வரலாற்றை மாற்றிய 7 பெண்கள்!அண்மையில் பிபிசி ரேடியோ, கடந்த 70 ஆண்டுகளில் சமூகத்தில் மாற்றம்  ஏற்படுத்திய செல்வாக்கு பெற்ற பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாப் பாடகி பியான்ஸ், நாவலில் வரும் கற்பனை கதாபாத்திரமான பிரிட்ஜெட் ஜோன்ஸ் ஆகியோர் முதன்மை இடம் பெற்றுள்ளனர். பிபிசி ரேடியோ 4 வெளியிட்டுள்ள வுமன்ஸ் ஹவர் பவர் பட்டியலில் பாப் பாடகி பியான்ஸ், பெண்ணியலாளர் ஜெர்மைன் க்ரீர் உட்பட  7 பெண்களைத் தேர்ந்தெடுத்து வரிசைப் படுத்தியுள்ளனர்.

இதில் முதலிடம் வகிப்பவர் முன்னாள் இங்கிலாந்து பிரதமரான பரோனெஸ் தாட்சர். ஏறத்தாழ தன்னுடைய தடாலடி நடவடிக்கைகளால் ஒன்று பிறரால் நேசிக்கப்பட்டு அல்லது  வெறுக்கப்பட்டு  மக்களின் மனதில் வாழ்கிறார் என்பதால் அவருக்கு இந்த மரியாதை என்பது ஜட்ஜ்களின் வாக்கு.

இங்கிலாந்து ராணி மற்றும் தற்போதைய பிரதமரான தெரஸா மே ஆகியோருக்கு இதில் இடமில்லை. அதோடு, 1996 ஆம் ஆண்டு ஹெலன் ஃபீல்டிங் எழுதிய பிரிட்ஜெட் ஜோன்ஸ் டைரி எனும் நாவலின் கற்பனைப் பாத்திரமான பிரிட்ஜெட் ஜோன்ஸை தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

அனைவரும் திருமணம் செய்து பாதுகாப்பாக வாழும் உலகில் தனியொருவளாக சுதந்திரமாக வாழும் தன்மை கொண்டவள் ஜோன்ஸ் என்பதுதான் நீங்கள் அறியவேண்டியது. ஜெர்மைன் க்ரீர் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான போராட்டத்தில் தீயாய் போராடும் போராளி என்று கூறி 4வது இடமளித்திருக்கிறார்கள். அமெரிக்க பாப் பாடகி பியான்ஸ் உலகளாவிய க்யூட் அழகி என்பதால் 7வது இடம்.

காலை 10 மணிக்கு முன்னரே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி பக்கிங்ஹாம் மாளிகையில் ஒளிபரப்பப் பட்டது. அதோடு இந்த ஆண்டு வுமன் பவர் நிகழ்ச்சியின் 70 ஆவது பிறந்தநாளும் கூடத்தான்.

“ஒவ்வொரு ஆண்டும் வுமன் ஹவர் பட்டியலானது, சமூகத்தில்  கொண்டாடப் படுவதாகவும், குறிப்பிட்ட விவாதத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பது மகிழ்ச்சி. 70 ஆண்டுகளாக இங்கிலாந்து சமூகத்தில் மாற்றம் விளைவித்த பெண்களுக்கு உற்சாக ஏணி இந்நிகழ்வு” என உற்சாகம் பொங்க பேசுகிறார் நிகழ்ச்சியின் ஆசிரியரான அலைஸ் ஃபெய்ன்ஸ்டெய்ன்.

‘‘வரலாற்றில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பெண்களில் 7 பேரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான வேலை என நிகழ்வின் நீதிபதிகளே ஒப்புக்கொண்டார்கள்’’ என விமர்சனங்களை கருத்தாகப் பேசுகிறார் ஃபெய்ன்ஸ்டெய்ன்.

2013 ஆம் ஆண்டு இதற்கு முன்பு இப்பட்டியலில் இடம்பெற்ற கௌரவத்தைப் பெற்றவர்கள், ஸ்காட்லாந்து அமைச்சரான நிகோலா ஸ்டர்ஜியான், போராட்டக்காரர் பரோனஸ் லாரன்ஸ், இங்கிலாந்து ராணி ஆவர். பட்டியல் பெண்களை சின்ன இன்ட்ரோ பார்த்துவிடுவோம்

மார்கரேட் தாட்சர் (1925-2013)

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர்(1979-1990) அதோடு கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவராகவும்(1975-1990) இருந்தார். “சமூகம் என்பதே இங்கு கிடையாது. தனித்தனியான ஆண்கள், பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டுமே இங்குள்ளன” என திகில் சொல்வெட்டை கூறியவர். தாட்சரிஸம் என்று சொல்லும்படியாக சமரசமற்ற கொள்கைகளைக் கொண்ட இரும்பு மனுஷி. தாராள வணிகம், தனியார்மயம் ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை கொண்டவர் 87 வயதில் மறைந்தார்.
  
ஹெலன் ப்ரூக் (1907-1997)

இங்கிலாந்தில் பிறந்த ஹெலன், தனது 17வது வயதில் திருமணம் செய்துகொண்டு அத்திருமணம் தோல்வியில் முடிய, பின்னர் மறுமணம் செய்துகொண்டவர். குடும்ப நல அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு சட்டத்திற்குப் புறம்பான கருக்கலைப்புகளைத் தடுக்க வாழ்வையே அர்ப்பணித்தவர். 1964 ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்திருத்தத்திற்காக போராடியவர். இன்று இங்கிலாந்து பெண்களை தேவையற்ற கர்ப்பத்தை மாத்திரைகள் மூலம் தவிர்த்து நிம்மதி பெற ஒரே காரணம் ஹெலன் ப்ரூக்தான்.

பார்பரா கேஸ்டில் (1910-2002)

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் பெண எம்பியாக அதிக ஆண்டுகள் பணிபுரிந்த பெண்மணி இவர். இவர் சமூக நலத்துறையின் செயலாள
ராகப் பணிபுரிந்தபோது அமுல்படுத்திய பல்வேறு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்காக இன்றும் நினைத்துப் போற்றப்படுபவர். நாடாளுமன்ற கேன்டீனில் மலிவுவிலை போண்டா பஜ்ஜி கொரித்து விட்டு வராமல், 1970 ஆம் ஆண்டு பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான சம்பள சட்டத்திருத்தத்தைக்கொண்டுவர பாடுபட்ட உண்மையான செயல்பாட்டாளர்.
 
ஜெர்மைன் க்ரீர்

1939 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண்ணுரிமைப் போராளி தற்போது வசிப்பது இங்கிலாந்தில். பெண்களுக்கு பிரச்னை என்றால் ஷார்ட் கவுன் போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி ஷார்ப்பாக இரண்டில் ஒன்று பார்ப்பவர், பெண்கள் போராட்டம், மாற்றுப்
பாலினத்தவர்களுக்காக போராட்டம் என ஆல்டைம் பிஸி. பெண்ணியம், இலக்கியம், சூழல் என பல்வேறு துறைகளிலும் எக்கச்சக்க கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
ஜெயாபென் தேசாய்(1933-2010)

குஜராத்தில் பிறந்த புரட்சி நங்கை. முதலில் தையல் கலைஞராகப் பணியாற்றினார். பின் லண்டனில் உள்ள க்ரன்விக் திரைப்படச்சுருள் ஆய்வகத்தில் பணியாற்றினார். 1976ல் இவரை நிர்வாகம் ஓவர்டைம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்த, மறுத்தவர், பின் மற்றவர்களின் சிக்கல்களையும் கேட்டுத்தெரிந்துகொண்டு நிர்வாகத்துடனான போராட்டத்தை அறிவித்தார். சரியான கூலி, குறிப்பிட்ட வேலைநேரம், தொழிலாளர்களுக்கான உரிமைகள் இவைகளுக்கான போராட்டம் வெற்றியடைந்து இவருக்கும் புகழ் தந்தது.  

பிரிட்ஜெட் ஜோன்ஸ்

1995 ஆம் ஆண்டு இண்டிபென்டன்ட் பத்திரிகையில் இங்கிலாந்து எழுத்தாளர் ஹெலன் ஃபீல்டிங் பிரிட்ஜெட் ஜோன்ஸ் என்ற கதாபாத்திரத்தை பிரிட்ஜெட் ஜோன்ஸ் டைரி என்ற பத்தி எழுத்தில் அறிமுகப்படுத்தினார். ஒரு பெண்ணின் வாழ்வை நேரடியாக ப்பேசிய இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது.

பியான்ஸ்

1981 ஆம் ஆண்டு பிறந்த பாப்குயின். கருப்பினப்பெண்ணாக  19 ஆண்டுகள்  உழைப்பில் 100 மில்லியன் ஆல்பங்களை வெற்றிகரமாக விற்று சாதனை படைத்துள்ளார். தனது பாடல்களுக்காக 20 கிராமி விருதுகளைப் பெற்றுள்ள இவர், பெண்களின் சாதனை முயற்சிகளுக்கு குளோபல் அடையாளமாக இருக்கிறார் என்பதால் இவரை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். வெல்லட்டும் பெண்கள்!

- ச.அன்பரசு