உருவாகிறது தனிமனிதர்கள் சமூகம்!



உலகில் ரகசியமான செயல்பாடுகள் வெட்டவெளிச்சமாகும்போது, பலருக்கும் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. இந்த மேட்டரும் அந்த ரகம்தான். அமெரிக்காவிலுள்ள 25% வீடுகளில் வசிப்பவர் ஒருவர்தான், இந்தியாவில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்களுக்கும் மேல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில் கவனிக்கவேண்டியது இந்த  வளர்ச்சி  வேகத்தைத்தான். பத்தாண்டுகளில் 40% வளர்ச்சி. கலாசார பன்மைத்துவத்தின் ஜங்ஷனான இந்தியாவில் திருமணம் இன்றியமையாத நிகழ்வென்ற நிலையில் எப்படி நிகழ்ந்தது இந்த விபரீதம்? பெண்களும், ஆண்களும் சுதந்திரமாக கட்டற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகி வளர்கிறதா? அலசல் ரிப்போர்ட் இதோ! 

பிரஷர் உறவுகள்! 

உலகமயம், தாராளமயம் ஆகியவற்றோடு போராடும் எளிய மக்கள், திருமணத்தை மற்றொரு சுமையாக குறிப்பிட்ட ஆண்டிற்குள் தன் தோளில் ஏற்காதபோது, உறவுகள், நண்பர்களிடமிருந்து பெறுகிற பிரஷர் அளவில்லாதது. மணமாகாத நிலையில் ஒருவர் பெறுகிற சுதந்திரம் எல்லையற்றது. நீங்கள் முக்கியம் என்று நினைக்கிற விஷயங்களை இன்னும் கவனமெடுத்து, காலமெடுத்து செய்யலாம். ஆனால் திருமண உறவில் பிறரின் கவனஈர்ப்பு செயல்களை கவனித்து, அவர்களையும் உங்களுடன் பயணத்தில் கூட்டிச்செல்வது அவசியம். 

தனியே தன்னந்தனியே! 

மக்களைக் கடந்து இன்றைய முன்னணி அரசியல்வாதிகள் பலரும் சிங்கிள்தான். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெ, உள்ளிட்ட பலரும் திருமணம் மறுத்து வாழ்ந்த கெட்டிக்காரர்கள்தான். தற்போதைய உத்தரகாண்டின் முதல்வரான திரிவேந்திர சிங் ராவத், ஹரியானாவின் முதல்வரான எம்.எல். கட்டார், அசாம் முதல்வரான சர்பானந்தா சோனோவல், ஓடிஷாவின் முதல்வரான நவீன் பட்நாயக்  உள்ளிட்டோரையும்,  ஏன்,  உ.பியில்  ரகளையாக  ஆட்சிபுரியும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் இதற்கு சாம்பிள் காட்டும்படி மணமாகாதவர்கள்தானே! திருமணம் செய்யாதவர் என்றால் ஜாலிவாலி மைனர் என்றெல்லாம் இன்று அர்த்தமில்லை. மேற்சொன்ன பலரும் கடினமாக உழைத்தே இன்றைய நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

ஏனெனில் திருமணமானவர்கள் கட்டுப்பாட்டினால் குறிப்பிட்ட வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் மணமாகாதவர்கள் தம் சுதந்திரத்தைக் கொண்டு தம் வாழ்க்கை, தொழில் ஆகியவற்றை திட்டமிட்டு சாதிக்கின்றனர். 

காத்திருக்கும் மேற்கு!  

வெளிநாடுகளில் சிங்கிளாக வாழ்வது இயல்பான லைஃப்ஸ்டைல்தான். தங்களுக்கு துணை தேவைப்படும்போது அவர்கள் டேட்டிங் வெப்சைட்டுகளை அணுகி தனக்கான துணைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். உடனே கிடைக்கவில்லை என்றாலும் காத்திருக்கின்றதும் கூட உண்டு. சீனாவில் திருமணம் செய்யாமல் 20 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

திருமணம் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு நண்பர்களோ பிற உறவுகளோ இல்லை என்பதல்ல. “அமெரிக்காவில் மணமாகாதவர்கள் அதிகரிப்பதற்கு  முக்கியக்காரணம் சமூக பொருளாதாரம்தான். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய தேவைகளுக்காக பலரும் தனியாக வாழ்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கிறது. நம்பிக்கையான, அர்த்தமுள்ள வாழ்வுக்காகவே மண உறவைத் தவிர்த்து  வாழ்கின்றனர்” என்று தீர்க்கமாகப் பேசு
கிறார்  கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் திட்ட விஞ்ஞானியான பெல்லா டிபாலோ.  

தடை விதிக்கும் கிழக்கு! 

“ஆண்கள் மட்டுமல்ல இந்தியாவில் பெண்களும் திருமணம் செய்துகொள்ளாமல் சாதித்திருக்கிறார்கள். உதாரணமாக வல்லபாய் படேலின் மகளான மணிபென் படேல், மிருதுளா சாராபாய், டாக்டர் சுசீலா நய்யார் ஆகியோர் தம் வாழ்வையே இந்தியாவின் சுதந்திரத்திற்காக அர்ப்
பணித்தனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் அர்ப்பணிப்பு வாழ்வு உலகறியும்.

ஆனாலும் இந்தியாவில் ஆண், பெண் சிங்கிளாக வாழ்வது மிக கடினமே. ஆண், பெண்  இருவருக்கும்  மணமாகவில்லையெனில் இந்தியாவில் ஓலைக்கூரை கொட்டாய் கூட கிடைக்காது. வேலையில் சாதிக்கும் பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கை கற்பூரம்தான். குடும்பத்தை பராமரித்தால் திரும்ப வேலை பார்த்து கனவுகளை சாதிப்பது சாத்தியமில்லை. பிரசவகால லீவ் கான்செஃப்டே இப்போதுதான் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது” என கள யதார்த்தம் பேசுகிறார் பத்திரிகையாளரான எஸ்.முராரி.  

குழந்தைகள் தேவை! 

தன் முதுமை குறித்து கவலைப்படும் திருமணமாகாதவர்களுக்கு இன்று அதெல்லாம் ஒரு பிரச்னையில்லை.  டாடா  குழும தலைவர் ரத்தன் டாடா, சீரியல் தயாரிப்பாளர் ஏக்தாகபூர், நடிகர் துஷார்கபூர், இயக்குநர் கரண்  ஜோகர் ஆகியோர் ஐவிஎஃப் முறையில் குழந்தைகளைப்  பெற்றுக்கொண்டவர்களாவர். இல்லையென்றால்  அரசு   விதிகளுக்குட் பட்டு குழந்தையைத்   தத்தெடுத்துக்கொள்ளவும்  வாய்ப்புண்டு.

மற்றபடி பாசம் காட்டும் விஷயத்தில்   தனிப்பெற்றோர்  யாருக்கும்  சளைத்தவர்களில்லை. நவீன  காலத்தில் இருவர்தான் குடும்பம் என்ற   நிலையில்  உங்களுக்கு  எது  வசதியோ அதனைத்  தேர்ந்தெடுக்க  உங்களுக்கு முழுஉரிமை உண்டு. ஏனெனில், இது  உங்களுடைய - உங்களுக்கேயான  ஸ்பெஷல்  வாழ்க்கை.  ஃப்யூச்சரில் பலரின் சாய்ஸாகவும் இந்த லைஃப்ஸ்டைலே இருக்கக்கூடும்.

ச.அன்பரசு