பேய் படங்கள் ஏன் பிடிக்குது?



திரை உளவியல்

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என பிரபல பழமொழி உண்டு. எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களுக்கு சொல்லப்படும் வாசகம் இது. சிறுவயதில் விக்கிரமாதித்தன் முதுகில் தொங்கிய வேதாளக் கதைகள், நீலிக் கதைகள், யட்சி கதைகள், வனமோகினி கதைகள் என எத்தனையோ பேய்சார் கதைகளை கேட்டாலும்கூட,

பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திகில் படங்களைப் பார்த்தாலும் அதன் மீது உள்ள ஈர்ப்பு இன்றும் நம்மில் பலருக்கு குறையவில்லை. பேய் படம் வந்தால் முதல் நாள் முதல் காட்சியை ஓடிப்போய் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அன்றைய ‘ஆயிரம் ஜென்ம’ங்களில் இருந்து ‘காஞ்சனா’, ‘பீட்சா’, ‘யாமிருக்க பயமே’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’ வரை பேய் படங்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன.

சமீபகாலமாக மக்கள் பேய் படங்களை அதிகம் விரும்பிப் பார்க்கிறார்களே... இதற்கு உளவியல் ரீதியாக என்ன காரணம்? உளவியல் நிபுணர் குஷாலி மணிகண்டன் நம்மிடம் பேசினார்.

‘‘ஆக்ஷன் படங்கள் எனப்படும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களுக்கும், ஹாரர் படங்கள் எனப்படும் திகில் காட்சிகள் நிறைந்த பேய், பிசாசுகளை மையமாகக் கொண்ட படங்களுக்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் வரவேற்பு உண்டு. ஆக்ஷன் படங்களை பார்ப்பவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்துதான் பார்க்கிறார்கள். தன்னால் தட்டிக் கேட்க முடியாத அநியாயத்தை ஹீரோ கேட்கும் போது கைதட்டி மகிழ்கிறார்கள்.

பேய் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களின் உளவியல் இதிலிருந்து வேறுபட்டது. படத்தில் வரும் பேய் பயமுறுத்தவில்லை என்றால் அதை கிண்டல் செய்துவிடுவார்கள். படமும் ஓடாது! புத்திசாலித்தனமாக ஏமாற்றி எடுக்கப்படும் பேய் படங்களே வெற்றி பெறுகின்றன. படத்தில் பேயைக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார்கள் எனத் தெரிந்தும், பயத்தை ஏற்படுத்தி ரசிகர்களை திரையரங்கில் கட்டிப்போடும் இயக்குநர்களின் படங்களே வெற்றிவாகை சூடுகின்றன.

வாழ்க்கையில் தங்களால் பார்க்க முடியாத பேய்களை, பிசாசுகளை திரையில் பார்த்து பயப்படுவதன் மூலம் திருப்தி அடைகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சாகச உணர்வும் கிடைக்கிறது. சிறந்த முறையில் பயமுறுத்தும் பேய் படங்கள் அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரப்பதற்கு உதவுகின்றன. பய உணர்வின் போதும், மன அழுத்தத்தின் போதும் சுரக்கும் ஹார்மோன்தான் அட்ரினலின் என்றாலும், பயமுறுத்தும் வகை படங்களை பார்க்கும் போது அது சிறந்த உணர்வூக்கியாக செயல்படுகிறது.

மது, சிகரெட் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும் கிளர்ச்சியானது பேய் படங்கள் பார்க்கும் போது கிடைக்கிறது. அதில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஸ்யமும் சேர்ந்து கொள்கிறது.

ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போகும் போது ஒருவித பாதுகாப்பான பயம் ஏற்படுமே அதே உணர்வு திகில் படங்கள் பார்க்கும் போதும் ஏற்படும். அதனால்தான் பேய் படங்கள் பார்த்து அனுபவித்தவர்களால் அந்த பழக்கத்தை எளிதில் விட முடியாது. திகில் படங்கள் திரையரங்கில் வெளியாகும் நாளில் ஓடிப்போய் பார்ப்பார்கள். தொலைக்காட்சியில் திகில் படங்கள் ஓடினால் கூட சேனல் மாற்ற விடாமல் பார்ப்பார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில்10 சதவிகிதம் பேர் ஒருவித மனக்கிளர்ச்சிக்காக மட்டுமே பேய் படங்களை பார்க்கிறார்கள். ‘இந்தப் படத்தை நான் தனியாளாக தியேட்டர்ல பார்த்தேன்’ என்று பந்தா விடுபவர்களும் உண்டு. பேய் என்பது உண்மையல்ல எனத் தெரிந்தும், வெறுமனே ஜாலிக்காக பார்ப்பவர்களும் உண்டு. வாழ்க்கையில் சந்திக்க முடியாத அசாதாரணமான அனுபவங்களை பேய்  படங்களின் மூலம் பார்க்கலாம் என விரும்பிப் பார்ப்பவர்களும் ஏராளம்.

பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புண்டு. மூளையில் உள்ள Amygdala பகுதி எதிர்மறையான எண்ணங்களை சேர்த்து வைக்கும் பகுதி. இதில் ஒரு எண்ணம் சேகரமாகி விட்டால் எளிதில் அழியாது. நாளுக்கு நாள் எதிர்மறை எண்ணங்களின் அளவு வளர்ந்து கொண்டே போய் அவரது வாழ்க்கை மிகவும் சிக்கலுக்கு உரியதாக மாறிவிடும். அதனால், வெறுப்பு, கோபம், படப்படப்பு, பயம் போன்ற எதிர்மறை உணர்வு நிலைகளில் ஏதாவது ஒன்று அதிகமானால் உளவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று ஆரம்ப நிலையிலேயே பிரச்னையை சரி செய்து கொள்ள வேண்டும்.

பேய் படங்களை 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பார்க்க அனுமதிக்கக் கூடாது. பொதுவாக பேய் படங்கள் ‘ஏ’ அல்லது ‘யுஏ’ சான்றிதழ் பெற்றுதான் வருகிறது.‘ஏ’ சான்றிதழின் விரிவாக்கம் Adults only. அதாவது, பெரியவர்களுக்கு மட்டும் என்பதே இதன் அர்த்தமாகும். ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்த படங்கள் என்றால் கூட 12 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பெற்றோர் துணையுடன் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

நம்மூர் திரையரங்கங்களோ இந்த விதிமுறைகளை கண்டிப்பான முறையில் பின்பற்றுவதில்லை. அடிதடி, வெட்டுக்குத்து, வன்முறைகள் நிறைந்த ஆக்ஷன் படங்கள், ரத்தம் குடிக்கும் காட்சிகள் கொண்ட பேய் படங்களையும் குழந்தைகளை  பார்க்க அனுமதிக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. சிறு வயதில் குழந்தைகள் பார்க்கும்வன்முறை விஷயங்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும்.

இவ்வகை படங்கள் குழந்தைகளின் குணத்தை எதிர்மறையாக மாற்றி அமைத்து விடும். பெற்றோர் வன்முறையை தூண்டும் காட்சிகளை, பேய், பிசாசு படங்களை குழந்தைகளை பார்க்க அனுமதிக்கக் கூடாது. தொலைக்காட்சியில் கூட இத்தகைய காட்சிகள் வந்தால் சேனலை மாற்றி விடவேண்டும். சிறுவயதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை வளர்ந்த பின் மாற்றி அமைப்பது மிகவும் கடினம்.

அறிவியலை மையப்படுத்தி எடுக்கும் படங்கள், பொது அறிவை வளர்க்கக்கூடிய படங்கள், வன்முறையை விதைக்காத நிகழ்ச்சிகளை மட்டுமே குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும். பேய் படங்கள் பார்க்கும் பெரியவர்களும் அதில் உள்ள வன்முறை காட்சி களை திரையரங்கு வாசலிலேயே மறந்து  விட்டு வர வேண்டும். வீடு வரைக்கும் அதன் பாதிப்பை கொண்டுவராமல் இருந்தால் எந்தப் பிரச்னையும் நேராது...’’ என பேய் படங்களின் உளவியலை விவரித்து முடிக்கிறார் குஷாலி.

கேப்ஸ்யூல்

வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்பது உண்மையா?- ஜெய்ஸ்ரீ, நீரிழிவு நோய் மருத்துவர்அமெரிக்காவில் சாதாரண மனிதர்கள் 6 பேருக்கு வெண்டைக்காயின் விதையை பொடியாக்கி சாப்பிடக் கொடுத்தார்கள்.

அதன் பிறகு அவர்களை சோதித்த போது, அவர்களது ரத்தத்தில் 10 முதல் 20 சதவிகிதம் வரையிலும் சர்க்கரை அளவு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எலிகள் மீதும் இதே சோதனை நடத்தப்பட்டு எலிகளுக்கும் சர்க்கரை அளவு குறைந்தது. வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பான Mucilage சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. ஆனால், வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

- கிருஷ்ணவேணி

-விஜய் மகேந்திரன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்