ஒரு படம் ஒரு ஆளுமைland of silence and darkness (1971)

இதுவரைக்கும் நாம் அனுபவித்திராத துயரங்களும்,வலிகளும் நிறைந்த ஒரு வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறது பினி ஸ்டிராபெங்கரின் தனிமை.  பினி, குழந்தையாக இருக்கும்போது படிகளிலிருந்து தவறி விழுந்து கண்பார்வையையும் காதுகேட்கும் திறனையும் இழந்து விடுகிறார். நம்பிக்கையிழந்த பினி 30 ஆண்டுகள் வீட்டிலேயே தனித்திருக்க, அம்மா மட்டுமே பினிக்கு ஆதரவு.

பின் தன்னையொத்த மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து பேசி புத்துயிர் பெறுகிறார். ‘‘யாராவது என் கைகளைப் பிடித்து தொடுமொழியில் என் மனதோடு பேசும்போது என்னருகில் அவர்கள் மிக நெருங்கியிருப்பதை உணர்கிறேன்.

படுக்கையில் இருந்தபோது என்னைப் பார்க்க வருவதாகக் கூறியவர்கள் யாருமே வர வில்லை. என்னைப் போன்ற சகமனிதர்களைச்  சந்தித்துப் பேசுவதிலும் உதவு வதிலும் என் வாழ்க்கைக்கான அர்த்தத்தை  உணர்கிறேன்’’ என்பது பினியின் கருத்து.

மாற்றுத்திறனாளியான கென்ரிச்சை பின்னாளில் சந்திக்கிறார். 35 வயதுவரை பார்வையுள்ள கென்ரிச்சுக்கு பின்னாளில் கண், காது செயலிழக்க அவரின் குடும்பம் ஒதுக்கி வைக்கிறது.

குடும்பத்தையும், சமூகததையும் விலக்கி ஐந்து ஆண்டுகளாக தொழுவத்திலுள்ள மாடுகளுடனும், பறவைகளுடனும், மரங்களுடனும் பேசி, உறவாடியபடி வாழ்ந்து வருகிறார் கென்ரிச். அவர் வீட்டைவிட்டு வெளியே மெதுவாக நடந்து வந்து ஒரு மரத்தை வாஞ்சையுடன் தொடுவார். கொஞ்ச நேரம் அந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியையும்,இலையையும், கிளைகளையும் வருடுவார். இந்தக் காட்சியும், அந்த உணர்வுகளும்,பின்னணியாக ஒலிக்கும் இசையும் தரும் திரை அனுபவம் அற்புதமானது.

மனிதன் தன்னை மறந்து இயற்கையுடன் அன்னியோன்யமாக தன்னை கரைத்துக்கொள்வதே அக்காட்சி. உணவு, குளியல், பயணம், பேச்சு போன்றவை கூட மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் எவ்வளவு கடினமானதாக உள்ளது என்பதை ஜோர்க் ரெய்ட்வெய்னின் கேமரா, தன்னுடைய மென்மையான நகர்வின் ஊடே நமக்கு துல்லியமாக உணர்த்துகிறது‘‘நாங்கள் எல்லோருடனும் பேச விரும்பு கிறோம்; எங்களுடன் உரையாடுங்கள்.

நாங்களும் உங்களை மாதிரிதான்; எங்களை தனிமைப்படுத்தாதீர்கள், எங்களின் தனிமையில் இருந்து விடுதலை செய்யுங்கள்...’’ என்பதே பினியின் மூலம் புகழ்பெற்ற ஜெர்மன் இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் கூறவிரும்பும் கருத்து.

(நிறைந்தது)