இந்திய சோளமும் அமெரிக்க சோளமும்



சிறப்புமிக்க தானியங்கள்

நமது இந்திய மக்காச்சோளத்தை (Maize) பல ஆயிரம் வருடங்களு க்கு முன்பிருந்தே சமையலில் உபயோகப்படுத்தி வந்தோம். இப்போது கிடைக்கும் ‘அமெரிக்கன் ஸ்வீட் கார்ன்’ எனப்படும் சோளத்தில் அதிக இனிப்புச் சுவை கிடைக்கும்படி விஞ்ஞானத்தின் மூலமாக சர்க்கரைச் சத்தை அதிகப்படுத்தி அவர்கள் நாட்டில் பயிரிட்டார்கள். மத்திய அமெரிக்காவில் இருந்து இப்போது பல நாடுகளுக்கும் பரவி விட்டது.

அங்கு பலருக்கு கோதுமை அலர்ஜி ஏற்படுவதால், மாற்றாக சோளத்தை அதிகம் பயிரிட்டார்கள். இதில் அந்த அலர்ஜி ஏற்படாது. இதை கார்ன்ஃப்ளேக்ஸாக தயாரித்து காலை உணவாக அதிகம் உண்டது அமெரிக்கர்களே. நமது சோளம் போல ரவையாக, மாவாக பயன்படுத்தாமல், அமெரிக்க சோளத்தை அப்படியே வேகவைத்து உண்ணும் பழக்கத்தை 20 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் கொண்டு வந்தார்கள்.

இந்திய மக்காச்சோளத்தில் பல வகைகள் உள்ளன. நிறம் மாறுபடும். வளர்ந்து அறுவடைக்கு வர 85லிருந்து 200 நாள் வரை பிடிக்கும். இது கிட்டத்தட்ட 70 நாடுகளில் அதிகம்
பயிரிடப்படுகிறது. நமது நாட்டில் பீகார், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மத்தியப்பிரதேச மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் பராத்தா செய்து தினமும் உண்பதும்
பழக்கமாக இருக்கிறது.

சமையலுக்கு மட்டுமல்ல... இந்திய மக்காச் சோளம் வேறு பல பயன்களையும் தருகிறது.சோளத்தில் இருந்து சோள எண்ணெய்எடுக்கப்படுகிறது.பசுக்களுக்கும் பறவைகளுக்கும் கோழிகளுக்கும் முக்கிய உணவாகிறது.    புடவை, துணிகளுக்கு கஞ்சி போடுவதற்கான கஞ்சி மாவை மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கின்றனர்.சைவ ஜெலடின் தயாரிக்க சோளம்தான் உபயோகப்படுத்துகின்றனர். இது பலவிதமாக ‘புட்டிங்’ செய்யப் பயன்படும்.

சோளத்தை உலர வைத்து அப்படியே மாவாக்கினால் மஞ்சள் நிற மாவு கிடைக்கும். இந்த மாவுடன் கோதுமை மாவு கலந்து பராத்தா செய்வது வட இந்திய வழக்கம். அப்படியே சூடான தண்ணீர்
கலந்தும் ரொட்டி செய்யலாம்.கார்ன்ஃப்ளோர் (Corn flour) எனப்படுவது சோளத்தை அரைத்து, பாலெடுத்து உலர வைப்பது. இந்த மாவும் இந்தியமக்காச் சோளத்தில் இருந்துதான்
தயாரிக்கப்படுகிறது. சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ‘கார்ன் சிரப்’ என்பது லிக்யூட் குளுக்கோஸ் என்று கூறப்படும். இதைத்தான் மிட்டாய், சாக்லெட் செய்ய உபயோகப்
படுத்துகிறோம்.

கஸ்டர்டு பவுடர் மற்றும் பலவிதமாக பேக்கிங் செய்ய உபயோகப்படுத்தும் பொருட்களிலும், ஐஸ்க்ரீம் கோன் செய்வதிலும் பயன்படுகிறது.கோழிகளுக்கு தீவனமாகத் தரும்போது கோழிமுட்டையின் மஞ்சள் கரு, அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். முட்டையின் சத்துகளும் கூடும்.மக்காச்சோளம் சுலபமாக ஜீரணமாகும் தன்மை உடையது. எந்தவிதமாகவும் வாயுத் தொல்லையை ஏற்படுத்தாது. வட அமெரிக்காவில் இருக்கும் மெக்ஸிகோவில் மக்காச்சோளத்தை வைத்து தினப்படி சமையல் செய்கின்றனர்.

இந்திய மக்காச்சோளத்தின் செடி, இலை, தண்டு முதலான பல பாகங்களும் வெடிமருந்தின் உள்ளே வைக்கும் பொருள் தயாரிக்கவும், பசை, கோந்து, ரேயான் துணி, செயற்கை லெதர், பூச்சிக்கொல்லி மருந்துகளோடு கலப்பதற்கு மூலப்பொருள் செய்யவும், பேப்பர், அட்டைப்பெட்டி செய்ய என பலவிதமான தொழில்களுக்கும் மூலப்பொருளாகபயன் தருகிறது.

அமெரிக்க சோளத்தை சுட்டும், வேக வைத்தும் பலவிதமான உணவுகள் தயாரிக்கவும் உபயோகிக்கிறோம்.இதுவே இளசாக இருக்கும்போதே பறித்து ‘பேபிகார்ன்’ என்று பலரும் மிக விரும்பும் காய்கறியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

100 கிராம் அமெரிக்க மக்காச்சோளத்தில் இருக்கும் சத்துகள்
86 கி. கலோரிகள்
நார்ச்சத்து - 2.7 கிராம்
புரதம் - 3.2 கிராம் (18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.)
வைட்டமின் ஏ - 187 மைக்ரோ கிராம்
ஃபோலிக் ஆஸிட் -  46 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி - 6.8 மி.கிராம், தயாமின் - 0.2 மி.கி., நயாசின் - 1.7 மி.கி.
அமெரிக்க ஸ்வீட்கார்ன் 7-10 அடி
உயரம் வரை வளரும். ஒரு செடியில் 2ல் இருந்து 6 கரு வரை கிடைக்கும். 90 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும்.
நீரிழிவுக்காரர்கள் அமெரிக்கன் ஸ்வீட் கார்னை தவிர்ப்பது நல்லது. இந்திய சோளத்தை அளவோடு உண்ணலாம்.

அமெரிக்க ஸ்வீட்கார்ன்
தோலின் சவ்வுத் தன்மையை ஆரோக்கியமாக வைக்க மக்காச்சோளத்தில் இருக்கும் சத்துகள் உதவும்.நுரையீரல் புற்று, வாயில் ஏற்படும் புற்று இரண்டையும் தடுக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ் கொண்டது. நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது எடை குறையாது. நமது உடலை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

இப்போது பலரும் இந்தச் சோளத்தை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதில் உள்ள ‘க்ளூட்டமிக் ஆஸிட்’ எனப்படும் அமினோ அமிலம் இதற்கு ஒரு சுவையைத் தருவதால் அடிக்கடி உண்ண வேண்டுமென ஆவலைத் தூண்டும். ஸ்வீட்கார்ன் எப்பொழுதும் மிதமாக உண்ண வேண்டிய உணவு. பல முக்கிய தாதுஉப்புகள் இதிலும் உள்ளன. நமது பல முக்கிய தானிய மாவான கோதுமை மற்றும் சிறுதானியங்களில் இருப்பதை விட மற்ற சத்துகள் குறைவு. ஆனால், 18 அமினோ அமிலங்கள் கொண்ட புரதம் இருக்கும் மற்ற தானியம் குறைவு. இந்த சோளத்தில் பதினெட்டும் உண்டு!

மக்காச்சோள சுண்டல்
உதிர்த்த மக்காச்சோள மணிகளை
2 டம்ளர் அளவுக்கு வேக வைத்து வடிக்கவும்.
பிரஷர் குக்கரில் 1 விசில் வைக்கலாம்.
உரித்த சிறிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 1, பூண்டு - 1 பல், மிளகாய்த்தூள் - ரு டீஸ்பூன், லு கட்டு கொத்தமல்லி, தகுந்த உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த விழுது, வெந்த சோள மணிகள் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை நன்கு வதக்கி பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
இந்த சுண்டலை அமெரிக்கசோளத்திலும் செய்யலாம்.

இந்திய மக்காச்சோளத்தில்
இருக்கும் சத்துகள்

இந்திய மக்காச்சோளத்தில்
இருக்கும் சத்துகள்
(100 கிராம் அளவில்)
     பச்சை சோளம்    உலர்ந்த சோளம்
புரதம்    4.7 கிராம்                     11.1 கிராம்
கொழுப்பு     0.9 கிராம்                        3.6 கிராம்
தாது
உப்புகள்     0.8 கிராம்        1.5 கிராம்
நார்ச்சத்து     1.9 கிராம்                    2.7 கிராம்
மாவுச்சத்து  24.6 கிராம்    66.2 கிராம்
சக்தி     125கி.கலோரிகள்    342கி.
கலோரிகள்
கால்சியம்  9 மி.கி.            10 மி.கி.
பாஸ்பரஸ்     121 மி.கி.     348 மி.கி.
இரும்புச் சத்து     1.1 மி.கி.    2.3 மி.கி.
வைட்டமின் ‘ஏ‘ 32 மைக்ரோ கிராம் 90 மைக்ரோ கிராம்
தயாமின்     0.11 மி.கி.    0.42 மி.கி.
ரிபோ
ஃப்ளோவின்     0.17 மி.கி.    0.10 மி.கி.
நயாசின்     0.6 மி.கி.    1.8 மி.கி.
முக்கிய அமினோ அமிலங்கள் பனிரெண்டும் உள்ளன.

அமெரிக்கன் ஸ்வீட்கார்ன் ஃபிர்ணி

(ஃபிர்ணி என்பது பாயசத்துக்கும் கீருக்கும் இடைப்பட்ட அடர்த்தியாக இருக்கும். வட இந்தியர் அதிகம் செய்யும் இனிப்பு.) பாக்கெட்டில் கிடைக்கும் இனிப்பு மக்காச்சோளத்தை தண்ணீரை வடித்தபின் நன்கு கழுவி 1 டம்ளர் சோளத்துக்கு 1 டம்ளர் பால் ஊற்றி அரைக்கவும். 10 முந்திரியை கரகரப்பாக பொடி செய்யவும் (மிக்ஸியில் விட்டு விட்டு இயக்கவும்). 1 டேபிள்ஸ்பூன் ரவையை நெய்யில் வறுக்கவும்.

3 டம்ளர் பாலுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். கொதி வரும் போது முதலில் வறுத்த ரவை சேர்க்கவும். லேசாக வெந்ததும் அரைத்த சோளம் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.முந்திரிப் பொடியையும், 1 டம்ளர் சர்க்கரை சேர்த்து வேண்டுமென்றால் கொஞ்சம் பாலும் சேர்த்து தணலைக் குறைத்து கலக்கவும். சூடான பாலில் சிறிது குங்குமப்பூ கரைத்துச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கவும்.

இந்திய மக்காச்சோளம் சுலபமாக ஜீரணமாகும் தன்மை உடையது. எந்த விதமாகவும் வாயுத் தொல்லையை ஏற்படுத்தாது!

மக்காச்சோள தேங்காய்ப்பால் கறி

மக்காச்சோள மணிகளை தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் 1 விசில் வேக வைக்கவும். சோளமாக அப்படியே வைத்தால் 3 அல்லது 4 விசில் வைத்து வெந்தபின் மணிகளை உதிர்த்து வைக்கவும்.
லு அங்குலத்துண்டு பட்டை, 3 கிராம்பு, 2 டீஸ்பூன் கசகசா சேர்த்து மிக்ஸியில் பொடித்து உரித்த பாதாம் அல்லது முந்திரி சிறிதளவு, காரத்துக்கேற்ப பச்சை மிளகாய், உரித்த பூண்டு 3 பற்கள் சேர்த்து அரைக்கவும். 1 மூடி தேங்காய்த் துருவலில் இருந்து தேங்காய்ப்பால் எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி அரிந்த வெங்காயம் வதக்கி அரைத்த விழுதைச் சேர்க்கவும். நல்ல வாசனை வந்தபின் தகுந்த உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால், வேக வைத்த சோள மணிகள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இறக்குவதற்குமுன் முதல் தேங்காய்ப்பால் சிறிதளவு சேர்த்து இறக்கவும். பூரி, சப்பாத்தி, புலவுடன்
பரிமாறலாம்.

(சத்துகள் பெறுவோம்!)

எஸ்.மல்லிகா பத்ரிநாத்