செரிமானத்தைப் பற்றி புரிந்து கொள்வோம்!



தகவல்

ஆரோக்கியமான உணவுகள் பற்றி அறிந்துகொள்வதைப் போலவே, செரிமான வேலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம்.

உடலின் செரிமானம் முடிவடைகிற இடம் எது தெரியுமா… சிறுகுடல்.உணவை வாயில் வைத்ததுமே வாயிலிருந்து செரிமான வேலைகள் ஆரம்பமாகிவிடும். நீங்கள் மென்று விழுங்கும் உணவானது, உணவுக்குழாய்க்குச் செல்லும். அங்கிருந்து வயிற்றுக்குச் செல்லும். அங்கிருந்து சிறுகுடலுக்குச் செல்லும். உணவிலுள்ள சத்துகள், சிறுகுடலின் சுவர்களால் கிரகிக்கப்படும். மீதமானது பெருங்குடலுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மலமாக வெளியேறும்.

பெயரில் மட்டுமே பெரியதுபெயரில் சிறுகுடல் என்றாலும், பெருங்குடலை விடவும் இதுவே நீளமானது என்றால் நம்புவீர்களா?
ஆமாம்... சிறுகுடலைப் பிரித்துவிட்டால் அது 20 அடிகள் நீளமிருக்கும். பெருங்குடலின் நீளம் வெறும் 5 அடிகள்தாம். பிறகு, ஏன் இரண்டும் பெயர்களில் இந்த முரண்பாடு என்கிறீர்களா? அகலத்தைக் கணக்கில் கொண்டால் பெருங்குடல்தான் பெரியது. சிறுகுடல் குறுகலானது. அதனாலும் இருக்கலாம்.

வயிறே இல்லாத உயிரினம்!

எல்லா உயிரினங்களுக்கும் வயிறு என ஒன்று இருக்கும்தானே... அப்போதுதானே அவை உண்ணவும் உண்ட உணவு செரிக்கவும் முடியும்? இயற்கையின் படைப்புகளில் எத்தனையோ விந்தைகளைப் பார்க்கிறோம். அப்படியொரு விந்தைதான் பிளாட்டிபஸ்(Platypus) என்கிற உயிரினம். இதற்கு வயிறு என்பதே கிடையாது. உணவுக்குழாயும், சிறுகுடலும் இணையுமிடத்தில் லேசான புடைப்பு மட்டுமே இருக்கும்.

பசியல்ல.... பாக்டீரியாவே காரணம்!

வயிறு தொடர்பான பாதிப்புகளில் பலரையும் பாதிக்கிற ஒன்று அல்சர் என்கிற புண். காரமான உணவு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் அல்சர் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் அல்சர் பாதிப்பைத் தீவிரமாக்கக் கூடியவையே தவிர அல்சரை ஏற்படுத்துபவை அல்ல. உள்வயிற்றுப் பகுதியிலும், சிறுகுடலிலுள்ள டியோடெனம்(Duodenum) என்கிற பகுதியிலும் புண்களை ஏற்படுத்துவதில் பாக்டீரியாவே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தப் பகுதிகளைக் கேடயம்போன்று காக்கும் வழுவழுப்பான சுரப்பை அமிலங்கள் அரிக்கக் காரணமாக இருந்து, புண்களை ஏற்படுத்துவது இந்த பாக்டீரியாதாம். சாதாரண வலிகளுக்குக்கூட மருத்துவ ஆலோசனையின்றி அடிக்கடி வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வோருக்கும் அல்சர் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கழிவுகளை வெளியேற்றுவது கல்லீரலே!

செரிமானத்தில் பித்தப்பையின் பங்கும் முக்கியம். செரிமானம் என்றாலே அது வயிறும், சிறுகுடலும் சம்பந்தப்பட்ட வேலை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். பித்தநீரின் மூலம் உணவிலுள்ள கொழுப்பு செரிமானமாக உதவுவது இதுதான். உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் கல்லீரலின் பங்கு முக்கியமானது.

நெஞ்செரிச்சல்.... ஏன்?

உணவு செரிக்காதபோது நெஞ்செரிச்சல் ஏற்படுவதன் காரணம் தெரியுமா? வயிற்றிலுள்ள அமிலங்கள், உணவுக்குழாய்க்குள் செல்வதுதான் காரணம். உணவுக்குழாயின் அடியிலுள்ள தசைகள் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், சில நேரங்களில் அந்தத் தசைகள் தளர்ந்தோ, பலவீனமடைந்தோ போயிருக்கலாம். அந்த நிலையில் அமிலமானது உணவுக்குழாய்க்குள் நுழைந்துவிடும். அதனால்தான் நெஞ்செரிச்சலும் அசௌகர்யமான வலியும் ஏற்படுகின்றன.

வாயுவும் வாடையும்!

உணவு உண்ணும்போது நீங்கள் விழுங்கிய காற்றும், இரைப்பைப் பாதையில் உள்ள பாக்டீரியா உருவாக்கும் வாயுவும் சேர்ந்து வெளியேறுவதுதான் வயிற்றுப் பொருமலும், அதனால் ஏற்படும் வாய்வும். உணவின் சில கூறுகளை செரிமான மண்டலமானது உட்கிரகிக்காது. அப்படிப்பட்ட கூறுகள் பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அங்கே காத்திருக்கும் பாக்டீரியா கூட்டம் ஒன்று கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன், ஹைட்ரஜன் சல்ஃபைடு உள்ளிட்ட பலவகையான வாயுக்களை வெளியேற்றும். அவை எல்லாம் சேர்ந்துதான் கெட்ட வாடையுடன் வாயுவை வெளியேற்றுகின்றன.

சத்துகள் இப்படித்தான் கடத்தப்படுகின்றன!

நீங்கள் உணவை உட்கொண்டதும், அதிலுள்ள சத்துகள் சிறுகுடலின் சுவர்கள் மூலம் கிரகிக்கப்படும். அங்கிருந்து சர்க்கரை, அமினோ அமிலங்கள், கிளிசரால், சில வைட்டமின்கள் மற்றும் உப்பு ஆகியவை ரத்தத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், வெள்ளை அணுக்களையும், நிணநீரையும் கொண்ட நிணநீர் அமைப்பு, கொழுப்பு அமிலங்களையும், வைட்டமின்களையும் கிரகித்துக் கொள்கிறது.

- ராஜி