ரிமா தாஸ்!



இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஓர் ஆளுமை ரிமா தாஸ். நான்கு தேசிய விருதுகள், வடகிழக்கு இந்தியாவிலிருந்து ‘டொரொண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வான முதல் படம் என அசாமுக்கு பெருமை சேர்த்த ‘வில்லேஜ் ராக் ஸ்டார்ஸி’ன் இயக்குநர் இவர்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப் பதிவு, தயாரிப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங் என சகலமும் ரிமாதான்.

இத்தனைக்கும் எந்த ஃபிலிம் ஸ்கூலிலும் படிக்காதவர் இவர்! அசாமில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த ரிமா, ஆரம்பத்தில் நடிப்பின் மீதான ஈர்ப்பால் மும்பைக்குச் சென்று மேடை நாடகங்களில் ஆங்காங்கே முகம் காட்டினார். அங்கே பெர்க்மன், சத்யஜித்ரே போன்ற திரை மேதைகளின் படைப்புகள் அறிமுகமாக, டைரக்‌ஷன் மீது அவர் பார்வை திரும்பியது.

சொந்தமாக கேமரா வாங்கி, குறும்படங்களை இயக்கி ஃப்லிம் மேக்கிங் கலையைக் கற்று சர்வதேச அளவில் புகழை அள்ளினார்.  ரிமாவின் வருகைக்கு முன்பு தேசிய அங்கீகாரத்துக்கே அசாமியப் படங்கள் திண்டாடி வந்தன.