அஞ்சலிதென் பசிபிக் பெருங்கடலின் நடுவே 261 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அழகாக அமர்ந்திருக்கிறது நியு தீவு. நியூசிலாந்தின் வடகிழக்கிலிருந்து 2,400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தத் தீவு பவளப் பாறைகளுக்கு உலகப் புகழ் பெற்றது. வெறுமனே 1,600 பேர் மட்டுமே இங்கே வசிக்கின்றனர்.கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஒரு வாத்து நியுவிற்கு வந்தது. அது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

தன்னந்தனியான அந்த வாத்து தீவில் உள்ள குட்டையில் கிடைத்த மீன் களையும், அங்கிருக்கும் மக்கள் தரும் உணவையும் உண்டு வாழ்ந்து வந்தது. நியூசிலாந்தின் அரசியல் பிரமுகர் ட்ரெவர் பேரையே வாத்துக்கும் வைத்து மக்கள் அழகுபார்த்தனர்.

நாளடைவில் ட்ரெவருக்கும் மக்களுடன் ஒரு பிணைப்பு உண்டானது. சமூக வலைத்தளங்களிலும் ட்ரெவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உருவானது. ‘உலகின் தன்னந்தனியான வாத்து’ என்று ட்ரெவர் மக்கள் மத்தியில் பிரபலமானது. கடந்த வாரம் ஒரு நாய் கடித்து ட்ரெவர் இறந்துவிட்டது. இப்போது நியு தீவே துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.