், நான் முன்னேறிச் செல்வதற்கான கனவுகளையும் எனக்குள் விதைத்தன. என்னிடம் எது இல்லையோ அதைப்பற்றி கற்பனை செய்ய புத்தகங்கள் என்னை அனுமதித்தன அன்பு மற்றும் அறிவின் கருவறையிலிருந்து என்னை வளர்த்தெடுத்தவைபுத்தகங்கள் மட்டுமே.

இன்று லெபனானில் பெண்களின் நிலை எப்படியிருக்கிறது?

இன்றைக்கும் சுதந்திரத்திலும் நீதியிலும் ரொம்பவே பின்தங்கி யிருக்கிறோம். இருந்தபோதிலும் கானல் நீரைப் போல சுதந்
திரத்தைச் சில பெண்கள் இங்கே அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். லெபனானின் அரசியலமைப்பே தீவிர ஆணாதிக்கத் தன்மை கொண்டது. பெண்கள் அரசியலில் பங்குபெறுவது என்பது சொற்ப  அளவில் தான் நடக்கிறது.

இன்னும் பெண்களுக்கு எதிரான பழமைவாத சட்டங்களே பின்பற்றப்பட்டு வருகின்றன. நாங்கள் இன்னும் முன்னேறவில்லை. ஆனால், ஒரு நாள் எங்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சுவர்களை உடைத்து வெளியேறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது.

உங்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்றால் என்ன?

சுதந்திரம் என்பது முடிவற்ற ஒரு தேடல். அதை இதுதான் என்று ஒரு வரையறைக்குள் அடக்கிவிடமுடியாது. சுதந்திரத்திற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த பூமியில் நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கும், நீங்கள் நீங்களாகவே வாழ்வதற்குமான உரிமையைச் சுதந்திரம் என்பேன்.

உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன?

என்னைச் சுற்றியிருக்கும் உலகை மாற்ற வேண்டும்  என்பது போன்ற எந்த நோக்கமும் எனக்கில்லை. எனக்குத் தேவையாக இருக்கிறது. அதனால் எழுதுகிறேன். உண்மையில் எழுதுவது என் பணியல்ல. அது நான் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான அவசியத்தேவையாக இருக்கிறது. என் எழுத்து பலருக்கு ஆறுதலாகவும் உந்துதலாகவும் உதவியாகவும் இருப்பதைக் கேள்விப்படுகிறேன். அது எழுத்தின் மேஜிக். மற்றபடி எந்த நோக்கத்துடனும் நான் எழுதுவதில்லை.

லெபனானில் அச்சுறுத்தல் இருந்தும் அங்கே ஏன் தொடர்ந்து வசிக்கிறீர்கள்?

உண்மையில் மாற்றம் என்பது நமக்குள் இருந்துதான் வருகிறது என்று நம்புகிறேன். அதை வெளியிலிருந்து வாங்க முடியாது. என் மக்களுடைய வாழ்க்கையையே நானும் வாழவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை, அநீதிகளை, விரக்தியை அவர்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்க வேண்டும். அந்த அநீதிகளுக்கு எதிராக அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். நான் அவர்களின் வலியை அவர்களுடன் சேர்ந்து அனுபவிக்கவில்லை என்றால் அவர்கள் சுதந்திரமடையும்போது அதில் பங்குபெற எனக்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழில்: த.சக்திவேல்