இதுவரை நாடாளுமன்ற தேர்தல்கள்



* முதல் பொதுத்தேர்தல் 1951 அக்டோபர் தொடங்கி 1952 ஏப்ரல் வரை ஏழு மாதங்கள் நடந்தது. தமிழகத்தில் மட்டும் 1952 ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய ஒன்பது நாட்கள் வாக்குப் பதிவு நடந்தது.

* தேர்தலில் சில சமயங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை எழுவது உண்டு. அவசர நிலைக்குப் பிறகு 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்திக்கு எதிரான அலை உருவானதால் மத்திய ஆட்சியைக் காங்கிரஸ் இழந்தது.

அகில இந்திய அளவில் இந்திரா காந்திக்கு எதிரான அலை தென் மாநிலங்களை பாதிக்கவில்லை. இதேபோல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் காங்கிரசுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசியது. எனினும் அது ஆந்திர மாநிலத்தைப் பாதிக்கவில்லை. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் காங்கிரசுக்கு பெரிய ஆதரவு அலை எழுந்ததால் 543க்கு 415 இடங்களைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது, காங்கிரஸ்.

* நிலையான ஆட்சி என்பது காங்கிரசின் நிரந்தர கோஷமாக இருந்து வந்துள்ளது. 1971ல் ‘வறுமையே வெளியேறு...’ என்ற கோஷத்தை இந்திரா காந்தி முன் வைத்தார். 1977 தேர்தலில் ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா’ என்ற கோஷம் பிரபலமானது. அதேசமயத்தில் ஜனநாயக மீட்பு, இரண்டாவது சுதந்திரப்போர் என்று எதிர்க்கட்சிகள் முழங்கின.

* முதல் பொதுத் தேர்தலின்போது ஜவஹர்லால் நேரு ஒன்பது வார காலம் பிரசாரம் செய்தார். விமானத்தில் 25,000 மைல், காரில் 5200 மைல், ரயிலில் 1600 மைல், படகு மூலம் 90 மைல் தூரம் பயணித்து பிரசாரம் செய்தார்.

* அப்போதெல்லாம் பெரிய தலைவர்கள் பேசும் கூட்டங்களில்தான் மைக் பயன்படுத்தப்பட்டது. ஸ்டூலில் ஏறி நின்று மெகா போன் மூலமும் வாய் மொழியாகவும் உரத்த குரலில் பிரசாரம் செய்தார்கள்.

* 1952 ஏப்ரல் 17ம் தேதி மக்களவை செயல்பாட்டுக்கு வந்தது. இதன் முதல் கூட்டம் 1952 மே 13ம் தேதி நடந்தது. துவக்கத்தில் முதல் இரண்டு வருடங்கள் இது ‘ஹவுஸ் ஆஃப் தி பீப்பிள்’ என்றே அழைக்கப்பட்டிருந்தது. பிறகு 1954 மே 14 முதல் இது லோக்சபை என்று பெயர் மாற்றம் பெற்றது.

* மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவர். இவருக்கு காபினெட் அமைச்சரைப் போன்ற அந்தஸ்து உண்டு.

* மக்களவை வரலாற்றில் நான்காம் சபை வரை எதிர்க்கட்சிக்கென அதிகாரபூர்வமாக தலைவர் எவரும் இருந்ததில்லை. ஒரு கட்சிக்கு மக்களவையில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்னும் தகுதி கிடைக்க சபையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு இடங்களையாவது அக்கட்சி பெற்றிருக்க வேண்டும்.

* காங்கிரஸ் தலைவர் டாக்டர். ராம் சுபக் சிங்கே மக்களவையின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.

* மக்களவையின் முதல் சபாநாயகர் ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956). ஜி.வி.என்ற எழுத்துக்கள் கணேஷ் வாசுதேவ் என்ற பெயர்களைக் குறிக்கும்.

* இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் சர்தார் பட்டேல் (1947-1950). அப்போது நேரு பிரதமராக இருந்தார். கடைசியாக 2002-2004 ல் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் தலைமையில் எல்.கே.அத்வானி துணைப் பிரதமராக பணியாற்றினார்.

* ஜவஹர்லால் நேரு 1947லிருந்து 1964 வரை மிக அதிக காலம் பிரதமராக இருந்தார். மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் சரண்சிங் (5 மாதம் 17 நாட்கள்)
* பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவ கௌடா.

* 1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசின்     பதவியேற்பு நிகழ்ச்சிகள் மகாத்மா காந்தியின் சமாதியிடமான ராஜ்காட்டில் நடைபெற்றது.

* பிரதமர் பதவியேற்ற மிக வயதான நபர் மொரார்ஜி தேசாய்; வயது 81. குறைந்த வயதில் பிரதமரானவர் ராஜீவ் காந்தி; வயது 40.

* இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 1999ல் நடந்த தேர்தலில்தான் மிகக் குறைவான இடங்களைப் (112) பெற்றது.

* தேர்தல் கமிஷன் என்பது நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்கள் மட்டுமல்லாது குடியரசுத் தலைவர்,  குடியரசுத் துணைக் தலைவர் தேர்தல்களையும் கண்காணிக்கும் தன்னிச்சையான அமைப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேவை ஏற்படின் பிற ஆணையர்களையும் குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார். முதல் தலைமைத் தேர்தல் கமிஷனர் சுகுமார் சென் (1950-1958).

* 1994 வரை தலைமை தேர்தல் ஆணையர் பதவி மட்டுமே இருந்தது. 1995ல் மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவியேற்றனர்.

 * இதுவரை மக்களவை தேர்தல் விவரம்- மொத்த வாக்காளர் எண்ணிக்கை (கோடியில்) மற்றும் வாக்கு சதவீதம் (அடைப்புக் குறிக்குள்) வருமாறு :
1952 - 17.32     (44.87)
1957 - 19.37     (45.44)
1962 - 21.64     (55.42)
1967 - 25.02     (61.04)
1971 - 27.42     (55.27)
1977 - 32.12     (60.49)
1980 - 35.62     (56.92)
1984 - 40.04     (64.01)
1989 - 49.89     (61.95)
1991 - 51.15     (55.71)
1996 - 59.26     (57.96)
1998 - 60.59     (57.94)  
1999 - 61.96     (59.99)
2004 - 67.15     (58.3)
2009 - 71.00     (58.43)

* 2014 தேர்தலில் 81.5 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 9.7 கோடி பேர் புதிய வாக்காளர்கள். 42.7 கோடி பேர் ஆண்கள். 38.8 கோடி பேர் பெண்கள். 28,341 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

க. ரவீந்திரன், ஈரோடு.