குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?



நோய் அரங்கம்

டாக்டர் கு.கணேசன்

வயிற்றில் உண்டாகும் நோய்களில் வயிற்றுக்கு வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன.அவற்றுள் ‘குடல் இறக்கம்’ முக்கியமானது. சிலருக்கு குடலின் ஒரு பகுதி, வயிற்றுக்கு முன்புறம் உள்ள தசைச் சுவரின் வலு குறைந்த பகுதி வழியாக வெளியே பிதுங்கித் தெரியும். அதைத்தான் ‘குடல் பிதுக்கம்’ அல்லது ‘குடல் இறக்கம்’ (Hernia) என்று அழைக்கிறோம்.

குழந்தைகள் ஊதி விளையாடும் சாதாரண பலூனை பார்த்திருப்பீர்கள். பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால், ஒரே சீராக விரிவடையும். ஆனால், சில பலூன்களில் ஒன்றிரண்டு இடங்களில் இயல்புக்கு மீறி புடைப்பதையும் பார்த்திருப்பீர்கள். பலூனில் வலுவிழந்த பகுதிகளில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது இந்தப் புடைப்பு அல்லது பிதுக்கம் ஏற்படுகிறது. இதுமாதிரிதான் நம் வயிற்றிலும் குடல் பிதுக்கம் ஏற்படுகிறது.

வயிற்றின் அமைப்புவயிறு மற்றும் முதுகுப் பகுதிகள் பல தசைகளால் ஆனவை. இவற்றில் முதுகுப்பகுதி உறுதியான முதுகெலும்பு மற்றும் வலு மிகுந்த தசைகளால் ஆனது. எனவே, குடலானது வயிற்றின் பின்புறமாக  பிதுங்குவதற்கு வழியில்லை. ஆனால், வயிற்றுப்பகுதியோ சற்றே வலுக்குறைந்த தசைகளால் ஆனது.

வயிற்றுக்குள் உள்ள உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு ஒரு சுவர் போல் அமைந்திருக்கும் இத்தசைகள், நாம் சுவாசிக்கும்போது உப்பி மீண்டும் பின்னிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்கு உதவும் வகையில் இந்தத் தசைகள் அமைந்துள்ளன. இவற்றில் சில தசைப்பகுதிகள் மட்டும் நம் உடற்கூறு அமைப்பின்படி வலு குறைந்து காணப்படுகின்றன. இவ்விடங்களில்தான் குடல் இறக்கம் ஏற்படுகிறது.

குடல் இறக்கம் ஏற்படும் பகுதிகள்

1. ‘கவட்டைக் கால்வாய்’ பகுதி (Inguinal region): வயிற்றில் உள்ள உறுப்புகள் ஒரு மெல்லிய உறையால் சூழப்பட்டுள்ளது. இதற்கு ‘வயிற்றறை உட்சுவர்’ (Peritoneum) என்று பெயர். இந்தச் சுவரின் கீழ்ப்பகுதியில், அதாவது, வயிறும் தொடையும் இணைகிற இடத்தில், ‘கவட்டைக் கால்வாய்’ உள்ளது.

வயிற்றையும் விரைப்பையையும் இணைக்கின்ற பாதை இது. ஆண்களுக்கு இதன் வழியாக வயிற்றிலிருந்து விந்துக்குழாய், விரைக்கு ரத்தம் வழங்கும் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் ஆகியவை விரைப்பைக்குச் செல்கின்றன. பெண்களுக்கு கருப்பையின் ‘உருண்டைப் பிணையம்’ (Round ligament) இதன் வழியாகச் செல்லும்.

பொதுவாக, ஆண்களுக்குக் கவட்டைக் கால்வாய் மிகவும் இறுகலாக இருக்கும். விந்துக்குழாய், விரை ரத்தக்குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் தவிர வேறு எந்த உறுப்பும் இதன் வழியாக வெளியே வர முடியாது.

சில நேரங்களில் வயிற்றறை உட்சுவர் தளர்ந்து போகும்போது, கவட்டைக் கால்வாயும் சற்று தளர்ந்து போகும். இதன் விளைவாக, வயிற்றிலிருந்து குடலின் ஒரு பகுதியும் வயிற்றுக் கொழுப்புறையும் (Omentum) கவட்டைக் கால்வாயைத் துளைத்துக் கொண்டு விரைப்பைக்குள் பிதுங்கும். இது ஆரம்பத்தில் விரைப்பையின் மேல்பகுதியில் ஒரு எலுமிச்சைப் பழம் அளவுக்குப் புடைப்பாகத் தெரியும்.

இதைத்தான் ‘கவட்டைக் குடல் இறக்கம்’ (Inguinal hernia) என்கிறோம். பெண்களுக்குப் பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் இப்புடைப்பு தெரியும். இந்தக்குடலிறக்கம் ஆண்களுக்கு 90 சதவிகிதமும் பெண்களுக்கு 50 சதவிகிதமும் ஏற்படுகிறது.     

2. மேல் தொடைப் பகுதி (Femoral region): மேல் தொடையும் முன்புற இடுப்பும்
இணைகின்ற இடத்தில்  ‘தொடைக் கால்வாய்’ (Femoral canal) உள்ளது. இதன் வழியாக வயிற்றிலிருந்து காலுக்கு ரத்தக்குழாய்களும், நரம்புகளும், நிணநீர்க்குழாய்களும் செல்கின்றன. சிலருக்கு இதன் வழியாகவும் குடல் இறங்கி விடும். இந்த நிலைமையை ‘தொடைக் குடல் இறக்கம்’ (Femoral hernia) என்கிறோம்.

3. தொப்புள் பகுதி (Umblical region): சிலருக்கு வயிற்றில் உள்ள தொப்புள் வழியாகக் குடல் இறங்கிவிடும். இதற்குத் ‘தொப்புள் வழிக் குடல் இறக்கம்’(Umbilical hernia)  என்று பெயர்.

4. ஏற்கனவே வயிற்றில் ஏதாவதுஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பு வழியாகவும் (Operative scar) குடலிறக்கம் ஏற்படலாம். காரணம், இவர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது தையல் போட்டிருப்பார்கள். நாளடைவில்,இந்தத் தையல் போடப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அப்படிப் பலவீனம் அடைந்துவிட்டால், அந்தப் பகுதிக்கு அருகில், வயிற்றிலிருக்கும் பகுதிகள் அந்தத் தழும்பு வழியாக வெளிப்பக்கத்தில் புடைக்கும். இதற்குத் ‘வெட்டுவழிக் குடல் இறக்கம்’ (Incisional hernia) என்று பெயர். பெண்களுக்கு இவ்வகை குடலிறக்கம் அதிகமாக வருகிறது. காரணம், இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது ‘சிசேரியன் அறுவை சிகிச்சை’ செய்யப்படுவதாலும், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாலும் ‘வெட்டுவழிக் குடலிறக்கம்’ ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன.

5. இதுபோல ஏற்கனவே குடல் இறக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பிலேயே மீண்டும் குடல் இறக்கம் (Recurrent hernia)ஏற்படுவதும் உண்டு.காரணம் என்ன?ஆண், பெண், குழந்தை, இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர் என்று எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல்
அனைவருக்கும் குடல் இறக்கம்ஏற்படலாம். என்றாலும் இது ஏற்படுவதெற்கென்று சில காரணங்கள் உள்ளன. அவற்றையும் தெரிந்து கொள்வோம்.

வயிற்றுக்குள் அழுத்தம் அதிகமானால் குடல் இறக்கம் ஏற்படும். அளவுக்கு மீறிய உடற்பருமன் இதற்கு நல்ல உதாரணம். தொப்பை உள்ளவர்களுக்கு வயிற்றுத்தசைகளில் கொழுப்பு சேர்வதால் அங்கு அழுத்தம் அதிகரித்துஅத்தசைகள் வலுவிழக்கின்றன. இதனால் தொப்பை உள்ளவர்களுக்கு குடல் இறக்கம் உண்டாகிறது. வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் அவற்றின் அழுத்தம் காரணமாக குடல் இறக்கம் ஏற்படுவதுண்டு.

ஆஸ்துமா, தீராத இருமல், அதிக பளுவான பொருளை திடீரெனத்தூக்குதல், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், சிறுநீர்த்துளை அடைத்துக் கொள்வது, புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்வது போன்ற நிலைமைகளில் குடல் இறக்கம் உண்டாகும்.அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும்போது குடல் இறக்கம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

எப்படியெனில், மலச்சிக்கலின்போது முக்கி மலம் கழிப்பதால்,வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. இது நாளடைவில் வயிற்றறை உட் சுவரைத் தளர்ச்சி அடையச் செய்கிறது. இது குடல் இறக்கத்துக்கு வழி அமைக்கிறது.

அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு குடல் இறக்கம் உண்டாகலாம். முதுமை காரணமாக வயிற்றறைச்சுவர் தளர்ந்து போகலாம். இதனால் வயதானவர்களுக்கும் குடல் இறக்கம் ஏற்படலாம். குழந்தைகளுக்குப் பிறவியிலேயேகூட குடல்இறக்கம் (Congenital hernia) ஏற்படுகிறது.அறிகுறிகள் எவை?

நாம் ஏற்கனவே சொன்ன வயிறு, தொடை, விரை, தொப்புள், தழும்பு போன்ற பகுதிகளில் ஒரு சிறிய எலுமிச்சைப் பழம் அளவுக்குப் புடைப்பு
தெரிவது இந்த நோயின் ஆரம்பஅறிகுறி. அப்போது இந்தப் புடைப்பைத் தொட்டால் வலி இருக்காது. இதை வயிற்றுக்குள் தள்ளினால் உள்ளே சென்று
விடும். அல்லது படுக்கும்போது அதுவாகவே வயிற்றுக்குள் சென்றுவிடும்.

இந்த நிலைமையில் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் நல்லது. இல்லையென்றால், இது நாளடைவில் மாம்பழம் அளவுக்குப் பெரிதாகிவிடும். இப்போது இது வயிற்றுக்குள் திரும்பிப் போக முடியாத அளவுக்கு வீங்கி,குடலில் அடைப்பை ஏற்படுத்தும்.இதனால் புடைப்பில் வலி தொடங்கும். வயிறு உப்பும். வயிற்றிலும் வலி உண்டாகும். வாந்தி வரும். மலம் போக சிரமப்படும். மலவாய்க் காற்று போகாது. இது ஆபத்தான நிலைமையாகும். இந்த நிலைமையை உடனே கவனிக்கத் தவறினால், குடலில் ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகிவிடும். இதனால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து வரும்.

சிகிச்சை முறைகள்

குடல் இறக்கத்துக்கு மருந்து, மாத்திரை இல்லை. அறுவை சிகிச்சை ஒன்றுதான் முழுமையான தீர்வு தரும். இதற்கான சிகிச்சைகளில் பல முறைகள் உள்ளன. குடல் இறக்கம் ஏற்பட்டுள்ள இடத்துக்குத் தகுந்தாற்போல் அறுவை சிகிச்சைமுறை மாறும். மேலும், வயதுக்கு ஏற்றாற்போலவும் தசை வலுவிழப்புத் தன்மையைப் பொறுத்தும் சிகிச்சைமுறை மாறுபடும்.

இந்த நோயின் ஆரம்பநிலையில் அறுவை சிகிச்சை செய்வது மிக எளிது. பொதுவாக நோயாளி நன்கு பரிசோதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவரா என்று மார்பு எக்ஸ்-ரே, இதயமின்னலை வரைபடம், வயிற்று ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் போன்றவற்றின் வழியாக உறுதி செய்த பிறகே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு சிகிச்சை100 சதவிகிதம் வெற்றியடையும். அறுவை சிகிச்சை செய்து கொள்ள தாமதம் செய்கிறவர்களுக்கு ஆபத்துகளும் அதிகம்; மீண்டும் குடல் இறக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் அதிகம்.

குடல் இறக்கப்பை வெட்டறுவை (Herniotomy): குழந்தைகள் மற்றும் நல்ல வலுவுள்ள இளைஞர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படு
கிறது. வயிற்றைத் திறந்து, குடல்இறக்கம் உள்ள பையைக் கண்டுபிடித்து, இது வந்த துளை வரை திறந்து, பிரித்து, அதனுள் உள்ள குடலையும் மற்றவை
களையும் வயிற்றுக்குள் தள்ளிவிட்டு துளையைத் தைத்து மூடிவிடுவார்கள். மீதி உள்ளவற்றை வெட்டியெடுத்து விடுவார்கள். இவர்களுக்கு தசைப்பகுதிகள் கெட்டியாக இருக்கும் என்பதால் இவ்வாறு சிகிச்சை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்ததும்இச்சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

குடல் இறக்கத் தசை சீர்திருத்த அறுவை சிகிச்சை (Herniorrhaphy):  நடுத்தர வயதினருக்குத் தசை மற்றும் தசைநார்கள் வலுவிழந்து இருந்தால் ‘புரோலின் இழை’ (Prolene)  கொண்டு அந்தத் தசைகளைத் தைத்து சீர்படுத்துவார்கள். குடல் இறக்கத் தசை வலுவூட்ட அறுவை சிகிச்சை (Hernioplasty): மிகவும் வயதானவர்களுக்கும் புரோலின் இழை கொண்டு தசைகளைத் தைத்துவலுப்படுத்த இயலாதவர்களுக்கும்‘புரோலின் வலை’யை (Prolene mesh) அத்
தசைகளுக்கு இடையில் வைத்துத் தைத்து வலுப்படுத்துவார்கள். இந்த வலையின் இடைவெளியில் வளரும் தசைகள் இறுக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தசைகள் பலவீனப்படுவது தடுக்கப்படும்.

நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopic surgery): இதுவரை சொன்ன அறுவை சிகிச்சைமுறைகள் அனைத்தும் வயிற்றைத் திறந்து செய்யும் சிகிச்சை
முறைகளாகும். இப்போது பிரபலமாகி வரும் ‘லேப்ராஸ்கோப்பி’ முறையில் வயிற்றைத் திறக்காமல், சில துளைகள் மட்டும் போட்டு குடல் இறக்கம் சரி
செய்யப்படுகிறது. இதில் நோயாளிக்கு வலி குறைவு. ரத்தம் இழப்பு இல்லை. நோயாளி அதிக நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
விரைவிலேயே வேலைக்கும் திரும்பி விடலாம்.

குடல் இறக்கம் மீண்டும்வருவது ஏன்?‘சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் மீண்டும் குடல் இறக்கம் ஏற்பட்டு விடுகிறதே, ஏன்?’ இந்தக் கேள்வி பலருக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும். அதற்கான காரணங்கள் இவை:சிலர் குடல் இறக்கத்தின் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்து விடுவார்கள். அறுவை சிகிச்சைக்கு பயந்து பலர் குடல் இறக்கத்தைப் புறக்கணிப்பார்கள். இதனால் குடல் இறக்கத்தில் அடைப்பு ஏற்பட்டுவிடும். விளைவு, நோயாளியின் குடல் வயிற்றுக்குள் போகாமல், ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகி, மிக ஆபத்தான நிலைமையில் வரும்போது அவசர அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட வேண்டும்.

அப்போது அழுகிய குடலை வெட்டியெடுத்துவிட்டு, மீதிக் குடலைச் சீராக்க வேண்டும். பிறகு குடல் இறக்கத்தையும் சரி செய்ய வேண்டும். இதுசற்று சிக்கலான அறுவை சிகிச்சை.நோயாளியைப் பிழைக்க வைப்பதேஇந்தச் சிகிச்சையின்போது மருத்துவரின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். இச்சிகிச்சை அவசர அவசரமாக செய்யப்படுவதால், தையல் சரியாகப் போடவில்லை என்றால், கிருமித் தொற்று மற்றும் ரத்த ஒழுக்குக் கட்டியினால் அறுவை சிகிச்சை புண் ஆறுவதற்குத் தாமதமானால் அல்லது தசைகளின்பலவீனம் காரணமாக போடப்பட்ட தையல் விட்டுப் போனால்… இப்படிப் பல காரணங்களால் இந்த நோயாளிகளில் ஒரு சிலருக்குக் குடல் இறக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது.

மேலும், இடைவிடாத இருமல்,காசநோய், அதிக பளுவைத் தூக்குதல், பருமன், வயிறு உப்புசம் போன்ற காரணங்களாலும் குடலிறக்கம் மீண்டும்வரலாம். உடல் பலவீனமாக இருந்தாலும் குடல் இறக்கம் மீண்டும் ஏற்படலாம்.ஆகவே, அலட்சியமும் அறுவைசிகிச்சை பயமும்தான் ஆபத்தில் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குடல் இறக்கத்தைப் பொறுத்தவரை நோயின் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் காண்பித்து, திட்டமிட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் குடல் இறக்கம் மீண்டும் வராது.

இடுப்பு வார்முதியவர்கள், இதய நோயாளிகள், நுரையீரல் நோயுள்ளவர்கள் மற்றும் வேறு சில காரணங்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள் ‘இடுப்பு வார்’ (Truss) அல்லது வயிற்றுக்கச்சையை (Abdominal Belt) அணிந்து கொள்ளலாம். படுத்துக்கொண்டு, குடல் பிதுக்கத்தை முழுவதுமாக வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டு, இந்த இடுப்பு வாரை அணிந்து கொள்ள வேண்டும். இதைப் பகலில் மட்டும் அணிந்து கொண்டால் போதும். இரவில் அணியத் தேவையில்லை. இது ஒரு தற்காலிக நிவாரணமே தவிர முழு சிகிச்சை ஆகாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.                              

அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், குடலில் ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகிவிடும். இதனால் உயிருக்கே ஆபத்து வரும்.இடைவிடாத இருமல், காசநோய், அதிக பளுவைத்தூக்குதல், பருமன், வயிறு உப்புசம் போன்ற காரணங்களாலும்குடலிறக்கம் மீண்டும் வரலாம். உடல் பலவீனமாக இருந்தாலும் குடல் இறக்கம் மீண்டும் ஏற்படலாம்.