“என் மகனைக் கொன்றவர்கள் மனிதர்களே அல்ல!”



முத்தாரம் நேர்காணல்

நேர்காணல்:
இம்தாதுல்லா ரஷீதி, நூரானி மசூதி இமாம்
(அசன்சோல்)


மேற்கு வங்கத்தின்  அசன் சோல் நகரில் நடைபெற்ற ராம நவமி விழாவின்போது சிப்துல்லா என்ற பத்தாம் வகுப்பு மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கத் துடித்த தன் உறவினர்களை இறந்த சிப்துல்லாவின் தந்தையும் மசூதி இமாமுமான இம்தாதுல்லா ரஷீதி தடுத்துள்ளது நாடெங்கிலும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
 
உங்கள் மகனின் படுகொலைக்குப் பின்னே யார் உள்ளனர்?  

போலீசில் புகார் கொடுத்துள்ளோம். என் மகனைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே அல்ல.
 
நிலைமையை எப்படி சமாளித்தீர்கள்?  

எனது மகன் படுகொலை செய்யப்பட்டதும் எங்கள் சமூகத்தில் கடுமையான எதிர் வினை உருவானது. நமாஸ் செய்தபின் அனைவரையும் ஓரிடத்தில் அழைத்துப் பேசினேன். யாரேனும் பழிக்குப்பழி என இறங்கினால் நான் அசன்சோல் நகரை விட்டுச் சென்றுவிடுவேன் என எச்சரித்ததோடு, இஸ்லாம் ஈவிரக்கமற்ற கொலைகளையும் தாக்குதல்களையும் ஏற்றுக் கொள்வதில்லை என அறிவுறுத்தினேன். கோபத்துடன் இருந்தவர் களில் பெரும்பாலோர் எனது மாணவர்கள். முதலில் அழுதவர்கள் பின் எனது அறிவுரையைக் கேட்டு அமைதியாக வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
 
உங்கள் மகன் சிப்துல்லா உடல் எப்படி மீட்கப்பட்டது?  

நான் சிப்துல்லாவின் சிதைந்துபோன உடலைப் பார்க்கவில்லை. அவனின் கோர மரணம், என்னை கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியது. என் நான்காவது மகனான சிப்துல்லா, பத்தாம் வகுப்பு தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நேரத்தில் நேர்ந்த கொடூரம் இது.

அமைதிக்காக இறைவன் வேண்டினால் என் பிள்ளைகளைப் பலியிடவும்  தயாராக  இருக்கிறேன். ஆனால் அதற்காக  அப்பாவிகள் இறப்பதில் எனக்கு சம்மதமில்லை. என் மகனைக் கொன்றவர்களை நாங்கள் தண்டிக்க மாட்டோம். இறைவன் பார்த்துக்கொள்வான்.
 
மகனின் கொலைக்குக்  காரணமானவர்கள் உள்ளூர்க்காரர்களா?  

இல்லை. நான் அப்படி நம்பவில்லை. அசன்சோலில் முப்பது ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.  இப்பகுதியிலுள் ளவர்களை  நான் நன்கு அறிவேன்.  எனது  தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர். பூர்வீகம் பீகாராக  இருந்தாலும்  இங்கே வசிக்கத் தொடங்கியதிலிருந்து பல்வேறு சமுதாயத்தினரும் உறவினர்கள் போல் பழகி வருகிறோம். அன்பையும் தேசபக்தியையும் மதம் கடந்து எனது மாணவர்களுக்கு போதித்து வருகிறேன்.

- Rabi Banerjee, the Week

தமிழில்: ச.அன்பரசு