கம்பு



சிறப்புமிக்க சிறுதானியங்கள்

மல்லிகா பத்ரிநாத்

கம்பும் கேழ்வரகும் நமது நாட்டில் எப்போதும் செழித்து வளரும் சிறுதானியங்கள். உஷ்ணப் பிரதேசத்தில் வளரும் இந்தத் தானியங்களுக்கு தண்ணீரும் அதிகம் பாய்ச்சத் தேவையில்லை. பஞ்சம் வந்தபோது கை கொடுத்தது இந்த சிறுதானியங்கள்தான். அரிசியும் கோதுமையும் சோளமும் குறைவான தண்ணீர் விட்டால் விளையாது.

தினமும் காலையில் கம்பும் மாலையில் கேழ்வரகும் சாப்பிடும்போது இருவேளை உணவிலேயே எல்லா சத்துகளும் கிடைத்தன. காய்கறிகள், பழங்கள் உண்ணாமலே சத்துகள் கிடைக்கும்போது இது ஏழைகளின் நல்ல உணவாக நினைத்திருந்த காலம் போய் இப்போது ஆரோக்கியத்துக்காக எல்லோரும் உண்ண வேண்டுமென நினைக்கிறோம்.

அரிசி மற்றும் கொழுப்பான உணவு உட்கொள்வதால் சிறுவயதிலேயே பலவித ஆரோக்கியக் குறைபாடுகள் வருகின்றன. இதைத் தவிர்க்க, நமது உணவுப் பழக்கத்தை சிறிது மாற்றினாலே போதுமானது.கி.மு. 2500 ஆண்டுக்கு முன்பிருந்தே ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கம்பு உண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

அமெரிக்காவில் 1890ல்தான் கம்பு பயிரிட்டார்கள். பிரேசில் போன்ற நாடுகளில் 1960க்குப் பிறகுதான் இதன் அருமை அறிந்து பயிரிட்டார்கள். இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சிறுதானியங்களை உபயோகிப்பது இன்றும் பழக்கத்தில் உள்ளது. அவர்கள் பாஜ்ரா ரொட்டி (Bajra Roti) தினமும் காலை உணவுக்கு உண்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் கம்பை கம்பஞ்சோறு, களி போன்ற உணவுகளாக அதிகம் உண்டார்கள். கம்பையும் கேழ்வரகையும் ஒப்பிடும்போது...

*இரண்டிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

*ட்ரைகிளிசைரடு (triglycerides) என்னும் கொழுப்பையும் கொலஸ்டிராலையும் அதிகப்படுத்தும் ‘க்ளுட்டன்’ என்னும் பசைத்தன்மை கொண்ட ஸ்டார்ச்சும் அறவே இல்லை.

*இதைப் பயிரிட தனியான பருவம் தேவையில்லை. ஆண்டு முழுவதுமே பயிரிடலாம்.

*எடை குறைய இந்த சிறுதானியங்கள் உதவி புரியும்.

*மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது நல்ல புரதச்சத்து கொண்டது. முக்கியமாக அமினோ அமிலங்கள் உள்ளன.

*பலருக்கும் இப்போது ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை வராமல் தடுக்கும் இயல்புடையது.

*அமிலத்தன்மை உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் ஏப்பம், வயிற்றுப் பொருமல் போன்றவை கம்பும் கேழ்வரகும் சாப்பிடும்போது ஏற்படாது.

*இரண்டுமே உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். இதயத்துக்கு நல்லதே செய்யும்.

*மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

*புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

*இரண்டிலுமே ‘க்ளைஸிமிக் இண்டெக்ஸ்’ குறைவு என்பதால், நீரிழிவு வராமல் தடுக்க இயலும். கம்பில் இரும்புச்சத்தும் கேழ்வரகில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பால், தயிர், பலவித காய்கறிகள், பழங்கள் சாப்பிடாமலே கீரையை மட்டும், இதோடு சேர்த்து உண்ணும்போது ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இதில் இருக்கும் சத்துகள் தனித்தனியாக நமக்கு எப்படி உதவி புரிகின்றன என்று தெரிந்துகொள்வோமா!

* இதில் ‘க்ளுட்டன்’ அறவே இல்லாததால் ‘சிலியாக்’ என்னும் கோதுமை அலர்ஜி இருப்பவர்கள் உண்ண இயலும்.

*நயாசின் மற்றும் ஃபோலிக் ஆஸிட் இரண்டும் கொலஸ்டிராலை குறைக்கும்.

*இதில் உள்ள நார்ச்சத்து குடலின் விரிந்து சுருங்கும் தன்மையை அதிகரிக்கும். அதனால் மலச்சிக்கல் வராது.

*பித்தப்பை சுரக்கும் பித்தநீரை குறைவாகச் சுரக்கச் செய்யும். அதனால் மண்ணீரல் கற்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மை உடையது.

*மக்னீசியம் சத்து சரிவர கிடைக்கும்போது, உடலில் ஏறத்தாழ 300 என்சைம்கள் உற்பத்தி ஆகும். அதனால் கணையத்திலிருந்து இன்சுலின் நன்கு சுரக்க உதவுவதால் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவி புரியும். சிறுவயதில் இருந்து உண்ணும்போது நீரிழிவை வராமலே தடுக்க இயலும். ஆஸ்துமா வராமல் தடுக்கவும் உதவும். மைக்ரேன் (விவீரீக்ஷீணீவீஸீமீ) தலைவலி வராமலிருக்கவும் உதவி புரியும்.

*மற்ற தானியங்களைவிட சிறுதானியங்களில் ஆக்ஸிகரிணிகள்  (Antioxidants)  அதிகம் உள்ளதால் ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை பிரச்னைகளை தடுக்கும் தன்மை அதிகம். கேன்சர் போன்றவை வரும் வாய்ப்பும் குறையும்.

*நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதால் காச நோய், குழந்தையின்மை, தூக்க மின்மை, வலிப்பு நோய், ஒவ்வாமை நோய்களைத் தவிர்க்கலாம்.

*இதிலுள்ள பாஸ்பரஸ், உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் நல்ல சத்துள்ள செல்லாக உருவாகவும் எலும்பின் அடர்த்திக்கும் உதவும். டி.என்.ஏ. ஆரோக்கியமாக இருக்க உதவும். கொழுப்பின் வளர்சிதை மாற்றத்துக்கு அவசியம் தேவை. நரம்பு மண்டலம் நன்கு இயங்க உதவும் இந்த தாது உப்பு, கம்புவில் தேவைக்கு ஏற்ப உள்ளது.

*ரத்தசோகை வராமல் தடுக்கும் இரும்புச்சத்து அதிகமுள்ள தானியம் கம்பு. ரத்தசோகை உள்ள குழந்தைகள் நோஞ்சானாகவும் எப்போதும் சோர்ந்தும் காணப்படுவர். இதோடு துத்தநாகமும்   (Zinc)   இந்த சிறுதானியத்தில் நன்கு உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.

நோய்க்கிருமிகள் உடலில் நுழையும்போது எதிர்ப்புத் திறனைக் கொடுக்க, துத்தநாகத்தின் பங்கு மிக முக்கியமானது. சிறுவர், சிறுமியர் மட்டுமல்ல... கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் அடிக்கடி கம்பு உண்ணும்போது, ரத்தசோகை வராமலே தடுக்க இயலும். வந்த பிறகு மாத்திரைகள் இல்லாமலே குணப்படுத்தவும் இயலும்.

*உடலில் ட்ரைகிளிசைரடு (triglycerides) அதிகம் இருக்கும்போது, புரதமானது உறிஞ்சப்படாமல் சிறுநீரில் வெளியேறும். அப்படிப்பட்டவர்களுக்கு கம்பு மிக உதவியாக இருக்கும்.

*இதில் ஓரளவு கால்சியமும் உள்ளதால் பற்கள், எலும்புகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் உதவும்.

*சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இந்தத் தானியத்தை தினமும் உட்கொள்ளாமல், 10 நாட்களுக்கு ஒருமுறை எடுக்கலாம். இதில் யூரிக் ஆஸிட் உள்ளதால், பிரச்னை அதிகரிக்க வாய்ப்புண்டு. இதை உண்டால் சிறுநீரகக்கல் வரும் என்பதில்லை. எனினும் சிறுநீரகக் கல்லால் அவதிப்படுபவர்கள் மட்டும் குறைத்தல் நலம்.

எல்லா ஊட்டச்சத்துகளும் நிரம்பிய இந்த கம்பு நமக்கு முழு தானியமாகவும் ரவையாகவும் மாவாகவும் சேவை/ சேமியா போலவும் கிடைக்கின்றன. இதை பலவிதமாக தினமும் சமைத்து உண்டு ஆரோக்கியமாக வாழலாமே!

சிறுதானிய ரெசிபி கம்பங்களி

கம்பை சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். சிறிய மிக்ஸியில் விட்டு விட்டு இயக்கி ரவை போல ஆக்கவும். 1 டம்ளர் ரவைக்கு, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

உப்பு சேர்த்து உருண்டைகளாக்கி வைக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கருப்பு எள் துவையல் ருசியாக இருக்கும். அதிக கால்சியமும் சேரும். கருப்பு எள்ளுடன் உப்பு, மிளகு சேர்த்து நன்கு பொரியும்படி வறுத்த பின், துவையலாக இடித்துப் பரிமாற ருசியாக இருக்கும்.

என்ன சத்து? 100 கிராம் கம்புவில்...

புரதம்    11.6 கிராம்
கொழுப்பு    5.0 கிராம்
தாதுக்கள்    2.3 கிராம்
நார்ச்சத்து    1.2 கிராம்
மாவுச்சத்து 67.5 கிராம்
ஆற்றல் (கலோரி) 361 கிலோ கலோரிகள்
கால்சியம்     42 மி.கிராம்
பாஸ்பரஸ்      296 மி.கிராம்
இரும்புச்சத்து 800 மி.கிராம்.

(சத்துகள் பெறுவோம்!)