இனி சிக்குன் குன்யா முடக்காது!



வந்துவிட்டது தடுப்பூசி

இன்றைய தினம் உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நோய் எபோலா. இது, எபோலா என்னும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இதற்கு ரத்தக்கசிவுக் காய்ச்சல் என்று பெயர். இதற்கென்று தனியாக மருந்து, மாத்திரை எதுவும் இல்லை. ஆகவே, இது வந்துவிட்டால் மரணத்திலிருந்து மீள்வது சுலபமல்ல. இப்போது இது மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவி வருகிறது; அங்கிருந்து இங்கும் வந்துவிடுமோ என்னும் அச்சத்தில் உள்ளது  இந்தியா.

இதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன் குன்யா இந்தியாவில் பரவியது. பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். இந்த நோய்க்கும் சரியான மருந்து இல்லை, தடுப்பூசி இல்லை என்பதுதான் இன்று வரை இருந்த நிலைமை. இப்போது மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையாக சிக்குன் குன்யா காய்ச்சலுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்திருக் கிறார்கள்.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு சிக்குன் குன்யாவைக் கொஞ்சம் படித்து விடுவோம். முதன்முதலில் 1950ல் கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றிய சிக்குன் குன்யா, இன்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் பெரிய அளவில் பரவியுள்ளது. சிக்குன் குன்யா என்னும் வைரஸ் கிருமி மனிதரைப் பாதிப்பதால் இது வருகிறது. ‘ஏடஸ் எஜிப்தி’ (கிமீபீமீs ணீமீரீஹ்ஜீtவீ) எனும் கொசுக்களால் மற்றவர்களுக்குப் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே வாழும். பகலில்தான் கடிக்கும். ஒரு கடியிலேயே கூட வைரஸ் நம்மைத் தாக்கி நோய் வரலாம்.

நோயின் ஆரம்பத்தில் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வாந்தி, களைப்பு, தொண்டைவலி ஆகிய அறிகுறிகள் காணப்படும். நான்காம் நாளில் மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி அதிகரிப்பது இந்த நோயின் முக்கிய அறிகுறி. அதே நேரத்தில் உடல் முழுவதும் அம்மை போல் தோற்றமளிக்கும் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். ஒருசில வாரங்களில் காய்ச்சல் குணமானாலும் மூட்டுகளில் வலியும் வீக்கமும் பல மாதங்கள் நீடித்து மக்களை முடமாக்கி விடும்.

இதற்கு பிரத்யேகமாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்கவும் உடல்வலியைப் போக்கவும் ‘பாராசிட்டமால்’ மருந்து தருவார்கள். உடலில் நீரிழப்பு இருந்தால் குளுக்கோஸ் சலைன் ஏற்றுவார்கள். இதற்குத் தரப்படும் வலி மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, கொசுக்கடியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதும் கொசுக்களை ஒழிப்பதும்தான் இந்தக் காய்ச்சலைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழிகள். உடல் முழுவதையும் மறைக்கின்ற ஆடைகளை அணிவது மற்றும் கொசு விரட்டிகளை உபயோகிப்பதன் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.

வீட்டைச் சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர்கூட தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரைத் திறந்த பாத்திரங்களில் ஊற்றி வைக்காமல், மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றி வைப்பது நல்லது.

வீட்டிலுள்ள நீர்த்தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிஷனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.

குளியலறைத் தொட்டிகள், பால்கனி, சன்னல்களின் ‘சன்ஷேடு’கள், ஏர்கூலர், பூந்தொட்டிகள், அழகு ஜாடிகள், உடைந்த ஓடுகள், தகர டப்பாக்கள், தேங்காய்ச் சிரட்டைகள், டயர்கள், பிளாஸ்டிக் வாளிகள், பேப்பர் டம்ளர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுச்சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.

 வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர்நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது முக்கியம். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ப் புகைக்க கொசுக்கள் இறக்கும்.

‘இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை; இந்த நோய்க்கென்று தடுப்பூசி கண்டுபிடித்தால் ஒழிய சிக்குன் குன்யாவுக்கு விடிவே இல்லை’ என்று கருதி மருத்துவ உலகம் களத்தில் இறங்கியது. அந்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் (NIAID) நடத்தப்பட்ட ஆய்வில், சிக்குன் குன்யாவுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைக்கு தாமாக முன்வந்த 25 பேருக்கு அதனைச் செலுத்திப் பார்த்ததில் சிக்குன் குன்யா கிருமிகளை எதிர்ப்பதற்கான ஆற்றலை அந்த மருந்து உடலில் தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த ஜூலி லெட்ஜர்வுட், ‘‘பொதுவாக ஒரு தடுப்பூசி, அழிக்கப்பட்ட அந்த நோய்க் கிருமியிலிருந்து அல்லது உயிருள்ள, வீரியம் குறைக்கப்பட்ட கிருமியிலிருந்து தயாரிக்கப்படுவது வழக்கம்.

 ஆனால் இந்தத் தடுப்பூசியை, இந்த வைரஸின் மேல் உறையில் இருக்கும் புரத மூலக்கூறுகளை மட்டும் பிரித்தெடுத்துத் தயாரித்தோம். இதற்கு ‘மேலுறை மூலக்கூறுத் தடுப்பூசி’ (Virus like particle vaccine  VLP) என்று பெயர்.

வைரஸ் போல் பொய்த் தோற்றமளிக்கும் இந்த மூலக்கூறுகளுக்கு எதிராக தடுப்பணுக்கள் உருவாவது இதன் செயல்முறை. இதை ஒரு பரிசோதனை முயற்சியாக 23 பேருக்கு 5 மாத இடைவெளியில் மூன்று ஊசிகளும், இரண்டு பேருக்கு இதே இடைவெளியில் இரண்டு ஊசிகளும் போட்டோம்.

மூன்று ஊசிகள் போடப்பட்டவர்களுக்கு சாதாரண தொற்றுநோய்களுக்கு உண்டாவதைப் போலவே சிக்குன் குன்யா கிருமிகளை எதிர்ப்பதற்கும் தடுப்பணுக்கள் உருவாகியிருந்தன. இந்தத் தடுப்பூசியை இன்னும் மேம்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் போகிறோம்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

(இன்னும் இருக்கு)