கிராமத்தைக் காப்பாற்றிய ஓவியர்



இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு தைவான் அரசால் ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம் டைசுங். நாற்பது வருடங்களுக்கு முன்பு அக்கிராமத்திற்கு வந்தார் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஹூவாங். தான் பிறந்து வளர்ந்த அக்கிராமத்தில் ஓய்வு நாட்களைக் கழிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் அங்கே வந்தபோது 1,200 வீடுகள் இருந்தன.

நாட்கள் வேகமாக ஓடியது. மக்கள் கிராமத்தைவிட்டு நகரத்தில் குடியேறத் தொடங்கினர். கிராமத்தில் இருந்த வீடுகளை வாங்கிய நிறுவனங்கள் அவற்றை இடித்தன. கடைசியில் 11 வீடுகளே எஞ்சியிருந்தன. ஆனால், ஹூவாங்கைத் தவிர யாரும் அங்கே  வசிக்கவில்லை.

அந்தக் கிராமத்தில் 37 வருடங்களாக நிம்மதியாக  வாழ்ந்துவந்த ஹூவாங்கிற்கு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஓர் அதிர்ச்சி செய்தியை அரசாங்கம் தந்தி மூலம் அனுப்பியது. ‘‘கிராமத்தில் யாருமே வசிப்பதில்லை என்பதால் சில நாட் களில் கிராமத்தை அழிக்கப்போகிறோம். உங்களுக்கு நகரத்தில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது...’’ என்று அந்த தந்தியில் எழுதப்பட்டிருந்தது.

96 வயதான ஹூவாங்கால் என்ன செய்ய முடியும்? அரசை அவர் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு போகவும்

அவருக்கு மனமில்லை.மனதளவில் சலிப்புற்ற அவர் வீட்டின் உட்புறத்தில் ஓவியம் தீட்ட ஆரம்பித்தார்.

முதல் முறையாக அவர் வரைந்தது சிறகு அசைத்து பறக்க விரும்பும் ஒரு பறவையை. ஓவியக் கலை அவரின் மனதை வசியப்படுத்தி அமைதிப்படுத்த, அந்தக் கிராமத்தில் இருக்கும் வீடுகளின் மீது ஓவியம் வரைந்தார். அதிகாலை 3 மணிக்கு எழுந்து வரையத் தொடங்கினால்  பசிக்கும்வரை வரைந்து கொண்டேயிருப்பார்.

சில நாட்களில் அந்தக் கிராமமே ஒரு அழகான ஓவியம் போல மாறிவிட்டது. இதைக் கேள்விப்பட்டு சுற்றுலாப் பயணிகள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். இன்று தைவானில் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது டைசுங். அத்துடன் அரசும் கிராமத்தை அழிக்கப்போகும் திட்டத்தைக் கைவிட்டு விட்டது.

ஓவியப் பொருட் களுக்கான செலவுகளைத் தன் சொந்தப் பணத்திலேயே செய்கிறார் ஹூவாங். ‘வானவில் தாத்தா’ என்று ஹூவாங்கை சுற்றுலாப் பயணிகள் அன்புடன் அழைக்கின்றனர். இத்தனைக்கும் ஹூவாங் ஒன்றும் தொழில்முறை ஓவியர் அல்ல.