இளைஞரை பழிவாங்கிய ரஷ்யா!



மர்மங்களின் மறுபக்கம்  41

1945ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சோவியத்தின் ரேடியோ செய்தியைக் கேட்டு வாலன்பெர்க்கின் நண்பர்கள் ஷாக் ஆனார்கள். என்ன செய்தி அது? 

‘‘ஸ்விஸ் நாட்டுப் பிரதிநிதி யான  ராவுல் டெப்ரீசன் ஜெர்மன்  அதிகாரிகளால் கொல்லப்பட்டார்’’ என்ற செய்திதான் அது. நேச நாடுகளுக்கு இச்செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியை வர்ணிக்கவே முடியாது. யூதர் களின் நல்வாழ்வுக்காக  ஓயாமல் உழைத்தவர் வாலன்பெர்க்  என்பதை அகில உலகமே  அறிந்த நிலையில் இப்படியொரு செய்தி. 

ரஷ்யாவுக்கு, வாலன்பெர்க்கின் மீது அப்படியென்ன கோபம்?

 யூதர்கள் நலனுக்காக ஜெர்மன் தளபதி ஹெய்ச்மென்னுடன் பழகியதுதான் ரஷ்யாவின் அகோர கோபத்திற்கு காரணம். பன்னாட்டு அதிகாரிகள் வாலன்பெர்க்கை காப்பாற்ற முயன்றாலும் ரஷ்யா தன் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  

அமெரிக்கப் பிரதிநிதி ரஷ்ய அதிபர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியபோது, ‘‘அந்த இளைஞன் இறந்துபோனது நிஜம்’’ என்றுதான் அதிபரும் சொல்லியிருக்கிறார். அதே சமயத்தில் ரஷ்யாவின் உதவி உங்களுக்கில்லை என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறி அவரை  அமெரிக்காவிற்கே பேக்அப் செய்துவிட்டனர். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ரஷ்யாவில்  இருந்த  ஸ்விஸ் அரசு பிரதிநிதிக்கு  ஒரு தகவல்  வந்தது. 

‘‘ராவுல் வாலன்பெர்க் ரஷ்யாவில் இல்லை. அவரைப்பற்றி எங்களுக்கு ஏதும் தெரியாது” என்பது  ரஷ்யாவின் ஒரே பதில். ஆனால் மேற்கத்திய நாடுகள் வாலன்பெர்க்குக்கு  புடாெபஸ்ட்  நகரில் நினைவுச் சின்னம் கட்ட நிதி சேர்க்கத் தொடங்கினார்கள். இந்த முயற்சியில்  விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் தன்னை இணைத்துக்கொண்டு, வாலன்பெர்க்குக்கு நோபல் பரிசு என்று சிபாரிசுக்குரல் எழுப்பினார்.

‘‘ஜனவரி 1945 - ஏப்ரல் 1947 ஆம் ஆண்டு வரையில் ரஷ்ய சிறையில் இருந்தார்’’ என்னும் விஷயம்  வாலன்பெர்க்  அடைக்கப்பட்டிருந்த சிறையிலிருந்து  ரிலீசானவர்களின் வாக்கு. ஜெர்மன் கைதிகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபிறகு 1947ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் ராவுல் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்னும் செய்தி கிடைத்தது.   

தனிமைச்சிறை வாசத்தில் தினசரி 20 நிமிடம் வெளியே வர அனுமதி உண்டெனினும், பிறரது சந்திப்பைத் தடுக்க  மின்வேலி பாதுகாப்பு இருந்தது.

வாலன்பெர்க்கை சிறையில் உரித்தெடுத்து உப்புக்கண்டம் போட்டு சிறை மாற்றியதற்கு முக்கியக்காரணம், ஜெர்மன் அதிகாரிகளின் விடுதலை சிபாரிசு. 1948 ஆம் ஆண்டு குல்ஹாக் ஆர்ச்சிபெலகோ சிறை  வாசத்தின்போது,  கட்டட வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டார்.

மாஸ்கோ சிறையில், 1951ஆம் ஆண்டு  வாலன்பெர்க்கை சந்தித்த ஹங்கேரிய பேராசிரியர் மூலம் வாலன்பெர்க் 2414 கி.மீ  கடந்து தலை நகர் சிறைக்கு அனுப்பப்பட்ட செய்தி தெரிந்தது. சைபீரியாவில் 1953ஆம் ஆண்டு சந்தித்ததாக ராணுவ வீரர் கூறினார்.

அனை வரும் சொன்னதில் நீக்கமற இருந்த வார்த்தை, வாலன்பெர்க்கிடம் எந்த உணர்ச்சியும் இல்லை  என்பதுதான். 1947ஆம் ஆண்டு  அவர் இறந்துவிட்டார் என்று ரஷ்யா சொன்னாலும், அவர் குடும்பம் அதை நம்பவில்லை. 

1952-54 காலகட்டத்தில் ஸ்விஸ் நாட்டு அதிகாரிகள் ரஷ்ய அரசுக்கு 15  கடிதங்களுக்கு மேல்  எழுதியும் நேரில் அதிகாரிகளை அனுப்பியும் 34 தடவை  பேச்சுவார்த்தை  நடத்திப்பார்த்தனர்.  1956ஆம் ஆண்டு ஏப்ரலில்  ஸ்விஸ் அதிகாரி ஒருவர், ரஷ்யாவின் அதிபர் நிக்கோலாய்   புல்கானினைச்   சந்தித்து   ராவுலின்  தாய் கொடுத்த  கடிதத்தைத்  தூக்கி  குப்பைத்தொட்டியில் போட்ட ரஷ்ய அதிபர், ‘‘இது கால விரயம்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.  

பின்னர் 1957ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஸ்விஸ்  அரசுக்கு  சோவியத்  நாட்டில்  இருந்து ஒரு புது தகவல் கிடைத்தது. அன்று பிப்வரி 16.  பழைய ரிக்கார்டுகளில் சிறைக் கைதி ராவுல் வாலன்பெர்க் 1947ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி மாரடைப்பினால்  இறந்து விட்டார் என்று பதிவாகி இருந்தது.

இதன்  மூலம்  வாலன்பெர்க்  ரஷ்யாவில்  கைதியாக  இருந்தார் என்பது உறுதி. 1961ஆம் ஆண்டு பிரபல  மருத்துவர் நானா  ஸ்வாட்ஜ், டாக்டர் மைசான்கோவ் என்பவரால் மாஸ்கோவுக்கு வரவழைக்கப்பட்டார். மைசான்கோவ், சோவியத் நாட்டின் மருத்துவக் கழகத் தலைவர்.  

‘‘புடாபெஸ்ட் நகரின் ஹீரோவை மனநல மருத்துவமனையில் சந்தித்தபோது, பலகீனமாகவும், நடுக்கத்தோடும் காணப்பட்டார். ‘பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது  அவரை நான்  பரிசோதித்ேதன். துவண்டு போயிருந்தாலும் அவரது  உடல் நன்றாகவே இருந்தது’’ என்றார் அந்த ரஷ்ய டாக்டர். வாலன்பெர்க்குக்கு என்னதான் ஆச்சு?

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி