முத்தான 3 விஷயங்கள்



அலைகள் ஓய்வதுண்டு!

இங்கிலாந்தை ஆண்ட அதிகாரச் செருக்கு மிகுந்த ‘கான்யூட்’ என்ற மன்னன், ‘‘அலை கடலே! பின்னே செல்’’ என்று கட்டளையிட்டானாம். ஆனால் மனிதனின் கட்டளைக்கு எல்லாம் கட்டுப்படுமா கடல் அலை? அவமானம் பிடுங்கித் தின்ன, திமிர் தொலைத்து மன்னன் நாடு திரும்பியதாக ஒரு கதையுண்டு. அந்த கான்யூட் மன்னன் செய்ய முடியாததை இன்றைய விஞ்ஞானிகள் சிலர் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் கடற்கரையில் ‘டோவர்’ என்பது முக்கியமான ஒரு துறைமுகம். அங்கே அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும். இதனால் கப்பல் போக்கு வரத்துக்கும் கப்பல்கள் துறைமுகத்தில் தங்குவதற்கும் அது இடையூறாக இருந்தது. இத்தொல்லையைக் குறைப்பதற்காக இரண்டு நீண்ட குழாய்களின் வழியே கடலுக்குள் அழுத்தமான காற்றைச் செலுத்துகிறார்கள்.

நீருக்குள்ளிருந்து வெளிவரும் அக்காற்று குமிழிகளாக மேலே வருகிறது. இதனால் கடலில் ஒரு கலக்கம் ஏற்படுகிறது. இது கப்பல்களைப் பாதிப்பதில்லை. ஆனால் கடலின் கொந்தளிப்பைக் குறைத்துவிடுகிறது.

அலைகளின் உயரம் பாதிக்கும் மேலாக குறைந்து விடுகிறது. அலைகளைத் தடுப்பதற்கென நிறைய செலவு செய்து ‘அலைத் தடை சுவர்களை’ எழுப்புகிறார்கள். அதற்குப் பதிலாக இந்தக் காற்றுக் குழாய்கள் அதே வேலையை திறமையுடனும் சிக்கனமாகவும் செய்து முடித்து விடுகின்றன. அலை கடலையும் அடக்கிவிட முடியும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அறிவியலால் சாதிக்கலாம் போல!

டாண்டலம்

கிரேக்க புராணத்தில் ஒரு சம்பவம். சீயஸ் கடவுளின் அன்பு மகனும் பிரிஜியன் அரசனுமான டாண்டலஸ் என்பவன் எல்லாக் கடவுள்களையும் அழைத்து விருந்து வைத்தான்.  உற்சாக மிகுதியில் டாண்டலஸ் தனது மகன் பெலாப்ஸையே உணவாகச் சமைத்து அவர்களுக்குப் பரிமாறினான். இதனை யறிந்த கடவுள்கள் டாண்டலஸை சபித்தார்கள்.

சாபமுற்ற டாண்டலஸ் பாதாள உலகில் கழுத்தளவு சுத்தமான நீரில் வீழ்ந்தான். அவன் தலைமீது பழுத்த சுவைமிக்க கனிகளைத் தாங்கிய மரக்கிளையொன்று ஆடிக் கொண்டிருந்தது. தாகம் தணிக்க டாண்டலஸ் வாயைத் திறந்தால் நீர் விலகிப் போகும். பசிக்குப் புசிக்கப் பழங்களைப் பறிக்கக் கைகளை உயர்த்தினால் மரக்கிளை உயர்ந்துவிடும். அதுமட்டுமா? அவன் தலைக்கு நேரே ஒரு பாறை எந்த விநாடி விழுமோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கிரேக்க புராணத்தில் டாண்டலஸின் வேதனை இவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.

இனி அறிவியல் யுகத்துக்கு வருவோம். ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரஸ் எக்பர்க் என்னும் விஞ்ஞானி ஒரு புதிய பொருளின் ஆக்ஸைடை அமிலத்தில் கரையச் செய்து சோதித்துக் கொண்டிருந்தார். புதிய பொருளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று எண்ணும்போதெல்லாம் ஏமாற்றமே ஏற்படும். பலமுறை இவ்வாறு முயன்றும் வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமடைந்த ஆண்ட்ரஸ்ஸுக்கு டாண்டலஸ் மன்னன் அவதிப்பட்டது நினைவுக்கு வந்தது. 1802ல் தாம் கண்டறிந்த புதிய பொருளுக்கு ‘டாண்டலம்’ என்றே பெயர் சூட்டினார்.

கொடுஞ் செயல் புரிந்த டாண்டலஸின் பெயரைக் கொண்டிருந்தாலும் டாண்டலம் மனித குலத்திற்கு பல அரிய பணிகளைச் செய்து வருகிறது. அமிலங்கள் தயாரிப்பில் டாண்டலம் கை கொடுக்கிறது. மருந்துகள் தயாரிப்பிலும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் அறுவை சிகிச்சைகளிலும் டாண்டலம் பயன்படுகிறது. கம்ப்யூட்டர் துறையிலும் டாண்டலம் கம்பிகளின் பங்கு மகத்தானது.

வேண்டாமே குளிர்பானம்


வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க இன்று பெரும்பாலானோர் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களையே பெரிதும் விரும்பி அருந்துகின்றனர். 250 மி.கிராம் குளிர்பானம் குடித்தால் 105 கலோரி சக்தியும் 26.5 கிராம் சர்க்கரைச் சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கிறது. பழச்சாறு குடித்தால் 110 கலோரி சக்தியும் 26 கிராம் சர்க்கரைச் சத்தும் கிடைக்கிறது. மேலும், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் பருமனும் இதய நோய்களும் பாதிக்கும் ஆபத்து இருப்பதாக கலாஸ்கோவ் பல்கலைக்கழக இதய நோய் மற்றும் மருத்துவ அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டு, இளநீர், பதநீர், பழங்கள், நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு பழச்சாறுகளைச் சாப்பிட்டு கோடையில் உடல்நலனைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வது நல்லது.

நெ.ராமன், சென்னை.