சர்ச்சை மருத்துவர் ஹாரி எட்வர்ட்ஸ்!



மர்மங்களின் மறுபக்கம் 6

ஆன்மிகவாதி பிளஸ் மருத்துவராக புகழோடு வாழ்ந்த ஹாரி எட்வர்ட்ஸ்(1893 - 1976) என்பவர்தான் இந்தவார கதாநாயகன். இந்தப் பிரபலமான ஆங்கிலேயர், நோயின் தன்ைம யை அறிந்து, தனது பிரார்த்தனை மூலமாகவும், நோயாளிகளைத் தொடுதல் மூலமாகவும் பல நோயாளிகளை குணப்படுத்தியவர் என்று வரலாறு கூறுகிறது.

தனது 40 ஆண்டு கால சேவையில் 14 மில்லியன் கடிதங்களை உலகமெங்கிலுமிருந்து பெற்றவர் இவர். ஹாரி எட்வர்ட்ஸின் நோய் குணமாக்கும் முறையும் சர்ச்சைக்குள்ளான ஒன்றுதான். அவரது வாழ்வில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி ஒன்று 1953ஆம் ஆண்டு நடந்தது. வில்லியம் ஓல்சன் என்பவருக்கு திடீரென முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடும் வலி அவரை நிரந்தரமாக படுக்கையில் வீழ்த்தியது.

முதுகுத்தண்டில் ஏற்பட்ட சிக்கலினால்தான் இந்தக் கடுமையான வலி என்றும் டாக்டர்கள் சொல்லி அவரை, இங்கிலாந்தில், சென்ட் பகுதியிலுள்ள பிரத்யேக மருத்துவமனையான ஷெப்பியில் சேர்த்தனர். உடல் நலிவுற்ற வில்லியம் ஓல்சன் நம்பிக்கை இழந்து முழு நோயாளியாகிவிட்டார். இனி வாழ்நாள் முழுவதும் அவர் நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் உறுதியாக சொல்லிவிட்டார்கள்.

வில்லியமின் உடலை பாதி மறைக்கும் அளவு ‘பிளாஸ்டர்’ போட்டுவிட்டு, ஆடாமல் அசையாமல் இருந்தால் நோய் பூரண குணமடைந்துவிடும் என்பது டாக்டர்களின் நம்பிக்கை. ஆனாலும் வில்லியமின் வலி குறையவேயில்லை. அப்பாவின் அவஸ்தையை எந்த மகன்தான் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியும்? வில்லியம் ஒல்சனின் மகன், மதபோதகர் ஹாரி எட்வர்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டு தனது தந்தையை 1953ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, அவரிடம் அழைத்துச் சென்றான்.

தன் முன்னே படுக்கையில் இருந்த வில்லியம் ஓல்சனை நிதானமாகப் பார்வையிட்ட ஹாரி எட்வர்ட்ஸ், தனது இரு கைகளையும் அவர் மீது வைத்து ‘‘எப்போதும் போல் அமைதியாக இருங்கள்’’ என்று கண்களை மூடியபடி சொன்னார். 3 நிமிடங்கள் கழிந்தன. ஓல்சன் மெல்ல எழுந்து, கால்களை தரையில் பதித்து நடந்தார். அவரது உடலில் ஒரு துளி வலியும் இல்லை.

முதலில் இதைக்  கேள்விப்பட்ட மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை. ஓல்சன்தான் பிராக்டிகல் சாட்சியாக கண்முன் நிற்கிறாரே என்று அவர் குணமடைந்துவிட்டார் என்பதை பின்னரே ஒப்புக் கொண்டனர்.

முதுகுத்தண்டு சிக்கலால் படுத்த படுக்கையிலிருந்த ஒருவர், மீண்டும் எழுந்து நடப்பது என்றால் இது மருத்துவ சாதனையே அல்ல என்கிறார்கள் டாக்டர்கள். 1 மில்லியன் நோயாளிகளை ஹாரி எட்வர்ட்ஸ் குணப்படுத்தியதற்கு இது ஒரு முக்கிய உதாரணம். ‘‘ஆன்டிசெப்டிக் சர்ஜரி’’யை முதன் முதலாகக் கண்டுபிடித்த டாக்டரான லார்டு லிஸ்டர் என்பவர் தன்னுள் புகுந்து இந்த நோய்களைக் குணப்படுத்துகிறார்” என்றார் ஹாரி நகைச்சுவையாக.

‘‘நம்பிக்கையால் குணப்படுத்தும் கலை’’ என்னும் புத்தகத்தை எழுதிய அமெரிக்க மந்திரவாதியான ஜேம்ஸ் ராண்டி, மோசடியான வழிகளில் குணப்படுத்துவதாகக் கூறும் பல நபர்களின் உண்மையான செயல்முறையை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். ஆன்மிக முறையில் மனதை வயப்படுத்தி குணப்படுத்துவது என்பது தற்காலிகமானது. இதனை நோய் குணமானது என்று சொல்லவே முடியாது.

மருத்துவர் உதவியின்றி குணப்படுவது அசாதாரணம் என்றும் இவர் சொல்கிறார். ஆனால் ஹாரி எட்வர்ட்ஸ் குணப்படுத்தியது எப்படி? என்ன விதம் என்பதைப் விளக்கமாக பேச இவர் மறுக்கிறார். நம்பிக்கை வேறு - கடவுள் பக்தி வேறு.

ஜேம்ஸ் ராண்டியின் கணிப்பில் ஹாரி எட்வர்ட்ஸின் முறையில் குறையில்லை. ஏனெனில் தனது வழியில் அவர் நோயாளிகளைப் பிழைக்க வைத்து சாதனை நிகழ்த்தினார். அதற்கு அடிப்படையே ஆன்மிக பலமும் பக்தியும்தான்! என்னமோ நடக்குதுதான்.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி

ஓவியங்கள்: கதிர்