இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் டெல்லி ஊடகங்களில் வெளித்தெரிவதில்லை!முத்தாரம் நேர்காணல்

நேர்காணல்:பிரியங்கா துபே, பத்திரிகையாளர்

கடந்த ஆறு வருடங்களாக பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி வருகிறார் பத்திரிகையாளர் பிரியங்கா துபே. ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப் படும் சமூக-பொருளாதார, சாதி ரீதியான வல்லுறவுகள், தாக்குதல்கள், படுகொலைகள், அதன்மீது நீதித்துறையின் நடவடிக்கை ஆகியவற்றைப் பற்றி ‘No Nation For Women’  என்ற நூலையும் எழுதியுள்ளார்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

பழம்பெருமை கொண்ட மரபான குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் குடும்பத்தில் இலக்கியம், பத்திரிகை வாசிக்கக் கூட ஆள் கிடையாது. அச்சூழல் என்னை வெளியுலகை நோக்கித் தள்ளியது. இப்பத்திரிகை பணி ஒருவகையில் உலகைப் புரிந்து கொள்வதற்கான வழி.
 
பத்திரிகையாளராக, பெண்ணாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

விரக்தியும் நம்பிக்கையும் ஒருசேர மனதில் உருவானது உண்டு. தொடக்கத்தில்  நீதி மறுக்கப்பட்ட நிகழ்வுகளைக் கேட்கும்போது ஒரு பெண்ணாக என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால், பத்திரிகையாளராக செய்திகளைக் கேட்கும்போது எதிர்வினை செய்வதைவிட அதனை பதிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

செய்திகளைக்கேட்டு உணர்ச்சிவசப்படாமல் நெகிழ்வாக இருப்பது இன்று சாத்தியமாகி உள்ளது. இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் டெல்லி ஊடகங்களில் வெளித்தெரிவதில்லை. இங்கு என்னை வெளி நபராகவே உணர்கிறேன்.
 
நகரம் - கிராமம் என்ற இடைவெளியில் பெண்களின் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை நிகழ்வுகள் வேறுபடுகின்றதா?

கிராமங்களில் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைப் பிறரிடம் முறையிட்டு தீர்வு காணமுடியாத நிலையே  உள்ளது. இது ஒவ்வொரு வீட்டுக்கும் பொதுவானது. இன்றைக்கும் இதுவே நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் நகருக்கு இடம்பெயர்ந்து அகதியாகவேனும் வாழ முயற்சிக்கிறார்கள்.

பாலினப் பாகுபாடு பிரச்னையை வெளிக்கொண்டு வந்ததில் நிர்பயா நிகழ்வுக்கு முக்கியப் பங்குண்டு. இதுதொடர்பான சட்ட மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது ஒரு தொடக்கம்தான். பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுவதற்கு இந்திய சமூகம் தயங்கிக்கொண்டிருந்தது. இன்று அதற்கான தடைகள் உடைந்து வருகின்றன. பெண்கள் தமக்கு நிகழும் வன்முறைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான சுதந்திரக்குரலை உறுதியுடன் வெளிப்படுத்த நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
 
தற்போது ‘மீடூ’ இயக்கம் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அதைப்பற்றிய தங்கள் கருத்து ?

‘மீடூ’ இந்தியாவில் பரவியபோது நான் எனது நூலை எழுதி முடித்திருந்தேன். பத்திரிகையாளராக அதன் நகர்வை தற்போது கவனித்து வருகிறேன். இது மேல்தட்டு வர்க்கத்தில் நிகழும் பாலியல் அத்துமீறல்களைக் கவனப்படுத்துகிறது.
 
நூலுக்கான தகவல்களைத் திரட்டியதில் எது கடினமான பகுதியாக உணர்ந்தீர்கள்? செய்தி திரட்டலில் விரக்தியாக உணர்ந்த தருணம் எது?

புகைப்படங்கள், சாட்சி களின் குரல்களைத் திரும்பத் திரும்ப கேட்பது என என் மனநலனை சமநிலையில் வைப்பது போராட்டமாக இருந்தது. தகவல்களைத் திரட்டி தனியாக உட்கார்ந்து எழுதியபோது கடுமையான வெறுமையை மனதில் உணர்ந்தேன். சிலமுறை நூலை முடிக்க முடியுமா என்று கூட பயந்தேன்.

அப்படித் தோன்றும்போது கஃபேயில் எனக்குப் பிடித்த எழுத்தாளரான நிர்மல் வர்மாவின் புத்தகத்தை வாசிப்பேன். அதுவே என்னை மன அழுத்தங்களிலிருந்து மீட்டது.

நன்றி: சோமக் கோஸல்,
லிவ் மின்ட்.

தமிழில்: ச.அன்பரசு