எய்ட்ஸை ஒழித்த முதல் நாடு!



பாலியல் வியாதிகளை பக்காவாக ஒழிப்பது எப்படி என பலரும் திருதிருவென விழிக்கும் சூழலில், தாய்லாந்து எய்ட்ஸ் நோய் தடுப்பில் தற்போது  நெ.1  இடம்  பிடித்திருக்கிறது.  தாயிடமிருந்து  குழந்தைக்கு பரவும் எய்ட்ஸ் நோயை தடுப்பதில் முதல் நாடாக நெஞ்சம் நிமிர்த்தியிருக்கிறது. 1984 இல் தாய்லாந்தில் ஹெச்ஐவி நுழைந்தது.

மிகச்சில ஆண்டுகளிலேயே தாயிடமிருந்து குழந்தைகளுக்கு பரவும் ஹெச்ஐவி வேகம் 40% என அதிகரித்திருந்தது. பத்து ஆண்டுகளில் அரசின் முயற்சியினால், நோயின் அளவு 1.9% என குறைந்தது.

2016 ஆம் ஆண்டு முதல் ஆசிய நாடாக எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் வெற்றிகண்டுவிட்டது தாய்லாந்து. எப்படி ஒழித்தார்கள்? 100% ஆணுறை பயன்பாடு, கர்ப்பமுற்ற பெண்ணுக்கான ஹெச்ஐவி டெஸ்ட், உடனடி சிகிச்சை முடிவுகள், ஹெச்ஐவி தடுப்புத்துறைக்கு அதிக முதலீடு என தாய்லாந்து அரசு நாட்டின் ஒவ்வொரு இன்ச்சிலும் தாராள உழைப்பை கொட்டியுள்ளது.

உலகம் முழுவதும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36.7 கோடி. ஹெச்ஐவி அறிகுறிகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7.8 கோடி. இந்நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.5 கோடி. 2015 ஆம் ஆண்டில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 21 லட்சம் பேர்.