ஒரு குழந்தையின் மகிழ்ச்சியைப் போலவே...



Centre Spread Special

நம் சிறு வயதை நினைவுபடுத்திப் பார்த்தால், காண்பவை எல்லாமே அதிசயமாய், எதிரில் இருப்பவர் எல்லோரும் சொந்தமாய், நட்பாய், கிடைக்கும் எல்லாமே  சந்தோஷம் கொடுப்பதாகத்தான் இருந்திருக்கும். குழந்தைப் பருவத்தில் ‘கார்ட்டூன்’ படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களாகவே மாறிவிடுவோம். வீடியோ  கேம்ஸ் என்றால் பசி, தூக்கம் எல்லாம் பறந்துவிடும். எதிலும் புதுப்புது அனுபவங்களைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். சமீபத்திய லாஸ் ஏஞ்சல் பல்கலைக்கழக  ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட ஆளுமை சோதனையில், ‘ஒரு நபர் புதுமை அனுபவங்களை அனுபவிப்பது என்பது அவரது நல்வாழ்வின் முன்கணிப்பு’ என  கண்டறிந்துள்ளனர்.

‘ஒவ்வொரு செயலிலும், சாத்தியத்தை எடை போடுபவர்களைவிட, சிறு விஷயத்திலேயே திருப்தி அடைபவர்கள் சிறந்தவர்கள். இவர்கள் குறைவான பதற்றமும்,  உணர்ச்சி நிலைத்தன்மையும் கொண்டவர்கள். இந்த குணம் குழந்தைகளிடம் அதிகம் இருக்கிறது’ என்கிறது அந்த உளவியல் ஆய்வு. பால்ய வயதில் யாரைப்  பார்த்தும் பொறாமை கொண்டதுமில்லை. யாரையும் வெறுத்ததுமில்லை. எதற்கும் பயமில்லை. எந்த சாகசத்திற்கும் தயங்கியதும் இல்லை. நாளாக, நாளாக  கோபம், சீற்றம், கூச்சல் நம்மை ஆக்கிரமித்து ஒரு எதிர்மறை உணர்ச்சிக் கலவையான மனிதனாக மாறிவிடுகிறோம்.

கோபம், சோகம், பொறாமை, இயலாமை உணர்வுகளால் நாம் பெறுவது மன அழுத்தம். ஒவ்வொரு உணர்வுக்கும், உடலின் உறுப்புகளோடு இருக்கும்  தொடர்பையும் அதனால் ஏற்படும் நோயையும் உளவியல் ஆய்வுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன. குழந்தையாய் இருக்கும்போது, நம் ஒவ்வொரு செயலிலும்  தைரியம் இருந்தது. எந்த பயமும் இல்லை. நம் ஒவ்வொரு முயற்சியிலும் கடுமையான உத்வேகம் இருந்தது. எதிலும் ஒரு சௌகரியத்தை தேடும் நாம்,  சௌகரியமான வேலியை அமைத்துக் கொள்கிறோம்.

அதிலிருந்து வெளிவர முயற்சிப்பதும் இல்லை. புது முயற்சிகளில் இறங்க அஞ்சுகிறோம். ரிஸ்க் எடுக்க பயப்படுகிறோம். ‘உண்மையில் குழந்தைகளின் இந்த  நேர்மறை சிந்தனை நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது. எவர் ஒருவர் மகிழ்ச்சியான வாழ்வை விரும்புகிறாரோ, அவர் மோசமான அனுபவங்களை கற்பனை  செய்யாதிருப்பது நீண்ட கால வாழ்வை உறுதிப்படுத்துகிறது’ என்கிறார்கள் ஆய்வை மேற்கொண்ட கட்மேன் மற்றும் லெவி.

‘குழந்தைகளுக்கு அடுத்தவர் நினைப்பதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. மற்றவரைப் பற்றிய கவலை இல்லாமல், தன் திருப்திக்காக செய்பவர்கள்,  மூளையின் சென்சார் பகுதியோடு இணைகிறார்கள். அவர்களுக்கு தன் தோல்வியால் மன இறுக்கம் ஏற்படுவதில்லை. இதனால் அவர்களுடைய உற்பத்தித்திறனும்  அதிகரிக்கும்’ என்கிறது மற்றோர் நரம்பியல் அறிவியல் ஆய்வு. ஏனெனில், குழந்தையாய் மாறுவது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, உங்கள் உடல், மன நலம்  சம்பந்தப்பட்டதும் கூட!

- உஷா நாராயணன்