உங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு ! Health Insurance A to Z



*கவர் ஸ்டோரி


நாளுக்குநாள் வளர்ந்துவரும் மருத்துவத்துறை வளர்ச்சி ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் புதுப்புது நோய்களும் அதற்கான செலவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரிக்கும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்வதற்கும், நோய்களில் இருந்து நம் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமாக இருக்கிறது. இதுகுறித்து மருத்துவரும், பிரபல தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநருமான பிரகாஷ் விளக்கமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள மருத்துவத்துறை சார்ந்த வளர்ச்சியினால் பல்வேறு நோய்களுக்கு உரிய முறையில் தரமான சிகிச்சை பெற்றுக் கொள்வதன் மூலம் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தற்போது நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 69 முதல் 72 வயது வரைக்கும் அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் குடும்பத்தில் ஒரு நபருக்கு ஏற்படுகிற மிகப் பெரிய விபத்து, மாரடைப்பு, புற்றுநோய் போன்ற ஏதாவது ஒரு பிரச்னை அந்த குடும்பத்தையே ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடுகிறது.

இதனால் இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 4 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நோய்களை நவீன முறையில் கண்டறிந்து நல்ல தரமான சிகிச்சைகளை உரிய நேரத்தில் பெற்று நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வசதி இன்று நம் நாட்டிலுள்ள பல்வேறு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால், இதுபோன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான பொருளாதாரநிலை எல்லோரிடமும் உள்ளதா என்றால் இல்லை என்பதுதான் உண்மைநிலை.

ஆரம்ப நிலை பரிசோதனைகளுக்குக்கூட பணமின்றி தன்னிடம் உள்ள நகையை அடகு வைத்துவிட்டு அதன்பிறகு தன் மகனுக்கு பரிசோதனை செய்து பார்க்கும் நிலைதான் பரவலாக இருக்கிறது. அதற்குப் பிறகு மேற்கொள்கிற மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவினை சொன்னால் அவரால் என்ன செய்ய இயலும் என்பது கேள்விக்குறிதான். இதுபோன்ற அறியாமை நிலையைப் போக்க வேண்டும். அந்த தாயைப் போன்று பொருளாதார வசதி இல்லாதவர்களிடம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.  
 
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பல குடும்பங்களில் திடீரென்று ஏற்படுகிற பெரிய அளவிலான மருத்துவச் செலவுகள் பெரும் சுமையாகி, குடும்பத்தையே புரட்டிப்போடும் அளவுக்கு சென்றுவிடுகிறது. இதுபோன்ற மருத்துவ செலவுக்காக நகை, நிலம், வீடு மற்றும் பொருட்களை அடகு வைப்பது, விற்பது அல்லது வங்கி, அஞ்சலகம் போன்றவற்றில் உள்ள பண சேமிப்புகளை திரும்பப் பெறும் நிலை உண்டாகிறது.நோயால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால் மறுபுறம் அதனால் ஏற்படும் செலவுகளை நினைத்து மன அழுத்தம் அதிகமாகிறது.

அதிகக் கடன் பெற்று மருத்துவ செலவு செய்தபிறகு அந்தக் கடனை அடைப்பதற்கே பல ஆண்டுகள் ஆகும் என்கிறபோது அதுவே மன அழுத்தத்தை அதிகமாக்கிவிடுகிறது. இப்படி நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்கு முன்னரும், பின்னரும் உண்டாகும் மன அழுத்தத்தால் நோய் குணமாவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் நாம் ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், அப்போதைய பொருளாதார நிலைகளை சமாளிக்க அது உதவியாக இருக்கும்.
மேலும் அது பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையோடு நோயை எதிர்கொள்ள உதவுகிறது. நோய் குணமடைய ஒரு பாதி சிகிச்சையும் மறு பாதி தன்னம்பிக்கையும் தேவை என்று சொல்வார்கள். இந்த தன்னம்பிக்கை, தைரியத்தோடு நோயை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

தற்போது மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கான வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல வளர்ந்த நாடுகள் மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி வருகின்றன. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி என்பது அத்தியாவசிய தேவை மட்டுமல்ல அது அனைத்து இந்திய குடிமக்களுக்குமான அடிப்படை உரிமை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது நம் நாட்டில் பலர் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், சிறுநீரக பிரச்னை என்று ஏதாவது ஒரு உடல்நல பிரச்னையோடு உயிர் வாழ்கிற சூழல் உள்ளது. இதுபோன்ற பிற நீண்ட நாள் உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவக் காப்பீடு பெரும் உதவியாக இருக்கும். ஒரு குடும்பத்தில் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அத்தியாவசியத் தேவைகள், குழந்தைகளுக்குத் தேவையான கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றுக்காகவும், குடும்ப நபர்கள் அனைவருடைய ஆரோக்கியம், மருத்துவம் சார்ந்த செலவுகளுக்கும் அந்த குடும்பத்தின் வருமானம் செலவு செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டுகிற நபர்களுக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ திடீரென்று உடல்நலம் சார்ந்த பிரச்னைகளோ, நோய்களோ ஏற்படுகிற பொழுது அந்தக் குடும்பத்தில் உண்டாகும் பொருளாதார பிரச்னையை எதிர்கொள்வதற்கு மருத்துவக் காப்பீடு உதவுகிறது.

ஏனெனில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே மாரடைப்பு வருகிறது என்பது அந்தக்காலம். தற்போது 35 முதல் 40 வயதிலும் மாரடைப்பு வருகிறது. இன்றைய சூழலில் மக்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர், உணவு, வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வியல் முறை சார்ந்த பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் யாருக்கு, எப்போது, என்ன நோய் வரும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. எனவே, நோய்களை வரும்முன் காக்க முன்னெச்சரிக்கையாக நாம் ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் உரிய பிரீமியத்தைச் செலுத்தி காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நாம் எடுத்துக் கொள்கிற காப்பீட்டுத் திட்டத்தின் பிரீமியத் தொகை ஒவ்வோர் ஆண்டும் மாறக் கூடியது. ஒரு வருடத்திற்கு எத்தனை பேருக்கு எந்த அளவு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியது வரும் என்பதையும், பிரீமியத் தொகை மாற்றங்களையும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(Insurance Regulatory and Development Authority of India-IRDA) தீர்மானிக்கிறது. காப்பீடு செய்துள்ள நபரின் வயது அதிகரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்தே பிரீமியத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.நாட்டில் 31 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான திட்டத்தை வைத்திருக்கும்.

மொத்தத்தில் 400 முதல் 500 வகையான காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கிறது. எனவே, அவரவர் தேவைகளை அறிந்து வருமானத்திற்கு ஏற்ற வகையிலான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். யாரோ ஒருவருடைய வற்புறுத்தல் அல்லது அவசரத்தினால் காப்பீட்டுத் திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் சேர்வதால், நாம் மருத்துவமனையில் இருக்கும்போது அத்திட்டத்தின் பலனை சரியான நேரத்தில் பெற முடியாமல் போகக்கூடும். எனவே, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் நிதானமாக யோசித்து, சரியான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

நாம் தேர்வு செய்த திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்களை முகவர்கள் போன்ற உரிய நபர்களிடம் கேட்டறிந்த பின்பு தங்களுக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாகவே காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பிரீமியம் செலுத்த முடியும். இதுகுறித்த தகவல்களை காப்பீட்டு நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் கேட்டுப் பெறலாம். நம் குடும்பத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு பாதுகாப்பாக இருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது ஓர் அற்புதமான சேவை, அது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவசியம் தேவை!

இன்ஸ்யூரன்ஸ் எடுக்க சரியான காலம்

உடல்நிலை நன்றாக இருக்கும்போதே நமது குடும்பத்திலுள்ள நபர்களுக்கு தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தையோ அல்லது குடும்ப காப்பீட்டுத் திட்டத்தையோ எடுத்துக் கொள்வது நல்லது. நோய் வந்த பிறகு அதன் சிகிச்சைக்கு இத்தனை லட்சம் தேவை என்கிற அந்த நேரத்தில் ஏதாவதொரு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ள இயலுமா என்று கேட்பது தவறு.  ஏனென்றால் மருத்துவக் காப்பீடு என்பது அமுதசுரபி அல்ல. ஆயிரம் பேரிடம் பணத்தை சேகரித்து, அது தேவைப்படுகிற நூறு பேருக்கு கொடுக்கும் பணியைச் செய்வதே காப்பீட்டு நிறுவனங்களின் தாரக மந்திரம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இதில் அதிகமான நபர்கள் காப்பீடு செய்வது அவசியம்.

நமது குடும்ப நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளால் பின்னாளில் பொருளாதார ரீதியிலான தேவைகள் ஏற்படுகிற பொழுது உதவுவதற்காக, குடும்ப வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவக் காப்பீடு செய்து வைப்பது நல்லது. உதாரணமாக வருடத்திற்கு ஒருமுறை 10 ஆயிரம் ரூபாயை பிரீமியமாக செலுத்தி மொத்தம் 3 லட்சம் ரூபாய் பெறுகிற ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அவசர காலங்களில் நோய்க்கு சிகிச்சையளிக்க அது உதவியாக இருக்கும்.

பொதுவாக காப்பீட்டு நிறுவனங்களில் குழந்தை பிறந்த 3 அல்லது 6 மாதம் முதல் அதிகபட்சம் 65 வயது வரையுள்ள நபர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். அதிக வயதான நபர்கள் காப்பீடு எடுத்துக்கொள்வது சற்று கடினமானது. ஆனால், இதிலிருந்தும் சில நிறுவனங்கள் விதிவிலக்காக இருக்கிறது.

அரசின் உதவி தேவை

மருத்துவக் காப்பீட்டிற்கும் தற்போது 18 சதவிகிதம் GST கட்ட வேண்டிய நிலை உள்ளது. காப்பீட்டு நிறுவனங்களும் அரசிடம் இந்த வரியை விலக்கவேண்டி கோரிக்கை வைத்துள்ளது. இதுபோன்ற வரிவிதிப்புகள் குறைவதோடு, மக்களுக்கு மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கிறபோது காப்பீடு எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் எல்லா தனியார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும் முழுமையாக பங்கேற்கச் செய்வதன் மூலம் அத்திட்டங்களை வெற்றியடையச் செய்யலாம். இதன் மூலம் தரமான, நவீன மருத்துவ வசதிகள் நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும்
கிடைக்கும்.

* க.கதிரவன்