ராஜ் கர்மானி



தலைவன் இவன் ஒருவன் 19

உணவு வீணாவதைத் தடுக்க ஆன்லைன் இணையதளம் தொடங்கிய, ஏழை மக்களின் பசி தீர்க்க உழைக்கும் தன்னிகரற்ற தலைவர்களில் ஒருவர்.  இலினாய்ஸ் பல்கலையில் இளங்கலை கணினிப்பட்டம் பெற்ற ராஜ், தன் வீட்டருகிலுள்ள  பிரெட்  கடையின்  தினசரி வாடிக்கையாளர்.

அங்கு சரியான சைஸ் வராமல் குப்பைக்குச் செல்லும்பிரெட்துண்டுகளைப் பார்த்து அதிர்ச்சியானவர் அப்பிரச்னையைத் தீர்க்க முடிவெடுத்தார். 2013 ஆம் ஆண்டு ராஜ் தொடங்கிய ZeroPercent இணையதளம் இன்று ஆயிரம் நபர்களுக்கும் மேல் பசியைத் தீர்த்துவருகிறது. மொபைல் ஆப்பில் இணையும் ஹோட்டல்

களில் வீணாகும் உணவின் அளவைக் குறிப்பிட்டால் போதும்; ராஜ் கர்மானியின் தன்னார்வ ஊழியர்கள் உணவைப்  பெற்றுச்செல்லும்  வசதி ஜீரோ பர்சென்ட்டில் உண்டு.  “பசியால் வாடும் மக்கள் என்பது உலகில் பலரும் பார்க்க மறந்த அமெரிக்காவின் மறுபக்கம்.

பசியாறும் மக்களில் பலருக்கு ஸ்ட்ராபெரி என்றாலே என்னவென்று தெரியாது”  என தீர்க்கமான குரலில்  உரையாடுகிறார் ராஜ் கர்மானி. பாகிஸ்தானிலிருந்து படிக்க வந்தவர், இன்று  உலகிற்கு  பசியாற்றும் பணியை நண்பர் களோடு இணைந்து செய்துவரு கிறார். பிஹெச்.டி படிக்கும்போதே  ஜீரோ பர்சென்ட் தளத்திற்கான  ஐடியாவை செயல்படுத்தத் தொடங்கி விட்டார் கர்மானி.

“ஹோட்டல் களைப் பொறுத்தவரை, பசிக்கு உணவிடுவதை விடகுப்பையில் தூக்கியெறி என்றே சிம்பிளாக பெரும்பாலும் ஊழியர்களுக்கு அறிவுறுத்துகின்றன. நாங்கள் அவர்களிடம் பேசி, வீணாகும் உணவைப் பெறுகிறோம். இதில் வருத்தப்பட, வெறுக்க ஏதுமில்லை” என பக்குவமாகப்  பேசுகிறார் கர்மானி. சிகாகோ நகரில் உணவு வீணாவதைத் தடுக்க முயற்சி  எடுத்து வரும்  ஜீரோ பர்சென்ட்  குழு, பொருட்கள் வாங்குவதைப் பற்றி விழிப்புணர்வு செய்கிறது.

அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 22 பில்லியன்  மதிப்புள்ள உணவு வீணாகிறது. இதன் மூலம் பசியால் வாடும் 49 மில்லியன் மக்களுக்கு உணவிடமுடியும். “பட்டினி பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றல்ல. தேவையைப் பொறுத்து தொடர்ச்சியாக செயல்பட்டால் போதும்” என உறுதியான குரலில் பேசுகிறார் கர்மானி. 

ஃபார்மர்ஸ் ஃபிரிட்ஜ் நிறுவனம், உணவை ஏழை மக்களுக்கு  வழங்க  எந்திரங்களை வழங்கியுள்ளது. இதற்கான உணவுப்  பொருட்களுக்கு மாதம் 250 டாலர்களை ஜீரோபர்சென்ட் அமைப்புக்கு செலுத்து கிறது. உணவாகவும், பணமாகவும் பெற்று ஏழைகளுக்கு உதவு வதற்கு ஜீரோ பர்சென்ட்  தற்போது முழுவீச்சில் ரெடியாகி வருகிறது.

பகதூர் ராம்ஸி