ஓவியத்தில் டூப்பு எது?



வரலாற்று சுவாரசியங்கள் 15

லண்டனில் பிறந்த எரிக் ஹெப்பர்ன், சிறுவயதிலேயே படு சுட்டி. எதில்? குறும்பு செய்வதில்தான். ஹோம்வொர்க் கொடுத்த பள்ளி மீது வெறுப்பு ஏற்பட பள்ளிக்கட்டிடத்திற்கு தீவைத்துவிட, சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். எத்தனை குறும்புகள் செய்தாலும்  ஓவியம் வரைவில் ஈடு இணையவற்றவனாக இருந்ததால் ஆசிரியர்களும் எரிக்கை மன்னித்தனர்.

ராயல் அகாடமி பள்ளியில்   இடம் கிடைக்க,  அங்கே வெள்ளிப்பதக்கம் பெற்று படித்த எரிக் பின் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தார். ஜார்ஜ் ஏக்ஜெல் என்பவரின் உதவியாளராக பணிபுரிந்தபோது ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு 1997 ஆம் ஆண்டு ‘கலைத்திருடர்களின் கையேடு’ என்ற நூலை எழுதினார். இதில் ஓவியத்தை திருட்டுத்தனமாக நகலெடுத்து எப்படி உலகை ஏமாற்றுவது என விவரித்திருந்தார்.

சர். அந்தோணி பிளண்ட் என்ற மேட்டுக்குடி என்பவர் எரிக்கின் போலி ஓவியங்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்து பின்னாளில் உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட இவரின் நல்ல பெயரும் போய் எரிக்கின் ஓவியங்களின் தரமும் கெட்டது. பின்னர் இத்தாலிக்குச் சென்ற எரிக், போலி ஓவியங்களோடு  வெண்கலச்சிலைகளையும் வடிக்கத் தொடங்கினார்.  போல்டினி, டேவிட் ஹாக்கனி ஆகிய பிரபலங்களின் ஓவியங்களை போலியாக்கி விற்பனைக்கு வைக்க பல்வேறு அருங்காட்சி யகங்களுக்கும் எரிக்கின் ஓவியங்கள் சென்றன.

ஏராளமாக கிடைத்த பணத்தால் கோடீசுவரரானார் எரிக். கால்னகி என்ற விமர்சகர் 1978 ஆம் ஆண்டு எரிக்கின் ஓவியங்கள் போலி என்று பத்திரிகையில் எழுத, இதற்கு பதிலடியாக தன் சுயசரிதையை எரிக் 1991 ஆம் ஆண்டு எழுதினார். இதில் ஓவியங்களில் போலி கிடையாது என்ற பொன்மொழியோடு விமர்சகர்களை வசைபாடினார். 1996 ஆம் ஆண்டு ரோம்நகர வீதிகளில் திடீரென மண்டை பிளக்கப்பட்டு இறந்து கிடந்தார் ஓவியர் எரிக்.      

பொக்கிஷத் திருடன்!

ஹாலந்திலுள்ள டேவென்டர் நகரில் 1889 ஆம் ஆண்டு பிறந்த ஹான்வான் மீக்ரென் சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் பாயும் புலி. முப்பது வயதிற்குள்ளாகவே இரண்டு கண்காட்சிகள் நடத்திவிட்ட மீக்ரெனை விமர்சகர்கள் வறுத்து எடுத்ததால் பதினேழாம் நூற்றாண்டு ஓவியங்களை போலி செய்யத்தொடங்கினார். வண்ணங்கள் தொடர்பான பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு டெர்போர்ச், ஹால்ஸ், வெர்மீர் ஆகிய ஓவியர்களின் படைப்புகளை விற்று பணம் சம்பாதித்தார் மீக்ரென்.

ஹாலந்து ஜெர்மனியிடமிருந்து விடுதலை பெற்றவுடன் பொக்கிஷங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டி மீக்ரெனை அரசு வழக்கு, விசாரணை என இழுத்தடிக்க, இதன் விளைவாக மன உளைச்சலுக்குள்ளாகி இறந்தார் மீக்ரென்.   

கவிதை குண்டர் தாமஸ்!

பதினைந்தாம் நூற்றாண்டு கையேடுகளைப் பார்த்து கவிதை எழுதி கவிஞராக நிரூபணமானவர் தாமஸ் செஸ்டர்டன். பள்ளி ஆசிரியரின் மகனான இவர் பத்து வயதிலேயே ஃபீல்டுக்கு வந்துவிட்டார். சர்ச்சில் பாதிரியாராக இருந்த மாமா மூலம் பல்வேறு பழைய ஆவணங்கள் கிடைக்க அப்படியே எழுதி தன் பெயரை கீழே போட்டுக்கொண்டு செலிபிரிட்டியானார் தாமஸ்.

தாமஸ் ரௌலியின் கவிதை மற்றும் கட்டுரைகளை தன் பெயரில் பத்திரிகைகளில் எழுதியவர், லண்டனுக்கு சென்றபோது மாட்டிக்கொண்டார். முன்னணி எழுத்தாளர்கள் தாமஸை போலி எழுத்தாளர், கவிஞர் என திவிர பிரசாரம் செய்ய, விஷம் குடித்து பதினேழு வயதில் தற்கொலை செய்துகொண்டார் தாமஸ். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஜான் கீட்ஸ் ஆகியோர் தாமஸைப் புகழ்ந்து பேசியது பின்னர் நடந்தது.

(அறிவோம்)

ரா.வேங்கடசாமி