கைரேகையால் பிடிபட்ட பெண்மர்மங்களின் மறுபக்கம் 4

1892 ஆம் ஆண்டில் முதன்முதலாக அர்ஜென்டினாவில் லா பலாட்டா என்னும் பகுதியைச் சார்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கைரேகைகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் யுக்தியை தொடங்கி வைத்தார்.லா பலாட்டா காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஆல்வாரிஜ், நிக்கோச்சியா எனுமிடத்தில் நடந்த கொலையை துப்பு துலக்க வரவழைக்கப்பட்டார்.

அங்கு 2 குழந்தைகள் படுக்கையிலேயே கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தனர். அவர்களது தாய் பிரான்சிஸ்கா ரோஜாஸ்(26),  குழந்தைகளைக் கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீஸ் வலுவாக நம்பியது. ஆனால் எஃகு வலுவில் ஆதாரமேதுமில்லை.

இந்த இடியாப்ப சிக்கல் கேஸில் துப்பு துலக்கவே ஆல்வாரிஜ் வந்தார். கொலை நடந்த படுக்கையை 99.99% அலசியதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அங்கிருந்து கிளம்பும்போது கதவு மீது படிந்திருந்த கைரேகைச் சுவடுகளைக் கண்டவர், அப்பகுதியை மட்டும் அறுத்து எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு போனார்.

குழந்தைகளின் தாய் பிரான்சிஸ்காவை வரவழைத்து அவரது கைரேகையை ஒரு காகிதத்தில் பதிவு செய்தார். அவளது வலதுகை பெருவிரல், கதவில் கண்ட விரலின் அடையாளத்தோடு பக்காவாக பொருந்தியது.

பிரான்சிஸ்கா தப்பிக்க வேறுவழியின்றி குழந்தைகளை வெட்டிக்கொன்றதாக அழுகையோடு ஒப்புக்கொண்டாள். கைரேகை கலையை இன்ஸ்பெக்டர் ஆல்வாரிஜ், போலீஸ் இலாகாவின் துப்பறியும் நிபுணரான ‘ஜப்வான் உசிடெக்’ என்னும் நண்பரிடம் இருந்து கற்றுக்கொண்டார். ஒரு கொலையை எந்தெந்த கோணத்தில் ஆராய வேண்டும் என அவர்கள் தீவிரமாக ஆராய்ந்தபோதுதான் ரேகைகள் விஷயம் அவர்களுக்குப் புலப்பட்டது. பிரான்சிஸ்கா ரோஜாஸ் கொலை வழக்குக்குப் பின்தான், கைரேகையால் குற்றமறிதல் உலகமெங்கும் பிரபலமானது.

1858ஆம் ஆண்டில் அரசு ஊழியரான வில்லியம் ஹெர்செல், இந்தியாவில் பணியாற்றியபோது ஒரு கட்டிட காண்ட்ராக்டரிடம் ஒப்பந்தம் போடும்போது, அவரது முழு கைவிரல்களையும் பத்திரத்தில் பதிவு செய்து அதன்கீழ் அவரது கையெழுத்தை வாங்கினார்.

இதன்பிறகு ஹெர்செல் பலருடைய கைரேகைகளை சேகரிக்கும் பழக்கத்தை பின்பற்றினார். பல வருடங்களுக்குப் பின்னால் ஹெர்செல் தீர்மானமாக ஒரு முடிவுக்கு
வந்தார். இறக்கும் வரை மனிதனின் கைரேகை மாறுவதே இல்லை என்பதுதான் அது.

1880ஆம் ஆண்டு ஹெர்செல் தனது பணியை முடித்துக்கொண்டு லண்டன் திரும்பினார். இவரது கைரேகை ஆராய்ச்சியைப் பற்றி டாக்டர் ஹென்றி  தனது ‘இயற்கை’ பத்திரிகையில் மிகவும் விரிவாக எழுதினார்.ஸ்காட்லாந்து பாதிரியார், ஜப்பானில் சேவை செய்துவந்தபோது, அங்குள்ள தொழிலாளர்கள் தங்களது கையெழுத்துக்குப் பதிலாக ரேகையைத்தான் பதிவு செய்கிறார்கள் என்றார்.

“வேலைகளில் ஈடுபடுவதால் வலதுகையில் ஈரம் கசிவது சாத்தியம். அதனால் இடதுகை விரல்களைத்தான் அவர்கள் பதிய வைக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் பாதிரியார் பால்ட்ஸ். ‘‘கைரேகைகளைப் போல ஒருவரை வேறு எந்த உறுப்பும் அடையாளம் காட்டிவிட முடியாது. திருட்டோ கொலையோ எதுவாயினும் முதலில் கைரேகைகளைப் பதிவு செய்து விசாரித்தால் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடலாம்.’’என்பது பால்ட்ஸின் கருத்து.

1901ஆம் ஆண்டிலிருந்து இந்த ‘கைரேகை’ விசாரணை சூடுபிடித்தது. கால்டல் ஹென்றி ‘ஸ்காட்லாந்து யார்டு’ துப்பறியும் பிரிவில் கைரேகைப்பிரிவை அங்க மாக்கினார்.ஒவ்வொரு விரலிலும் எத்தனை ரேகைகள் இருக்கின்றன என்பதனைத் துல்லியமாகக் கணக் கெடுத்தால் வேறுபாட்டை அறியலாம் என்று நிரூபித்தவர் கால்டல் ஹென்றி. அமெரிக்காவின் உளவியல் பிரிவில், 140 மில்லியன் கைரேகைகள் இருப்பதாக 20 ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி

ஓவியங்கள்: கதிர்