இன்டர்நெட் இல்லாத பூமி!



உடனே பதறாதீர்கள். யாரும் இன்டர்நெட்டை ஸ்விட்ச் ஆப் செய்துவிடப்  போவதில்லை. ஆனால் அப்படி இணையம் இல்லையெனில் ஸ்மார்ட் போனில் ஹெச்டி ஸ்க்ரீனிலேயே வாழ்ந்து வரும் ஜென் இஸட் தலைமுறை  என்ன ஆகும்? பணமதிப்பு நீக்கம், மாட்டுக்குத்தடை, 10 ரூபாய் நாணய மதிப்பிழப்பு என தினமும் சூரியன் மறைந்து, அடுத்தநாள் தினகரன் வருவதற்குள் ஏராளம் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது!

இதுவும் கூட நடக்கலாம்.ஸ்டான்ஃபோர்டு பல்கலையின் ஜெஃப் ஹேன்காக், தன் மண்டையில் தோன்றும் அதிரிபுதிரி ஐடியாக்களை தன் மாணவர்களோடு விவாதிப்பதை விரும்புபவர். 2008 ஆம் ஆண்டில் சில நாட்கள் இன்டர்நெட் இல்லாமல் இருக்கமுடியுமா என சேலஞ்ச் செய்து 48 மணிநேரம் அவர்களை ஆய்வு செய்தார்.

 “நான் முதன்முதலில் இந்த ஐடியாவை சொன்னபோது வகுப்பறையே ஒரு நொடியில் கலவரமானது. இது சாத்திய மில்லை, எங்களால் முடியாது என்பதுதான் மாணவர்களிடம் கிடைத்த முதல் ரெஸ்பான்ஸ்” என்கிறார் பேராசிரியர் ஜெஃப். ஒருவாரம் மாணவர்கள்
இப்படி இன்டர்நெட் விரதம் கடைப்பிடிக்க, பெற்றோர்களே பையனுக்கு வேப்பிலை அடிக்கணும் போலயே! என பதறியிருக்கின்றனர். அதன் பிறகு ஜெஃப் இதுபோல எகிடுதகிடு ஐடியாக்களை ட்ரையல் பார்க்கவில்லைதான்.

ஆனால் அவரின் அந்த ஐடியா ஒரு நொடி பதறவைக்கிறதுதானே?
1995 இல் இன்டர்நெட்டை பயன்படுத்தியவர்களின் அளவு 1% . உலகில் 3.5 பில்லியனுக்கும் மேற்பட்டமக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருவதோடு, 1 நொடிக்கு 10 நபர்கள் இதில் புதிதாக இணைந்துவரும் அளவு எக்ஸ்பிரஸ் வேகமாகியிருக்கிறது. அமெரிக்காவில் 73% அமெரிக்கர்கள் இணையத்தை தினசரி பயன்படுத்துகின்றனர்.

இங்கிலாந்தில் 90% இளைஞர்கள் இன்டர்நெட்டை இன்பம் பொங்க பயன்படுத்துகிறார்கள். “இன்டர்நெட்டை நாம் நாடி நரம்பெல்லாம் உட்புக அனுமதித்துவிட்டோம். ஆனால் ஒருநாள் அதனை நாம் பெறமுடியாதபோது நிலைமை என்ன ஆகும்?” என தன் பங்குக்கு வயிற்றில் புளி கரைக்கிறார் மிச்சிகன் பல்கலையின் பேராசிரியர் வில்லியம் டட்டன்.

அதே சமயத்தில் இன்டர்நெட் என்பது ஒன்றும் அழிக்க முடியாத விஷயமல்ல. இணைய முகவரி சர்வர்களை குறிப்பிட்ட நபர்கள் தமது நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்தி, இணையத்திலுள்ளவர்களை வழிக்கு கொண்டுவரவும் வாய்ப்புள்ளது. கடலுக்கடியில் செல்லும் இன்டர்நெட் கேபிள்களை துண்டித்தாலே உலகத்தின் ஒருபகுதியை மற்றொன்றிலிருந்து துண்டிக்க முடியும்.

2008 இல் மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா ஆகியவற்றுக்கான இணைய கேபிள்களில் பகிர்வுச்சிக்கல் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு எகிப்தில் ஏற்பட்ட அரபு வசந்தம் எனும் மக்கள் புரட்சி, சமூகவலைத் தளங்களின் மூலமே பக்கா பிளான்களோடு பல்வேறு முடியாட்சி நாடுகளுக்கும் பரவ பதறிய ஈரான், துருக்கி அரசுகள் இன்டர்நெட்டை முழுமையாக தம் நாட்டுக்குள் நிறுத்தின.

சீனாவிடமும் இதுபோல இன்டர்நெட்டை கட் செய்யும் ஸ்விட்ச் இருப்பதாக செய்தி. அமெரிக்காவை சைபர் அட்டாக்குகளிலிருந்து காப்பாற்ற இணையத்தை அணைத்து வைக்கும் அமைப்பு தேவை  என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இன்டர்நெட்டை கன்ட்ரோல் செய்ய ஆன், ஆஃப் செய்யும் ஸ்விட்ச் அமைப்பு உருவாக்குவது சிம்பிள் வேலையல்ல. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை இன்டர்நெட் இல்லையெனில் பொருளாதாரம் என்னவாகும்? என்று ஆராய்ச்சிப் பணியை லாம்போர்க் என்பவரிடம் ஒப்படைக்க, அவரின் ஆராய்ச்சியில் 4 நாட்களில் உலகம் சகஜமாகும் என்பது பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது.

“இன்டர்நெட் இல்லாதபோது முதலில் தடுமாறினாலும் பணியாளர்கள் அவர்கள் நிறுத்தி வைத்திருந்த வேலையை செய்தாலே நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் இது ஹோட்டல், விமானசேவை ஆகியவற்றுக்கு பொருந்தாது. மக்கள் நேரடியாக செய்து வந்ததை இணையம் வழியே செய்கிறார்கள். இணையம் இல்லாதபோது, அப்படி செய்ய 3 நாட்களில் தயாராகி விடுவார்கள்” என உற்சாகமாகிறார் ஆராய்ச்சியாளர் ஸ்டைன் லாம்போர்க்.

1998 இல் செயற்கைக்கோள் பழுதால் இணையம் பழுதானபோது ஏற்பட்ட மக்களின் நிலையை ஆய்வு செய்த டட்டன், “இது அவரவர் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்தமைவதுதான். இணையத்திலுள்ள சோஷியல் மனிதர்களை விட, அதனைப் பயன்படுத்தாதவர்கள் நன்கு பழகும் தன்மை கொண்டவர்கள் என்று கூறுவீர்களா என்ன?’’ என்கிறார்.

1975 ஆம் ஆண்டு நியூயார்க்கிலுள்ள டெலிபோன் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தால், மன்ஹாட்டன் பகுதியில் 23 நாட்கள் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த மக்களிடம் செய்த ஆய்வில், பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். “இன்டர்நெட் இல்லையெனில் உலகம் இருண்டுவிடாதுதான்.

பெரும்பாலான மனிதர்கள் இணைந்திருக்கும் களமான இணையம், திடீரென மறையும்போது மனிதர்களின் சிந்தனையே திகைத்துப்போகும். ஆனால் அப்படி நடக்காது என நம்புவோம்” என வேப்பிலை அடிக்கிறார் பேராசிரியர் ஹேன்காக். காய்ச்சல் வரவைச்சு பாரசிட்டமாலும் தருகிறாரே இவர்!

ச.அன்பரசு