உள்ளத்தைச் சொல்லும் இமோஜி!



கா.சி. வின்சென்ட்

காதலின் பிகினிங்கிலிருந்து பொசுக்கென பிரேக் அப் ஆவது வரை இமோஜிக்களின் பரிமாறல் தினசரி பல கின்னஸ் சாதனைகளையே படைக்கிறது. இவ்வளவு  புகழ்கொண்ட இமோஜியை அறிவது நமக்கு என்ன பெருமையா? கடமை கடமை...

*1999 ஆம் ஆண்டு ஜப்பான் டிஸைனர் ஷிகெட்டாகா குரிட்டா செல்போன்களுக்கான இமோஜிகளை என்டிடி டோகோமோ நிறுவனத்தின் மொபைல் இன்டர்நெட் திட்டத்திற்காக  உருவாக்கினார். “இமெயிலில் 250 சொற்களை பயன்படுத்தலாம். சொற்களை விட இமோஜிகளை புரிந்துகொள்வது எளிது” என்கிறார் குரிட்டா. இதில் மங்கா காமிக் கேரக்டர்கள், சீன கேரக்டர்கள், சிம்பல்கள் என 12 பிக்‌ஸல்களில் படு சிம்பிளாக மனம் கவர்ந்தன. 

*இமோஜிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட ஹாட் டாக் இமோஜி பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஹாட் டாக் என்பது அமெரிக்காவில் பலரும் விரும்பி உண்ணும் சாஸேஜ் உணவு. “ஜப்பானில் நாங்கள் ஆனிகிரியை(ரைஸ்பால்) இமோஜிகளில் பயன்படுத்தி  வருகிறோம். அமெரிக்காவில் பிரபலமான உணவு ஹாட் டாக் அவ்வளவுதானே?” என சிம்பிளாக விவாதத்திற்கு சுபம் சொன்னார் குரிட்டா.

*குரிட்டா இமோஜிகளில் உருவாக்கிய ஹார்ட் இமோஜிக்கு அர்த்தம்  லவ்தான். “வார்த்தைகளோடு இணைந்து வரும்  இமோஜி  சொற்களை விட  அதிக விஷயங்களை சொல்லுகின்றன. நான் அதை பாசிட்டிவ்வாகத்தான் உருவாக்கினேன்” என நெஞ்சம் திறந்து பேசுகிறார் குரிட்டா.

*முதலில் இமோஜிகளை டோகோமோ நிறுவனம் வானிலை அறிவிப்புகளை கூற பயன்படுத்தியது. சூரியன், மழை, மின்னல், ஃபாஸ்ட் புட், பார்ஆகியவற்றைக் குறிக்க விதவிதமான இமோஜிகளைப் பயன்படுத்தினர். நியூயார்க்கிலுள்ள மாடர்ன் ஆர்ட் மியூசியத்திலும் இமோஜிகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இவை மட்டுமல்ல,  2012  இல் @  சிம்பலையும் இதில் இணைத்திருந்தனர்.

“நம் உணர்வுகளை வெளிப்படுத்த  இமோஜிகளை பயன்படுத்தாமல் செய்திகளை அனுப்புவது  இனி  நினைத்தே  பார்க்க  முடியாது” என அசத்தலாகப் பேசுகிறார் கட்டிட வடிவமைப்பாளர் பாலோ அன்டோநெல்லி.

*அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் சோகத்துடன் அழுதுவடியும் இமோஜி அதிக ஹிட் என்றால்,  கொலம்பியா,  பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இசைக் குறிப்பு இமோஜி மாஸ் ஹிட் என்பது ஜூலை  2016 உலக நிலவரம். டிசம்பரில் கிறிஸ்துமஸ் மரம், நவம்பரில் 100 என்ற  இமோஜியும் ட்விட்டரில் உச்சம் தொடுகிறது.