ரஷ்யாவின் சீக்ரெட் ரேடியோ!ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகிலுள்ள சதுப்புநிலத்தில் துருப்பிடித்த இரும்பு கேட்டை திறந்தால் தெரிவது பாழடைந்த ரேடியோ ஸ்டேஷன். பனிப்போர் காலத்தில் செயல்பட்டு வந்த ரேடியோ ஸ்டேஷனின் பெயர் “MDZhB”. 24X7 என ஆல்டைமும் மோனோடோன் கேட்கும்; திடீரென கப்பலின் ஹார்ன் ஒலி இடையில் வந்துபோகும். அறிவிப்பாளர்களின் சில குரல்களைத் தாண்டி இப்படித்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த ரேடியோ ஸ்டேஷன் வேலை செய்து வருகிறது. 4625 kHzஒலியலையில் ரேடியோ குமிழைத் திருகினால் ரஷ்யாவின் சீக்ரெட் ரேடியோவைக் கேட்கலாம். 1982 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் ரேடியோ இது. ஆனால் எதற்காக இயங்குகிறது என்பது பலருக்கும் தெரியாது.

சோவியத் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான செய்திப் பரிமாற்றத்துக்கு பயன்பட்ட ரேடியோ இது. Buzzer என அழைக்கப்படும் இந்த ரேடியோ சிற்றலையில் இயங்கக்கூடியது. H அலைகளை விட SF அலைகள் ஜிக்ஜாக் வடிவில் பல்லாயிரம் கி.மீ தூரம் பயணிக்க கூடியது என்பதே. எ.கா: லண்டனிலிருந்து சிற்றலையில் ஒளிபரப்பாகும் பிபிசி ரேடியோவை பல்வேறு நாடுகளில் கேட்க முடியும். ராணுவத்தினரின் SF அலைகளை விமானம், கப்பல் உள்ளிட்டவற்றில் செய்திகளை அனுப்ப பயன்படுத்துகிறார்கள்.

Arcos எனும் ரஷ்யாவின் ஏற்றுமதி இறக்குமதி அமைப்பின் லண்டன் அலுவலகத்தில் பல்வேறு ரகசிய செயல்பாடுகள் நடைபெறுவதை மோப்பம்  பிடித்த  இங்கிலாந்து  போலீஸ் ரெய்டில் பல்வேறு ரகசிய அறைகளைக் கண்டுபிடித்தது. முக்கிய ஆவணங்களை ரஷ்யர்கள் முன்னதாகவே எரித்துவிட்டதால் போலீசுக்கு உருப்படியான விஷயங்கள் அங்கு எதுவும் தேறவில்லை. ஆனால் ரஷ்யர்கள் அதன்பிறகு செய்திகளை அனுப்புவதில் அப்டேட்டாகி விட்டார்கள். ரகசிய செய்தியை ரேடியோ வழியாக உலகெங்கும் அனுப்புவது அப்படித்தான் தொடங்கியது.

இந்த செய்திகளையும் அலசி கண்டுபிடிக்கும் அசகாய  கோடிங் பில்லாக்கள் ஊரில் இல்லாமலா? அமெரிக்காவில் 2010 ஆம் ஆண்டு 7887Khz அலைவரிசையில் செய்திகளைப் பெற்ற ரஷ்ய ஏஜெண்டுகளை அமெரிக்க போலீஸ் கைது செய்தது. ஏப்ரல் 14, 2017 அன்று இதே தொன்மையான முறையை வடகொரியா இன்றும் ஃபாலோ செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

- விக்டர் காமெஸி