ஷோபிதா துலிபாலா ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்



மணிரத்னம்  இயக்கத்தில் சமீபத்தில்  வெளியான பொன்னியின் செல்வன்  படத்தில், குந்தவையின்  செல்ல தோழி  வானதியாக  வலம் வந்து  தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்  ஷோபிதா துலிபாலா.
பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞரான இவர், அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.0  ஹிந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் கூடாச்சாரி, மலையாளத்தில் மூதோன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கி வரும் ல‌ஷ்மி பாம்ப் படத்தில் நடித்து வருகிறார்.  ஷோபிதா தனது ஃபிட்னெஸ் குறித்து  பகிர்ந்து கொண்டவை:

“என்னைப்பொருத்தவரை, ஃபிட்னெஸ் என்பது  உடலை ஆரோக்கியமாக  வைத்துக்கொள்வதாகும். எனவே, அதில்  எப்போதும்  சமரசம் செய்து கொள்ளக் கூடாது. மற்றபடி  அழகு ரகசியம்  என்பது  பெரியதாக எதுவும் இல்லை.  என்னைப் பொருத்தவரை, அழகு என்பது கருணை, எளிமை மற்றும் சுய உணர்வு ஆகியவற்றின் கலவையாகும். அந்தவகையில், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம்  கூட அழகு  இயல்பாகக் காணப்படுகிறது.

ஃபிட்னெஸ்

அடிப்படையில்  நான்  ஒரு நடன கலைஞர் என்பதால், சிறுவயதில் இருந்தே  உடலை ஒல்லியாக  வைத்திருக்கிறேன்.  ஏனென்றால்  ஒல்லியாக  இருப்பது  வலிமையானதாக உணர்கிறேன். இதற்காக, தினமும் காலையில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன் மற்றும் என்னால் முடிந்தவரை அடிக்கடி நடைபயிற்சியும் செய்கிறேன்.

மாடலிங்  துறையில் இருந்தபோது, உடற்தகுதியுடன் இருக்க நிறைய  மெனக்கெடல்கள்  மேற்கொண்டேன்.  ஆனால்,  நடிகையாக மாறியபின் ஒரு சில காரணங்களால்  ஒர்க்கவுட்  செய்வதை பல ஆண்டுகளாக நிறுத்தியிருந்தேன். இந்நிலையில்  லாக்டவுனில் தான் யோகாவுடன்  மீண்டும் உடற்பயிற்சிகளை  தொடங்கினேன். இன்று வரை  தொடர்கிறேன்.

யோகா  பயிற்சிகள்  மிகவும் பிடித்துவிட்டது. இதனால், தினமும் சக்ராசனம், சர்வாங்காசனம்,  ஹலாசனம், பூர்ண புஜங்காசனம் போன்றவற்றை மேற்கொள்கிறேன். மேலும்,  உடற்தகுதிக்காக பல்வேறு  விளையாட்டுகளில் கலந்து கொண்டு விளையாடுவதையும் நான் விரும்புகிறேன். அதுபோன்று, நீச்சல்  பயிற்சியும்  எனது  தினசரி ஒர்க்கவுட்டில்  ஒன்றாகும்.  காரணம்,  நீச்சல் சகிப்புத்தன்மை, தசை, வலிமை மற்றும் கார்டியோ வாஸ்குலர் ஃபிட்னெஸ் ஆகியவற்றை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

அதுபோன்று  டிரக்கிங் செய்வதும் எனக்கு மிகவும் பிடித்தமானது.  எனவே, நேரம்  கிடைக்கும்போதெல்லாம்   டிரக்கிங்  செய்ய சென்றுவிடுவேன். அது எனது உடலில்  மெட்டபாலிசத்தை  அதிகரிக்க உதவுகிறது.  

உணவுமுறை:

எனது  தினசரி டயட்டில்  பழங்கள்  

அதிகமாக  எடுத்துக்  கொள்வேன். மேலும்,  ஆரோக்கியமான சருமத்திற்காக நிறைய தண்ணீர் அருந்துவேன். சுட்டெரிக்கும் கோடை காலங்களில் இளநீர் மற்றும் நிம்பு பானி ஆகியவை அவசியம் எடுத்துக் கொள்வேன். மற்றபடி எனக்கு புதுவகையான  விதவிதமான  உணவுகள் ருசிப்பதில்  ஆர்வம் அதிகம். அதில்  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேசமயம்,  நான்  இதுவரை  சுவைத்த உணவுகளில்  எதுவும் இந்திய உணவு வகைகளை மிஞ்சவும்  இல்லை.

தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பு

இயற்கையாகவே  எனது  தோல் சற்று  பளபளப்பானதாக  அமைந்துவிட்டது. அதனால்  தோல் பராமரிப்புக்காக பெரிய மெனக்கெடல்கள்  எதுவும் செய்வதில்லை. இதற்கு காரணம்  எங்களது  வீட்டில் சமைக்கப்படும்  உணவு முறையாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன்.   ஏனென்றால் எங்களது  வீட்டில்  சமைக்கும் உணவில்  அதிகளவில்  தேங்காய்  சேர்க்கப்படும்.

மேலும்,  எனது கூந்தல் மற்றும் தோல் பராமரிப்புக்கும்  தேங்காய் எண்ணெயையே அதிகம்  பயன்படுத்துகிறேன். அந்தவகையில்,  தினமும்  ஒரு துளி தேங்காய் எண்ணெயை என் முகத்தில் மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்துகிறேன்.கூந்தலை பொருத்தவரை,  என் அம்மாவிடம் இருந்து  அழகான அடர்ந்த கறுப்பு கூந்தல்  எனக்கும் வந்திருப்பதாக  நினைக்கிறேன்.  இதைத்தவிர எனது மேக்கப்  ரகசியம் என்பது எதுவும்  தனியாக கிடையாது.  

நான்  எப்போதும்  லைட் மேக்கப்பையே  விரும்புகிறேன்.  அதுதான்  எனக்கும் பொருத்தமானதாக இருக்கும். எனவே,  லிப் பாம், கன்னச் சாயம், கான்சீலர் மற்றும் கொலோன் இவைகள்தான்   பெரும்பாலும்  எனது  மேக்கப் கிட்.டில்  இருக்கும். மேலும்,  என்னை பொருத்தவரை  ஃபேஷன் என்பது நவநாகரீக உடைகளிலோ அல்லது நிறத்திலோ அல்ல. இது உணர்ச்சிகள் மற்றும் மனநிலைகளின் வெளிப்பாடு ஆகும்.  ஒருவருக்கு  வயது ஏற ஏற அவரது  தோலில்  தோன்றும்  சுருக்கங்கள் அருவெறுப்பானதல்ல,  அவரது  வாழ்க்கையின் அனுபவத்தை  சொல்வதாகும்.

- தவநிதி