சாதனையாளர்கள் அறிமுகம்!



சூசன் பி ஆண்டனி (1820-1906)

1820 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் பிறந்த சூசனின் தந்தை உரிமைகளுக்காக போராடும் வக்கீல் என்பதால் சூசனுக்கும் சமநீதிக்கான புரட்சி தைரியம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா.

17 வயதிலேயே அடிமை முறையை எதிர்த்து புகார் கொடுத்த பூம்பாவை. பொருளாதார சிக்கலால் பள்ளிப்படிப்பிலிருந்து விலகி, 1846 இல் ஆசிரியர் பணி. 1850 இல் பெண்ணியவாதி எலிசபெத்தை சந்தித்த பின், வேகமெடுத்த சமூகப்பணியில் பெண் வாக்குரிமை, அடிமைமுறை எதிர்ப்பு ஆகியவற்றுக்காக பாடுபட்ட பெண்மணி சூசன்.

ரெனே லெயன்னாக் (1781-1826)

இதயத்தின் லப்டப் ஒலியை டாக்டர்களை கேட்கவைத்த ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்த ரெனே, பிரான்சின் க்விமர் நகரில் 1781 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று பிறந்தார். தன் மாமா வீட்டில் படித்தவருக்கு மருத்துவத்தின் மீது கொள்ளை பிரியம். மூச்சுத்திணறல் பிரச்னை கடந்து பல்வேறு மருத்துவ ஆய்வு அறிக்கைகளை 1802 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிவிட்டார்.

தோல் புற்றுநோயான மெலனோமாவைக் கண்டுபிடித்ததோடு, கல்லீரல் அழற்சி குறித்த ரெனேவின் ஆய்வும்  புகழ்பெற்ற ஒன்று. 1803 ஆம் ஆண்டு ரெனேவின் அறுவை சிகிச்சை பணிகளை பாராட்டி அரசு விருதும், 1823 ஆம் ஆண்டு மற்றொரு விருதாக நைட் ஆப் தி லீஜியனும் அளிக்கப்பட்டது. பலரது நோய் தீர்க்க உதவிய ரெனே, காசநோயால் 45 வயதில் இறந்தது பெரும் துயரம்.

லுட்விக் போல்ட்ஸ்மன் (1844-1906)

1844 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர். இளம் வயதில் தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வீட்டிலேயே பாடம் கற்றவர், 1866 இல் வியன்னா பல்கலையில் வாயுக்களின் கைனடிக் தியரியை ஆராய்ந்து பெற்றது பிஹெச்.டி பட்டம். தெர்மோடைனமிக்ஸின் 2 வது விதியான  ஸ்டேட்டிஸ்டிகல் மெக்கானிக்ஸை ஆராய்ந்து மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மன் விதி உருவாக்கியவர்.
 
மின்காந்த துறையில் ஜேம்ஸ் க்ளார்க்  மேக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி தவிர குறிப்பிடும்படி அத்துறையில் அன்றைய காலத்தில் சாதித்த விஞ்ஞானி போல்ட்ஸ்மன் மட்டுமே. ஸ்வீடிஷ் அறிவியல் சங்கம் உட்பட பல்வேறு அறிவியல் சங்கங்களில் உறுப்பினராக இருந்தவர்; கிரேஸ் பல்கலையின் தலைவராகவும் தன் உழைப்பினால் உயர்ந்தவர்.

பி. ஜோஸபின்