மனஅழுத்தம் தரும் மரபணு சீர்கேடுகள்!



உடல் மொழி ரகசியங்கள் 35

நமது எண்ணம் மற்றும் உணர்வு இரண்டையும்  உருவாக்குவது நமது மரபியல் மற்றும் வாழ்வியல் முறை ஆகியவைதான்.  தினசரி நாம் உண்ணும் உணவுப்பழக்கம், நமது குடும்பம், உறவுகள், நட்பு, சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல், இயற்கைச் சூழ்நிலை ஆகியவை நமது மரபியல் அமைப்பை மெல்ல மாற்றும் திறன் கொண்டவை.

நமது எண்ணம் மற்றும் மனஎழுச்சி இரண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மரபணுக்கள் செயல்பாடுகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. ஒருவரின் நடத்தைக்கு, அவரின் மரபியல் தன்மையே அடிப்படை. அதேபோல் ஒருவருடைய நடத்தை மூளை மற்றும் உடலுறுப்புகளில் பலவகை மரபணுக்களைச் செயல்படச்  செய்வதோடு, மரபணுக்களின் செயல்பாடுகளை நிறுத்தவும் செய்கின்றன.

நீண்டகால மனஅழுத்தம் உடல்நலம் சீர்கெடுவதற்கும், மரபணுக்கள் மற்றும் ஹார்மோன்களில் உருவாகும் செயல்பாட்டு மாற்றங்களுக்கும் காரணமாகின்றன.  மூளை செல்களின் முதிர்ச்சி வேகம், மனத்தளர்ச்சி மற்றும் மனப்பதற்றம் ஆகியவை மன அழுத்தத்தினால் அதிகரிக்கின்றன. எ.கா: இதய நோய். நாள்பட்ட மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் மரபியல் மாற்றங்கள் மற்றும் உயிர்வேதியல் சீர்கேடுகள் பற்றியும், நடத்தை மற்றும் மரபியல் இரண்டின் இடைவிளைவுகள் பற்றியும், விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

மனஅழுத்தத்தால், நியூரோடிரான்ஸ் மிட்டர் வேதியங்கள் உருவாக்கத்தில் ஈடுபடும் மரபணுக்கள் தாறுமாறாவதால், நியூரோடிரான்ஸ் மிட்டர்கள் உருவாகும் அளவு குறைந்து மனம் சார்ந்த சீர்கேடுகள் உருவாகின்றன. நல்ல உணவு, நல்ல எண்ணம், நன்னடத்தை போன்ற வாழ்வியல் சீரமைப்புகளால் மரபணுக்கள் நலம் மேம்படுகிறது. 

விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மூளை செல்களில்  எம்மாற்றமும் உண்டாவதில்லை என்றே கூறினர். ஆனால், இன்று மூளையில் பல மாற்றங்கள் உண்டாகின்றன; மூளை பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப இயங்கக்கூடியது என்பன போன்ற கருத்துகள் பெருகிவிட்டன. நமக்கு தினசரி ஏற்படக்கூடிய  அனுபவங்களால்  மூளையில் புதிய செல்கள் பெருகும் (அ) குறையும்.

மூளை செல்களின் மரபணுக்கள் வெளிப்படுத்தும் செய்முறை குறிப்புகளால்,  பெருமளவில்  நியூரோடிரான்ஸ்  மிட்டர் வேதியங்கள்  உருவாகின்றன. மூளை செல்களுக்கு இடையே உள்ள இடைவெளி இணைப்புகள் வடிவம் மாற்றமடைகிறது. அதனால் மூளை செய்தித்தொடர்பு மேம்படுகிறது. 

மரபணுக்களும் - மனத்தளர்ச்சியும் மரபியலில் ஒரு சில வகை மரபணுக்கள் கூட்டமைப்பு மாற்றங்களால் நீண்டகால மனத்தளர்ச்சி உருவாகிறது. `Mthfr’(Methylenetetra Hydro Folate Reducatase)  மரபணு  கூட்டமைப்பு மாற்றத்தால், உடலில் ஃபோலிக் அமிலம் பயன்பாடு குறைவதால், ஏற்
படும்  சீர்கேடுகள்:  மீதைலேஷன் செயல் திறன்  குறைந்து, ஹோமோசீஸ்டைன் அளவு உயர்கிறது. டிஎன்ஏ உருவாக்கம் சீர்கெடுகிறது. டிஎன்ஏ பழுது நீக்கம் பணி சீர்கெடுகிறது.

இதனால் உருவாகும் நோய்கள்: பிறவிக்  குறைபாடுகள், இதய நோய், புற்று நோய், மனத்தளர்ச்சி. டாக்டர் இங்வார் ஜெல்லண்ட், பெர்ஜென் பல்கலைக்கழக விஞ்ஞானி நடத்திய ஆராய்ச்சியில் நார்வே நாட்டு நடுத்தர வயதுள்ள 6 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். இவர்கள் உடலில் ஹோமோசிஸ்டெய்ன் அளவு, இயல்பைவிட இரு மடங்கு  கூடுதலாக இருந்தது.

பெண்கள் எல்லாரும்  பெருமளவில்  ஃபோலிக் அமிலம் பெறும் அளவுக்கு உணவுகள் சாப்பிட்டாலும் உடலில் ஃபோலிக் அமிலம் சீராகப் பயன்படவில்லை. மரபியல் பாலிமார்பிசம் காரணமாக உடல் செல்களில் ஃபோலிக் அமிலம் ஏற்கப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

(ரகசியம் அறிவோம்)

ச.சிவ வல்லாளன்