விநோத கடல் பிராணிகள்



விண்ணை ஆராய்ந்து... இன்னும் ஆராய தொலை தூரம் வரை மனிதன் சென்றிருக்கிறான். ஆனால், ஆழ்கடலைப் பற்றி மனிதன் அறிந்தவை மிகக் குறைவே. அதிலும் நம்மை வியக்க வைக்கும் விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஆச்சரியம் தரும் சில கடல் பிராணிகள்...

சவப்பெட்டி மீன் (coffin fish):

இது தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா கடல்களில் அதிகம் காணப்படுகிறது. 15 செ.மீ. வரை வளரும். சிறிய கால்கள் போல் காட்சியளிக்கும் துடுப்புகளைக் கொண்டு தரையில் நடந்து செல்லும். இதனைக் ‘கை மீன்’ (hand fish) என்றும் சொல்வார்கள். எதிரி தாக்க வந்தால், அவசர அவசரமாக நிறைய தண்ணீரைக் குடித்து, உடலை உப்பச் செய்து விடும். இதன் உப்பிய உடலை எதிரியால் கடிக்க முடியாது.

விரியன் மீன் (viper fish):

இது இரண்டு அடி நீளம் வரை வளரும். உலகின் மூர்க்கமான கொலைகார மீன்களில் இதுவும் ஒன்று. இதற்கு பெரிய கண்களும் ஊசி போன்ற கூர்மையான பற்களும் உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை வாயைத் திறந்தபடியே வைத்திருக்கும். வாயை மூட முடியாத அளவுக்கு இதன் பற்கள் நீளமானவை. உணவே இல்லாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக் கூடிய ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு.

துடுப்பு மீன் (oar fish):

உலகின் நீளமான சதைப்பற்றில்லாத மீன் இது. இது 36 அடி நீளம் வரை வளரும். இதை ரிப்பன் மீன் என்றும் சொல்வார்கள். பாம்பின் உடல் போல் நீளமாய், உடல் முழுதும் நீண்டு செல்லும் சிவப்பு துடுப்புடன் இருக்கும். இந்த மீனை மக்கள் கடல் பாம்பு எனத் தவறாக நினைப்பதும் உண்டு.

 நீல வளைய ஆக்டோபஸ் (blue ringed octopus):

கடல் உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இதுதான். ஒரு கோல்ப் பந்து அளவே இருக்கும் இந்த ஆக்டோபஸின் நீளம் 58 அங்குலம் மட்டுமே. ஆள் சிறியதாக இருந்தாலும், இதன் விஷம் மனிதர்களைக் கூட கொல்லக் கூடிய அளவு கொடியது. இதன் விஷத்திற்கு மாற்று  மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ராட்சஸ கணவாய் (giant squid):

உலகின் மிகப் பெரிய விலங்குகளில் இதுவும் ஒன்று. சுமார் 46 அடி நீளம் வரை வளரும். 60 அடி நீளம் வரை வளரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் இதுவரை இல்லை. இதற்கு எட்டு ராட்சஸ கரங்கள் உண்டு. இவற்றின் நுனியில் உறிஞ்சும் கப்புகள் (suction cups) இருக்கும். இவற்றை இரையின் மேல் வைத்தால், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். கையில் சிக்கும் எதையும் விழுங்கி விடும். இந்த ராட்சஸ கணவாயை யாரும் உயிருடன் பார்த்ததில்லை.
 
கல்பர் விலாங்கு (gulpe reel):

இது மூன்று முதல் ஆறு அடி நீளம் வரை வளரும். இந்த விலாங்கு மீனுக்கு மிக மிகப் பெரிய வாய் உண்டு. பெரிய இரை வந்தாலும் இது தன் வாயை ஒரு வலை போல் விரித்து, இரையை நோக்கி நீந்தி கப்பென்று பிடித்துக் கொள்ளும். பெரிய இரையைத் தாங்கும் அளவு இதன் வயிறும் விரியும். இதற்கு நீண்ட, சாட்டை போன்ற வாலும் உண்டு.

தூண்டில் மீன்:

இந்தத் தூண்டில் மீனுக்கு அதன் உடலைப் போல் நான்கு மடங்கு நீளமான கயிறு போன்ற தூண்டில் அதன் மேல் தாடையில் உண்டு. அதை இரையின் மேல் வீசிப் பிடித்து இழுத்துச் சாப்பிடும்.

- பி.தஸ்மிலா, கீழக்கரை.