நடைப்பயிற்சி அலுவலகத்துக்கும் நல்லது!



*Centre Spread Special


ஒரு தனி நபர் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி அவரது நிறுவனத்தின் உற்பத்தித்திறனுக்கும் உதவும்.

தினசரி 15 நிமிடங்கள் கூடுதலாக நடைப்பயிற்சி அல்லது ஒவ்வொரு நாளும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஜாக்கிங் செய்வது நமது உடலின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். இது உலக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சுகாதாரக் காப்பீட்டுக் குழுவான Vitality மற்றும் RAND Europe என்கிற ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

18 வயது முதல் 64 வயதிற்குட்பட்ட அனைத்து பெரியவர்களும் ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் திடமான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ஆரோக்கியம் மேம்பட்டு இறப்பு விகிதம் குறைவதோடு, அதிகமான மக்களை நல்ல உடல் திறனோடும் வைத்திருக்க முடியும். இது ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் நோய்களால் விடுப்பு எடுப்பதைக் குறைக்க உதவும். இதன் மூலம் அவர்களை வேலையில் நீண்ட காலம் நல்ல திறனோடு பங்களிக்கச் செய்யலாம். இதன் மூலம் நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பொருளாதார நிலைகள் உயரும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி குறித்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க, ஒவ்வொரு முதலாளியும் தங்கள் ஊழியர்களை ஊக்குவித்தால் உலக பொருளாதாரம் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வரை உயரக்கூடும் என்கிறது இந்த ஆய்வு. ஏழு நாடுகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு உலகளவில் 23 தனி நாடுகளில், உடல் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் பொருளாதார நன்மைகளை அதிகரிப்பதற்கான திட்டமிடுதலுக்கு வழிவகுத்துள்ளது. இந்த ஆய்வு மக்களின் செயலற்ற தன்மை மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள உறவினை எடுத்துக் காட்டுகிறது. மேலும் மக்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க உதவியாக இருக்கும் என்று RAND Europe அமைப்பின் தலைவர் Hans Pung தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், குறைந்த அளவு உடற்பயிற்சி செய்த பெரியவர்களில் அமெரிக்காவில் 40 %, பிரிட்டனில் 36 %, சீனாவில் 14 % பேர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் செயல்பாடுகள் இல்லாத 40 வயதுடைய நபர்கள் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதன் மூலம் அவர்களின் ஆயுட்காலம் சராசரியாக 3.2 ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

* க.கதிரவன்