கரோலின் லூகாஸ்பசுமை பேச்சாளர்கள் 22

இங்கிலாந்தைச் சேர்ந்த கரோலின் லூகாஸ், பசுமைக்கட்சியின் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினராக பல்வேறு சூழல் கேடான தொழில் திட்டங்களுக்கு எதிராக போராடிவரும் பெண்மணி. 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வோர்செஸ்டர்ஷ யரில் மால்வெர்னில் பிறந்த கரோலின், 1989 ஆம் ஆண்டு எக்சிடர் பல்கலையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பசுமைக்கட்சியில் செயல்படத் தொடங்கிவிட்டார் கரோலின். 2008 ஆம் ஆண்டு பசுமைக் கட்சியில் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

பசுமைப் பொருளாதாரம், உள்நாட்டுத் தொழில்கள், விலங்குகள் நலம், உலகமயத்துக்கு மாற்று ஆகியவற்றுக்கான தேடல்களில் மக்களுக்கான நலன்களை பெற்றுத்தர முயலும் பசுமை உள்ளம்  இவருடையது. Seeing Green -Jonathon Porritt  என்ற புத்தகம்தான் கரோலின் பசுமைக்கட்சியில் சேர்ந்து  போராட்டங்களை நடத்த சூப்பர் இன்ஸ்பிரேஷன். 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி சார்ந்த பசுமைக்கட்சியின் பிரதிநிதியான கரோலின், நவம்பர் 2001 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தின் ஃபாஸ்லேன் அணு உலைக்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்தியதற்காக 150 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டாலும் பல்வேறு நிகழ்வுகளில் முனைந்து போராடி மக்களின் நம்பிக்கை பெற்றவர்.

“அமைதிப் போராட்டம், பொது அமைதிக்கு ஆபத்து என அரசு சொல்வதே நகைமுரண்” என ஆக்ரோஷமாக அரசை விமர்சிக்கும் துணிச்சல் கரோலினின் தனிச்சொத்து. தற்சார்பு பொருளாதாரம், சூழல் பிரச்னைகளைக் குறித்து தொடர்ச்சியாக 
கட்டுரைகள் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வை விதைத்து வரும் கரோலின் சிறந்த அரசியல்வாதி விருதை 2007, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வென்று சாதித்தவர். 

இங்கிலாந்தில் அனைத்து மக்களுக்குமான அடிப்படை வருமானத்திற்கான திட்டத்தை செயல்படுத்த குரல் கொடுக்கும் சமூகத்தின் மாற்றுக்குரல். “வாக்களிக்கும் வயதை 16 என்றாக்கி  இளைஞர்களை அரசியலுக்கு இழுப்பது  எதிர்கால உலகிற்கு நன்மை தரும்.

இன்று பல்வேறு அரசியல் பிரச்னைகளில் இளைஞர்கள் மிகவும்  விலகி  நிற்பது  சரியல்ல. எனவே இளைஞர்கள் அரசியலுக்கு வந்து போராடி னால் மட்டுமே நம் வாழ்வை நாம் மீட்க முடியும்” என ஆத்மபூர்வமாக பேசுகிறார் கரோலின் லூகாஸ்.