தி ரெட் பலூன்



ஒரு படம் ஒரு ஆளுமை

எந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தையாவது திரும்பப் பெற்றுத்தருகிற சில படங்களில் முக்கியமானது ‘தி ரெட் பலூன்’.பாரிஸ் நகரில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கே வசித்து வரும் சிறுவனுக்கு சிகப்பு பலூன் ஒன்று கிடைக்கிறது. நாளடைவில் பலூனும் அவனும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.

பள்ளி, வீடு, கடைவீதி என்று சிறுவன் செல்லும் எல்லா இடங்களுக்கும் பலூனும் உடன் வருகிறது. இதைப் பார்க்கும் மற்ற சிறுவர்கள் அவன் மீது பொறாமையாகி, பலூனை அபகரித்துக் குரூரமாக காலால் மிதித்து உடைத்து விடுகின்றனர். தன்னுடைய நண்பனை இழந்த சிறுவன் கதறி அழுகிறான்.

அவனின் அழுகையைக் கேட்டு  நூற்றுக்கணக்கான வண்ணமயமான பலூன்கள் கூட்டாகக் கிளம்பி அவன் இருக்கும் இடத்தை நோக்கி வானில் பறந்து வருகின்றன. அந்த பலூன்கள் வானத்தை நோக்கி அவனைத் தூக்கிச் செல்வதோடு படம் நிறைவடைகிறது .கேன்ஸ், ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருது களைப் பெற்றுள்ள இக்குறும் படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்.

ஹயோ மியாசகி

இவ்வுலகிலிருந்து வேறொரு உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று அங்கே வாழ்வதைப் போன்ற ஒரு அனுபவத்தைத் தருபவை ஹயோ மியாசகியின் அனிமேஷன் திரைப்படங்கள்.‘அனிமேஷன் உலகின் கடவுள்’ என்று ஜப்பானிய ரசிகர்களால் கொண்டாடப்படும் மியாசகி,  77 வயதிலும் அசராமல் படங்களுக்கு ஆக்‌ஷன், கட் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மனித உணர்வுகளையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் ஆழமாக சித்தரிக்கின்றன மியாசகியின் படங்கள். இவரது படங் களில் கிராஃபிக்ஸ் பணி 10 சதவீதத்திற்கும் குறைவு. காட்சிகளின் நிஜத்தன்மைக்காக ஒவ்வொரு ஃப்ரேமையும் ஓவியமாகவே கைகளில் வரைகிறார். படத்தின் ஹீரோ குழந்தைகள்தான். தான் நேரில் சந்தித்த மனிதர்கள், தன் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் படத்தில் பாத்திரங்களுண்டு.

‘‘குழந்தைகளை நேசிக்கிறேன்; அந்த நேசத்தின் வெளிப்பாடாக அவர்களை மகிழ்விக்க திரைப்படங்களை எடுக்கிறேன்’’ என்கிற மியாசகியின் படங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பூங்கொத்து. மியாசகியின் முக்கியமான படங்கள்: Spirited Away (2001), Princess Mononoke (1997), My Neighbor Totoro (1988),Ponyo (2008), Castle in the Sky (1986)