வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்



தகவல்

கொரோனாவின் தீவிர நோய்ப் பரவலால் வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது. தனித்திருப்பது, விலகியிருப்பது என்பதோடு நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் வேண்டும் என்று பொதுமக்கள் நிறையவே லாக் டவுனில் மெனக்கெட்டார்கள். இந்த மெனக்கெடலின்  தொடர்ச்சியாகவே வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என்பதை உணர்ந்து, அது சார்ந்த உணவுப்பொருட்களைத் தேடி உண்ண  ஆரம்பித்தார்கள். அதனால் வைட்டமின் சி-க்கு திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது.

ரத்த அழுத்தம், நாள்பட்ட நோய்கள், இதயக் கோளாறு, இரும்புச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றை வரவிடாமல் தடுக்கும் திறன் கொண்டது என்ற  பெருமையும் வைட்டமின் சி-க்கு உண்டு.  சிட்ரஸ் பழங்கள் என்றழைக்கப்படுகிற ஆரஞ்ச், கிவி, எலுமிச்சை, கொய்யா, திராட்சை ஆகியவற்றில்  வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இதேபோல் காய்கறிகளான ப்ரக்கோலி, காலிஃப்ளவர், கேப்ஸிகம் என்கிற குடைமிளகாய், முளை கட்டிய  தானியங்கள் ஆகியவற்றிலும் செறிவாக நிறைந்துள்ளது. குறிப்பாக சுவாசம் சார்ந்த கோளாறுகளை வர விடாமல் தடுக்கும் என்பது வைட்டமின் சி  உணவுகளின் தனிச்சிறப்பு.

வைட்டமின் சி பற்றாக்குறை என்பது பரவலாகக் காணப்படும் குறைபாடாகவும் உள்ளது. நீரில் கரையும் சி வைட்டமினை நாள் ஒன்றுக்கு 75 மில்லி  கிராம் அளவில் பெண்களும், 90 மில்லி கிராம் அளவில் ஆண்களும் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த வைட்டமின் சி  அளவை முடிந்தவரை உணவுப்பொருட்களின் மூலம் சரி செய்வதே பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் மருத்துவரின் உரிய  ஆலோசனையுடன் மட்டுமே சப்ளிமெண்டுகளை பயன்படுத்த வேண்டும்.

- ஜி.ஸ்ரீவித்யா