“சமூகவலைத்தளங்களில் உண்மையைக் கண்டறிவது மிகச் சிரமம்!’’



நேர்காணல்:
டோனி ஹால்,
பிபிசி நிறுவன இயக்குநர்.

தமிழில்: ச.அன்பரசு


பிபிசியில் பணிபுரிந்த டோனி ஹால், 2013 ஆம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில்  இயக்குநராக மீண்டும் பணியில் இணைந்துள்ளார். 1973 ஆம் ஆண்டில் பிபிசியில் நியூஸ் ட்ரெய்னியாக பணியில் இணைந்தவர்,  பிபிசி ஆன்லைன், பிபிசி பார்லிமெண்ட், பிபிசி ரேடியோ 5 லைவ் ஆகியவற்றை தொடங்கிய சாதனையாளர்.

நியூயார்க் டைம்ஸ் இயக்குநர் அண்மையில் அச்சு  ஊடகத்தின் எதிர்காலம் பத்தாண்டுகள் என்று  கூறியிருக்கிறார். பிபிசிக்கு  அச்சு ஊடகம் இல்லை.
பத்திரிகைகள் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?  அச்சு ஊடகம் காணாமல் போகும்  என்று  நான் நம்பவில்லை. மக்கள் முதலில் ரேடியோ, அடுத்து சினிமா சாகும் என்றார்கள். இன்று என்னாயிற்று? மார்க் தாம்சனின் கருத்தை எங்களுடைய பிஸினஸ் மாடலுக்கு பொருத்தமுடியாது.

ஆனால் தரம் வெல்லும். அச்சு ஊடகம் சரிந்தால், நாம் வேறு வழியைத் தேர்ந்தெடுப்போம். மக்களிடம் நடத்திய சர்வேயில் பல்வேறு செய்தித் தளங்களை செக் செய்து இறுதியாக பிபிசி வந்து உண்மையான தகவல்களை அறிகிறோம் என்றார்கள். தரமான செய்திச்சேவை வெல்லும்,  அதேசமயம்  காலந்தோறும் சந்திக்கும்  சவால்களை குறைத்து மதிப்பிட முடியாது.
 
உலக நாடுகளிலுள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலேயே மக்களை எந்த  ஊடக  இடைமுகமின்றி சந்திக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்? 

சமூக வலைத்தளம் நீங்கள் விரும்பும் செய்திகளை ஒத்த  விஷயங்களை தன் அல்காரிதம்  மூலம் தேர்வு செய்து அளிக்கிறது. சமூக வலைத்தளம் மக்களுக்கு அளிப்பதைத் தாண்டிய விஷயங்களை நாங்கள் கவனப்படுத்தி தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். சமூகவலைத்தளம் பல்வேறு செய்திகளை வெளியிடுகிறது என்றாலும்  உண்மையை யார் கூறுகிறார்  என்பதை அறிவது மிகக் கடினம். எ.கா. பிரெக்ஸிட் விவகாரத்தில் சமூகவலைத்தளத்தில் வெளியான கருத்துகள்.
 
இந்தியாவில் குறிப்பிட்ட இனக்குழு மீது வெறுப்பு பரப்பப்பட்டு வரும் சூழலில் ஊடகங்கள் எப்படி செயல்படவேண்டும் என்று  நினைக்கிறீர்கள்? 
பிபிசி எந்த பிரச்னையிலும் சார்புநிலை எடுப்பதில்லை. அதாவது பாரபட்சமற்ற பார்வை. நீங்கள் ஒரு பத்திரிகையாளராக பிளவுபட்ட உலகில் பணியாற்றும்போது  கோபமுற்ற, நிராதரவாக உள்ள மக்களிடம் கோபப்படக்கூடாது.

ஒரு பிரச்னையில் பல்வேறு கருத்துகளைக் கொண்டவர்களை பிரதிபலிக்க முயற்சிக்கலாம்.  நாம் ஒவ்வொரு வரும் நமக்கான பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கிறோம். அடுத்தவரின் கருத்தைக் கேட்க எல்லைகளைக்  கடந்து வரவேண்டும்.  கடினமாக இருந் தாலும் நாம்  செய்யவேண்டியது  இதுவே.
 
ஃபேஸ்புக் தனது அல்காரிதம் மூலம் பார்வையாளர்களையும் செய்திகளின் உள்ளடக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? 

எங்கள் இயக்குநர் குழுவிலும் பயனர் டேட்டாவை சேகரிக்க குழு ஒன்றை நியமித்துள்ளோம். ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் நோக்கமும் பயனர் குறித்த டேட்டாதான். பிபிசியின் எதிர்காலமும்  அதைப்பொறுத்தே அமையும்.  இங்கிலாந்தில் பிபிசி பயனர்களைப்  பற்றிய  தகவல்கள் எங்களை  சிறப்பாக  தகவமைத்துக்கொள்ள உதவும்.
 
பிபிசியில் பெண் ஊழியர்கள் சம்பளக்குறைவு குறித்த புகார்களை எழுப்பினார்களே? 

2020 ஆம் ஆண்டுக்குள் உயர்மட்ட குழுவிலும், டிவி யிலும் பெண்கள்- ஆண்கள்  சம்பள விகிதம் சமமாக இருக்கும். கடந்த  ஆண்டு எங்கள் தொகுப்பாளர்களுக்கு  கொடுத்த  சம்பள  விவகாரத்தை  குறிப்பிடுகிறீர்கள். அவர் களில்  பலரும்  ஆண்கள் என்பது உண்மை. பிபிசியில் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. அவர்களை நான் பெறும் சம்பளத்தோடு ஒப்பிடுவது எப்படி சரியானதாகும்? பாலின தீண்டாமை இன்றி பிபிசி செயல்படுவதே எனது விருப்பம்.

நன்றி: Seema Chishti, IndianExpress.com