மாற்றுத் திறனாளர்களை மதிப்போம்!



டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் சமமான இடம் தர வேண்டியது அவசியம் என்பது இன்றைய உலகளாவிய புரிதல். அதனால்தான் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தீர்மானம் 47/3, 1992ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 3 பன்னாட்டு மாற்றுத்திறனாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கன்வென்ஷன் ரைட்ஸ் ஆப் பர்சன் வித் டிஸ்ஸெபிலிடிஸ் (CRPD) நிறைவேற்றப்பட்டு 2030 ஆம் ஆண்டு நீடித்த வளர்ச்சியை அடையும் போது மாற்றுத்திறனாளர்களும் அவர்களுக்கான உரிமையை சம அளவில் பெறுவதற்கான வழிவகைகளை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசும் 2016ஆம் ஆண்டு 21 வகையாக மாற்றுத்திறனாளர்களுக்கான உரிமைகளை ‘‘மாற்றுத்திறனாளர்கள் உரிமைச் சட்டம் 20/6 நிறைவேற்றி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளர்களின் பங்களிப்பை உறுதி செய்துயுள்ளது. சமுதாயம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில் ஒட்டுமொத்த மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே சரியான வளர்ச்சியாக அமையும். மாற்றுத்திறனாளர்களை ஒருங்கிணைத்த வளர்ச்சியே முழுமையான வளர்ச்சி.

மாற்றுத்திறன் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதக் கூடும். ஆனால், அது அப்படியல்ல. இது சூழல் மற்றும் சமூகம் ஆகியவற்றோடு தொர்புடையது. மாற்றுத்திறனாளிகளில் குறிப்பாக பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக பாதிப்படைகின்றனர். ஐந்தில் ஒரு பெண்மணி தன் வாழ்நாளில் ஊனத்தால் பாதிக்கிறார்; அதே போல் பத்தில் ஒரு குழந்தை ஊனமாக இருக்கிறது. ஐநாவின் தரவுகளின்படி 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 46% பேர் ஊனப்படுவதாகவும் அதில் 80% பேர் வளரும் நாடுகளில்
உள்ளதாகவும் தெரிவிக்கிறது. அதாவது உலக மக்கள் தொகையில் 15%  அதாவது ஒரு பில்லியன் மக்கள் ஊனமுற்றவர்கள்.

சமவாய்ப்பும்- சமூகநீதியும் நிலைப்படுத்துவதன் மூலமே மாற்றுத்திறனாளர்கள் ஒருங்கிணைந்த சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். மாற்றுத்திறனாளர்களுக்காக இயங்கும் பிசியோதெரபி  மருத்துவர்கள், ஆக்கு பேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, மனநல ஆற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தொழில் பயிற்றுனர்கள் ஆகியோரை அரசு பணியமர்த்தி அவர்களின் பங்களிப்பை மாற்றுத்திறனாளர்களின் முன்னேற்றத்துக்கு உதவிட வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிசியோதெரசி மருத்துவரை நிரந்தரமாக பணியமர்த்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வரும் உடல் ஊனத்தை முற்றிலுமாக குறைத்து அவர்களின் பங்களிப்பை முழுவீச்சில் கொடுக்கும் போது நிச்சயமாக கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், இந்தியா, உலகம் என அனைத்து மட்டத்திலும் உயர்வோம்.

இந்தியாவிலேலே முதல் முறையாக சென்னை மாநிலக்கல்லூரியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம் 2007 - 2008 ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம், பி.சி.ஏ பட்டப்படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் (UPSC) சென்னையைச் சேர்ந்த பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்தியக்
குடிமைப் பணியில் தேர்ச்சிப் பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்துள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு பாரா ஒலிபிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.ஆகவே, மாற்றுத்திறனாளர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் போது, அவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து சாதனைப் படைப்பர். இதற்குத் தேவை சகமனிதர்களின் இரக்கமோ - கருணையோ இல்லை. அவர்களுக்கான உரிமைகளை சமவாய்ப்பு அடிப்படையில் வழங்கும்போது மாற்றுத்திறனாளர்கள் நிச்சயம் மேன்மை அடைவார்கள்.

மாற்றுத்திறனாளர்கள் குறித்தான சமுதாயத்தின் பார்வை மாற வேண்டும். சிறப்புக் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் என்பன போன்ற அபத்தமான மூட நம்பிக்கைகளைக் களைந்து மருத்துவ அறிவியலின் ஊடாக சிந்தித்து அவர்களையும் சமூகத்தின் அங்கமாக ஒருங்கிணைக்க வேண்டும். வாருங்கள், தனிமனிதனால், குடும்பமாய், சமூகமாய் மாற்றுத்திறனாளர்களை அரவணைத்து அவர்களின் தனித்திறமையைப் போற்றுவோம்.

- சுரேந்திரன் ராமமூர்த்தி,

 தவநிதி