இளவரசரின் அட்டூழியங்கள்!



கத்தோலிக்க மத எதிரிகள் அதிகரித்திருந்த காலகட்டம் அது. அவர்களை ஓடுக்க 20 ஆயிரம் பேர் கொண்ட மெகா படையை மன்னன் ஆல்வா பிரபுவின் தலைமையில் அனுப்பினார் பிலிப். ஆனால் அவரது அரண்மனைக்குள்ளேயே டான் கார்லோஸ் புரோடெஸ்டண்ட்  மதத்தின்  தீவிர ஆதரவாளராக புதிய எதிரியானார். தனது மதப்புரட்சியாளர்களுக்கு உதவ, தனது மாமாவான  ஆஸ்திரியாவின் டான் ஜுவானை 1567-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி தன்னுடன் இணையச் சொல்லி டான் கார்லோஸ் வற்புறுத்தியது பிலிப்புக்கு ஒற்றர் மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

மெலிந்த உடல், வளைந்த முதுகு, குளறும் வாய் என்ற தோற்றம் கொண்ட கார்லோஸுக்கு தான் அரசர் ஆவோம் என்று அணுவளவும்  நம்பிக்கை இல்லை. பிலிப்பை மணந்த எலிசபெத், கார்லோஸ் மீது காதல் கொண்டாலும் பின்னாளில் அவரை மணக்காமல் இருந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னாள். ஏன்? கார்லோஸ் கொஞ்சம் ரஃப் அண்ட் செம டஃப் கேரக்டர்.

பிலிப் எலிசபெத் தம்பதியினருக்கு இசபெல்லா, காட்டலீனா என இரு பெண் குழந்தைகள்.  மூன்றாவது  பிரசவத்தின் போது  எலிசபெத் 1568 ஆம் ஆண்டு இறந்துபோனாள். ஆண்வாரிசு டான் கார்லோஸ்தானே! மனதளவில் டான் கார்லோஸ் குரூர மனம் கொண்டவன். முயல்களை உயிரோடு எரிப்பது, குதிரைகளின் கண்களைக் குருடாக்குவது என்ற செயல்கள் பலருக்கும் செம பீதி தந்தன. அவர்களின் பயம்தான் டான் கார்லோஸுக்கு  அளவில்லாத மகிழ்ச்சி.

1562 ஆம் ஆண்டு  ஒரு  பணிப்பெண்ணை  ஆசையில்  துரத்திக் கொண்டு ஓடும்போது மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறி  கீழே  விழுந்தார் டான் கார்லோஸ். மண்டையில் அடிபட்டு, அதை சரிசெய்ய நடந்த ஆபரேஷனில்  தவறுதலாக  மூளை நரம்பு அகற்றப்பட  கார்லோஸ் வெறிபிடித்த  மிருகமாகவே மாறினார்.

தெருவில் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி லிப்லாக்,  ஏ டூ இசட் ஆபாசப்பேச்சு என எல்லைமீறல் ஏராளம். சரியான சைஸ் ஷூக்களை தரவில்லை என்பதற்காக அதை விற்ற கடைக்காரரை ஷூவை தின்னச் சொல்லிய லாவா கோப கொடூரர்தான் டான் கார்லோஸ்.
அரசு கவுன்சிலின் உறுப்பினராக தந்தை பிலிப் இவனை நியமிக்க, சக உறுப்பினர்களை அடித்து நொறுக்குவது, அரசு  ரகசியங்களை வெளியே சொல்வது போன்ற அன்லிமிடெட் கொடூரங்கள் தொடர்ந்ததால் சகலரிடமும் அக்மார்க் கெட்ட பெயர். வியன்னா அரசு தூதுவர் ஒருவர், இதன் உச்சமாக மன்னரின் வாரிசுக்கு மனநிலை சரியில்லை என்று கூறுமளவு நிலைமை.

டான் கார்லோஸ்தான் அடுத்த அரசு வாரிசு என்று அறிவிக்கும்  விழாவிற்கு   தலைமை கிராண்ட்  மார்ஷல் ஆல்வா. 1560 ஆம் ஆண்டு நடந்த  இவ்விழாவில், மன்னர் வாரிசு கார்லோஸின்  கைகளில்  முத்தமிட  ஆல்வா மறந்துவிட்டார்.  இதற்கு  பின்னாளில் ஆல்வா பிரபு  வருத்தம்  தெரிவித்தபோது கூட கார்லோஸின் உஷ்ணம் குறையவில்லை. ஜெனரல் ஆல்வாவை கொல்வதுதான் டான் கார்லோஸின் பிளான்.

ஸ்பெயின் பார்லிமெண்ட், ஒட்டு மொத்தமாக கார்லோஸுக்கு மனநிலை சரியில்லை;  போருக்கு லாயக்கில்லை என தடுத்து விட்டது. இச்செய்தியைக் கேட்டவுடன்  கார்லோஸ் கோபத்தில் அலறியதில் அரண்மனையே ஆடிப்போனது.  இளவரசரிடம் விடைபெற்றுக் கொண்டு  வர ஜெனரல் ஆல்வா சென்றபோது, தன் வாளினால் அவரைக் குத்திவிட்டார் கார்லோஸ். கார்லோஸ் 1568 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டது இதன் காரணமாகத்தான்.

வியன்னாவின் அரசியான தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் இது குறித்து விவரமாக எழுதிய மன்னர், ‘‘சிறைப் படுத்துவதைத் தவிர வேறு எந்த முடிவும் எனக்குத்  தோன்றவில்லை.  உயிர் பிழைத்த ஆல்வாவிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். என் மகனைத்  திருத்த  நான் எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. இதே நிலை நீடித்தால் பின்னால் என்னாகுமோ என்று பயந்துதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்’’ என்று தன் கடிதத்தை முடித்தார். சிறையிலிருந்த டான் கார்லோஸுக்கு என்ன ஆச்சு?

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி