குடிநோய்க்கு மரபணு காரணம்!



குடிநோய், மனச்சோர்வு ஆகியவற்றுக்கு ஒருவரின் மரபணுக்களே காரணம் என சைக்யாட்ரிக் ஜெனோமிக்ஸ் கன்சார்டியம் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுத்தரவு களின் அடிப்படையில் கூறியுள்ளனர். 50 ஆயிரம் பேரிடம் செய்த மரபணுரீதியான சோதனைகளில் குடிநோய் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு மரபணு முக்கிய பங்காற்றுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

‘எட்டில் ஒரு அமெரிக்கருக்கு குடிநோய் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படுகிறது’ என்கிறார் வாஷிங்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளரான அர்பனா அக்ராவால். இதில் முழுக்க மரபணுக்களை மட்டும் குறை கூறாமல் ஒருவரின் சூழல்களையும் முக்கியமானதாகக் கூறியுள்ளது ருசிகரசெய்தி. எட்டு நாடுகளில் 28 விதமான மரபணு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் இதற்காக செய்துள்ளனர்.

ஆய்வுப்பணிகள் சாதாரணமல்ல; சிஸோபெரனியா முதல் மனச்சோர்வு வரையில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான மரபணு மாதிரிகளை ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வுகளைத் தொடர்ந்து வருகின்றனர். “ADH1B எனும் மரபணு பெரும்பாலான மக்களின் மனநல பிரச்னைகளுக்கு காரணம் என கண்டறிந்துள்ளோம். ஆனால் இது இறுதியான ஆய்வு முடிவல்ல” என்கிறார் ஆராய்ச்சியாளர் அர்பனா.