ஆபரேஷன் சன்!



வரும் ஜூலை 31 அன்று கென்னடி விண்வெளி மையத்தில் இதுவரை செய்யாத சாதனையை நிகழ்த்தப்போகிறது நாசா. பல்வேறு கோள்களை ஆராய்ந்த நாசா, அடுத்து  ஆராயப்போவது சூரியனைத்தான்.

பார்க்கர் என பெயரிடப்பட்டுள்ள நாசாவின் ஆளில்லாத விண்கலம் சூரியனை நோக்கிச்  செல்ல விருக்கிறது. ஏழு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த திட்டம் வெற்றியடைந்தால் சூரியனில் நிகழும் வேதிவினைகளையும், பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் பற்றிய புத்தம் புதிய செய்திகளையும் அறியலாம்.   

2024 ஆம் ஆண்டு சூரியனை 6.3 மில்லியன் கி.மீ தூரத்தில் நெருங்கும் பார்க்கர் விண்கலம், வெப்பத்தையும்  கதிர்வீச்சையும் தாங்க 11.5 செ.மீ தடிமனுள்ள கார்பன் கவசத்தைக் (தாங்கும் சக்தி 2500 டிகிரி செல்சியஸ்) கொண்டுள்ளது. இயற்பியலாளர் யூஜென் பார்க்கர் பெயரிடப்பட்ட இவ்விண்கலத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், நாசாவுடன்  இணைந்து  தயாரித்துள்ளது.

சூரியனுக்குச்  செல்லும் முதல் விண்கலம்  என்பதால்,   உலகெங்கும்  உள்ள  மக்கள் தங்கள் பெயரை எழுதி அனுப்பவும் நாசா கேட்டுக் கொண்டுள்ளது. பெயர்களை மைக்ரோசிப்பில்  பொறித்து  விண்கலத்தில்  இணைத்து  சூரியனுக்கு அனுப்புவது திட்டம். விண்வெளியிலும் வெற்றிக்கொடி நாட்டுவோம்.