ரத்தக்கறை மர்மம்



மர்மங்களின் மறுபக்கம் 19

1966 ஆம் ஆண்டுமார்ச் 9ஆம் தேதி அன்று  ‘க்வீன்  ஆப் ஸ்காட்ஸ்’ என்று புகழ்பெற்ற ராணி மேரி எடின்பர்க் நகரிலுள்ள தனது  கம்பீரமான  பேரழகு மாளிகையில் அமர்ந்திருந்தார். அப்போது  அவருடன்  உரையாடிக் கொண்டிருந்தவர் ராணியின் இத்தாலியக் காரியதரிசி  டேவிட் ரிட்ஜ்ஜியோ.

அப்போதுதான் அந்த  அதிர்ச்சி சம்பவம்  நடந்தது. திடீரென்று ஒரு பெரும் கும்பல் அரண் மனையினுள் காவலர்களை பந்தாடியபடி மூர்க்கமான வேகத்தில் உள்ளே நுழைந்தது. அக்கூட்டத்தின் பாஸ்  டார்ன்லே பிரபுவின் மனைவி. கும்பலாகவந்த அந்தப் புரட்சிக்கூட்டம், கத்தியைக் காட்டி ராணியை மிரட்டி, அவரது காரியதரிசி டேவிட் ரிட்ஜ்ஜியோவை  வலுக்கட்டாயமாக அறைக்கு வெளியே தரதரவென  இழுத்துச்சென்று  அடிக்கத்  தொடங்கினர்.

வெளியே வந்து பார்த்த  மகாராணி அதிர்ச்சியில் மிரண்டு போனார். புரட்சிக் கும்பலின் முரட்டுத்  தாக்குதலில் ரத்தம்  பெருகி  குளமாய்  தேங்கிக் கிடந்த ரிட்ஜ்ஜியிடம் எந்த அசைவுமில்லை. கடுமையான குத்துக் காயங்களுடன் ரத்தம் வெளியேற துடித்தபடி கிடந்த  ரிட்ஜ்ஜியோ  எப்போதோ இறந்து போயிருந்தார்.

புரட்சிக்காரர்கள் ஹோல்சேல் ஆஃபரில் குத்தியதில் ரிட்ஜ்ஜியோவின் உடல் மொத்தமும் பொத்தலாகி 56 கத்திக்குத்துகள் அடையாளம் காணப்பட்டன. உடலை அகற்றி, ரத்தக்கறையை சுத்தம்செய்ய அக்கறை முயற்சிகள் செய்தபோதும் ம்ஹூம்! கறை அணுவளவும் குறையவில்லை. சரிய கறை நல்லது என விட்டுவிட்டார்கள் அரண் மனைவாசிகள்.

1722 ஆம் ஆண்டு  ‘ஹோலிரூட்’ என்னும் இந்த அரண்மனைக்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு அங்கே இறந்து போன காரியதரிசி  ரிட்ஜ்ஜியோவின் ரத்தக்கறை காட்டப்பட்டு அக்கதையைக் கூறுவது பாரம் பரிய வழக்கமானது.

நூற்றாண்டுக்குப் பிறகு பிரபல    நாவலாசிரியர்  சர் வால்டர்   ஸ்காட்  தன்னுடைய  நாவலின் முகவுரையில் ஒரு  வியாபாரி தான் தயார் செய்த கிளீனிங்  பவுடரை  விளம்பரம்  செய்ய  ‘‘ஹோலி ரூட்  அரண்மனையில் உள்ள ரத்தக்கறையையும் எனது கிளீனிங் பவுடர் போக்கும்’’ என்று அசகாய புளுகு விட்டது பதிவாகியுள்ளது. இப்படி கிடைத்த சான்ஸிலெல்லாம் இக்கறை வந்த கதையை ஆசிரியர் கடுமையாக பகடி செய்துள்ளார்.

அரண்மனையில் படிந்திருந்த  காரியதரிசியின் ரத்தக்கறை உண்மையானதுதான்.  மிகவும் லேசான மரப்பலகையிலும், குறிப்பிட்ட கல்தரையிலும்  ரத்தம்  படிந்தால்  அதை  அகற்றவே முடியாது. ஏன்? அப்போது இந்தக் கறையைப் போக்க 12 ரூபாய் சபீனா கண்டுபிடிக்கப் படவில்லை  என்பதே  காரணம். 1800 ஆம் ஆண்டு  மத்தியில் கூட இந்த  ேஹாலிரூட் அரண்மனையில்  ரத்தக்கறை   இருபக்கச்  சுவர்களில்  நன்றாகவே  படிந்திருந்ததாம்..

இதேபோல் பாரீஸிலுள்ள கார்மிலைட்   கான்வென்ட்டில்  80  பாதிரியார்கள் பிரெஞ்சுப்  புரட்சியின்போது  கும்பலாக  படுகொலை  செய்யப்பட்டார்கள். 19ஆம்  நூற்றாண்டின்  இறுதி வரை  அந்த ரத்தக்கறை  சுவர்களின்  மீதும், தரையின்  மீதும்  படிந்திருந்தது என்கிறார்கள்
வரலாற்றுஆராய்ச்சியாளர்கள்.

இது ஞாபகச் சின்னமாக இருக்கட்டுமே என்றுஆட்சியாளர்கள் நினைத்து இருக்கலாம் அல்லவா? இக்கறைகளை ஐரோப்பா முழுவதும், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் புரட்சியாளர்கள்  விட்டுச் சென்ற ஞாபகச்சின்னம் இது என்று பிரசாரமும்  செய்யப்பட்டதாம்.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)