இந்தியாவின் பசுமைப் போராளிகள்!



அபிஷேக்ரே  

உத்தர்காண்ட் மாநிலத்தில் சிதாபனி என்ற காட்டினை உருவாக்கியுள்ள அபிஷேக்ரே, பாலிவுட் இசையமைப்பாளரும்கூட. 350 க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழிடமாக இக்காட்டினை தன் சொந்த சேமிப்பை கரைத்து உருவாக்கியுள்ளார் அபிஷேக்.

“கார்பெட் தேசியப்பூங்காவில் விவசாயத்திற்காக வனப்பரப்பு அழிந்துவருவதும், புலிகளின் எண்ணிக்கை இதனால் குறைந்ததும் என்னை காடு வளர்ப்புக்கு தூண்டிய முக்கிய காரணிகள்” மலர்ச்சி பெருக பேசுகிறார் அபிஷேக்.

இந்தியாவுக்கான மரவகைகளான ஆலமரம், மாமரம் ஆகியவற்றை விதைத்தவர்,  புலிகளின்  எண்ணிக்கையை யும் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார். இரைச்சல், ஒளி ஆகியவற்றை அனுமதிக்காமல் தன் உழைப்பிலான வனப்பரப்பைக் காத்துவருகிறார் அபிஷேக்.
 
சமீர் மஜ்லி  

கர்நாடகாவின் பெல்காமைச் சேர்ந்த சமீர் மஜ்லி, தொழில் ரீதியாக வேலைவாய்ப்பு ஆலோசகர் மற்றும் கல்வியாளர் என்றாலும் கிரீன் சேவியர்ஸ் அமைப்பு அவரை சூழல் வட்டாரத்தில் பிரபலப்படுத்தியது.

” கடந்தாண்டு ஏப்ரல் 10 அன்று நாங்கள் நட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளில் 75 சதவிகித மரக்கன்றுகள் பிழைத்துள்ளன.ஆறு இடங்களில் சிறுகாடுகளை உருவாக்கியுள்ள எங்கள் அமைப்பு, மரக்கன்றுகளை பராமரிப்பது மட்டுமல்லாது வளராத மரக்கன்றுகளுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை விதைத்து வருகிறோம்” என்கிறார் கானுயிராளர் சமீர் மஜ்லி.  

18 அடி இடைவெளியில் 10 ஆயிரம் ச.அடியில் 300 மரங்களை ஜப்பானிய மியாவகி முறையில் விதைத்துள்ளது சமீர் மஜ்லி குழு. “பெல்காமில் 2015 ஆம் ஆண்டு பஞ்சம் வந்தபோது மரங்களுக்கான பாதுகாப்பு இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டது. அப்போது நாங்கள் பல்வேறு தொழிற்சாலைகள், பள்ளிகளுக்கு உள்ளேயே மரக்கன்றுகளைப் பயிரிடுவதை ஊக்குவித்தோம்” என்பவர் இந்தியரக பழமரங்களையும் அதிகம் விதைத்து வருகிறார்.
 
அப்துல் கரீம்  

1977 ஆம் ஆண்டு கேரளாவின் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் பரப்பா அருகிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை ரூ.3,750 க்கு வாங்கினார். அப்போது அங்கு நீர்,மரம்,பறவை என ஏதுமில்லை. ஆனால் 41 ஆண்டுகளுக்குப் பிறகு 32 ஏக்கரில் அங்கு மக்களே பிரமிக்கும்படி வனத்தை  உருவாக்கியுள்ளார் அப்துல் கரீம். இருநாட்கள் தன் மரங்களை விட்டு பிரிந்தால் கூட முகம்வாடி விடும்  அன்புமனம் கொண்டவர் அப்துல் கரீம்.
 
சுபேந்து சர்மா  

உத்தர்காண்ட் மாநிலத்தில் 700 ச.அடியில் 234 மரங்களை விதைத்து பராமரித்து வரும் பொறியாளர் சுபேந்து சர்மாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகி. “200 ச.அடியில் கூட காடுகளை வளர்க்கமுடியும். இதற்கான ஆலோசனைகளை குறைந்தவிலையில் நாங்கள் வழங்குகிறோம்.” என்கிறார் சுபேந்து சர்மா.
 
ஷியாம்சுந்தர் பலிவால்  

ராஜஸ்தானின் பில்பாந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷியாம், கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண்குழந்தைக்குக்கும் தலா  111 மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதோடு கேரளாவின் கல்லன் பூக்குடன், ஜெய்ப்பூர் ஷியாம் சுந்தர் ஜியானி, மங்களூர் ராஜேஷ் நாயக், சென்னை லோகநாதன், ஆந்திராவின் பப்லு கங்குலி, மேரி வட்டம்தனம் மற்றும் ஜான் டி சூசா ஆகியோர் இந்தியாவின் பசுமைக்கு துணை நிற்கின்றனர்.

விக்டர் காமெஸி