ரியல் லைப் ஜேம்ஸ்பாண்ட்ஸ்!



1950 களில் இயான் ஃபிளமிங் தன் உளவு நாயகனான ஜேம்ஸ் பாண்டை மிகவும் சிரமப்பட்டு கண்டடைந்தார் என்பது உண்மை. அதேநேரம் சீன்கானரி, பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரெய்க் வரை காதல் டூ கலவரம் என அனைத்திலும் பிஹெச்டி பண்ணியவர்களாய் வடிவமைத்தது இயான் ஃபிளமிங்கின் தீர்க்கதரிச எழுத்துக்கு சாம்பிள். ஆனாலும் தன் காலகட்டத்தில் சில உளவு ஏஜெண்டுகளின் விஷயங்களை தன் நாவல்களில் ஃபிளமிங் நைஸாக கொண்டுவந்துள்ளார். யார் அவர்கள்? வாருங்கள் சீக்ரெட்டாய் படிப்போம்.

சர் வில்லியம் ஸ்டீபென்சன்

ஜேம்ஸ் பாண்ட், பெண்களிடம் கெஞ்சிக் கொஞ்சும் ரொமான்ஸ் ரோமியோ. இந்த ரொமான்டிக்கை அவரது கேரக்டரில் எக்கச்சக்கமாக சேர்க்க காரணமே ஸ்டீபென்சன்தான் என்று சொன்னவர் சாமி சத்தியமாக ஃபிளமிங்கேதான். கனடாவின் வின்னிபெக் நகரில் ஜனவரி 23, 1897 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீபென்சன், ஐஸ்லாந்திலுள்ள ஃபாஸ்டர் குடும்ப வாரிசு. முதல் உலகப்போரில் இங்கிலாந்தின் ராயல் ஃபிளையிங் கார்ப்பில் சேர்ந்து எதிரிகளை துவம்சம் செய்து 12 க்கும் மேலான ஜெர்மனி விமானங்களை பப்படமாக்கினார்.

பின் இவரது விமானம் தாக்கப்பட்டு ஜெர்மன் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர், 1918 ஆம் ஆண்டு அங்கிருந்து சாதுரியமாக எஸ்கேப்பானார். பல்வேறு இடங்களில் தங்கி உயிர்பிழைத்த ஸ்டீபென்சன், இரண்டாம் உலகப்போர் வருவதற்குள் வயர்லெஸ்  முறையில் படம், செய்தி அனுப்பும் முறை உட்பட  பல்வேறு  கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தார். வின்ஸ்டன் சர்ச்சிலின் நண்பரான இவர், அமெரிக்கா, இங்கிலாந்து இரு நாடுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்தினார். இன்றைய நவீன உளவாளிகளுக்கு இவரே ரோல்மாடல்.  

ராபர்ட் டே லா ரோச்ஃப்கால்ட்  

பிரான்ஸ் நாட்டின் பாரிசில் 1923 ஆம் ஆண்டு செப்.16 அன்று பிறந்த ராபர்ட், உலகப்போர் சமயத்தில் பிரான்சில் போருக்கான ஸ்பெஷல் ஆபரேஷன் எக்சிக்யூட்டிவாக பணியாற்றியவர். பின் இங்கிலாந்து உளவுத்துறைக்காகவும் உழைத்தார். ஜெர்மனி பிரான்ஸ் நாட்டை ஆக்கிமித்தபோது ஸ்பெயினிலிருந்து இங்கிலாந்துக்கு தப்பியவர்.

பாராசூட் மூலம் எதிரிகளை துவம்சம் செய்வதில் சூரர். பாராசூட்  ஏறி பிரான்ஸ் சென்று தாக்குவது, பின் நாஸிகளிடம் பிடிபடுவது, ஸ்மார்ட்டாய் அவர்களையும் தீர்த்துக்கட்டிவிட்டு தப்பிப்பது, இங்கிலாந்துக்கு கடல்வழியாக தப்பித்துச் சென்று மீண்டும் முதலிலிருந்து இதே விஷயங்களை ரிப்பீட் செய்வது என்பதிலேயே தெரியுமே ராபர்ட்டின் தில் எப்படிப்பட்டது என.   

எஃப்.எஃப்.எஃப். இயோ தாமஸ்  

லண்டனில் 1902 ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று பிறந்த, இயோ தாமஸ் பின்னர் பிரான்ஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார். இங்கிலாந்து உளவு அமைப்பில் கடல்குதிரை என்பதுதான் இவரது பெயர். 1919-1920 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு எதிராக போலிஷ் படையில் சேர்ந்து போரிட்டு பிடிபட்டாலும் மரணதண்டனைக்கு முன்பே சாமர்த்தியமாக கம்பி நீட்டினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பாராசூட்டில் ஏறி, எதிரிகளின் இடத்தில் இறங்கி உளவு  பார்ப்பது,  பிடிபடுவது, தப்பிப்பது என் பதெல்லாம் தினகரனில் பீட்டர் மாமா வருவது போல தினசரி நிகழ்வுகள். 
 
மைக்கேல் விக்கர்ஸ்

1953 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில்  பர்பேங்க் நகரில் பிறந்தவரான மைக்கேல் பாதுகாப்புத்
துறையைச் சேர்ந்த உளவாளி. சிஐஏ, ஆர்மி என பல்வேறு துறைகளிலும் செயலாளர், கமிஷனர் பதவிகளை(1973-1986வரை) வகித்த அசுர புத்திசாலி. ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீது நடத்திய போரில் மைக்கேல் சிறப்பாக செயலாற்றினார் என இவரது ஹிஸ்டரி கூறுகிறது.  

இயான் ஃபிளமிங்  

நிஜ ஜேம்ஸ்பாண்ட் லிஸ்ட்டில் ரைட்டர் ஃபிளமிங் எப்படி? 1908 மே 28 அன்று இங்கிலாந்தில் லண்டனில் பிறந்த ஜேம்ஸ்பாண்ட் நாவல்களின் பிதாமகனான ஃபிளமிங், ராணுவ குடும்பத்தின் வாரிசு. ஆஸ்திரியா, ஜெர்மனி, ஏன்- ரஷ்யாவில் கூட வாழ்ந்த வேறு மாதிரி உளவு அதிகாரி இவர். இங்கிலாந்தின் ராயல் நேவியில் உளவுத்துறையில் பணியாற்றியவருக்கு பெண்கள் சகவாசமும் எக்கச்சக்கம். பாண்ட் படத்தில் ரொமான்ஸ் எப்படி உருவாச்சுன்னு புரியுதா ப்ரோ!

கா.சி.வின்சென்ட்