இளவரசியின் ஆரோக்கிய ரகசியம்!Celebrity Special

பிரபலங்கள் என்ன செய்தாலும் அது டிரெண்ட்தான். அதிலும் பிரிட்டிஷ் இளவரசி மேகன் மார்க்லேவைப்பற்றி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஏதாவது ஒரு செய்தி அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கின்றன. அவரது ஃபிட்னஸ் ரகசியம் என்ன, டயட் செய்திகள், சரும நலனை எப்படி  பாதுகாக்கிறார் என மேகன் பற்றி வெளியாகும் தகவல்கள் எல்லாமே சுவாரஸ்யமானவை.

கூகுளை திறந்தாலே புன்னகை தவழும் இவர் முகம் நம்மையும் வசீகரித்துவிடுகிறது. புன்னகைக்காமல் இறுக்கமாக இருப்பது போன்ற அவரது புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்ப்பது மிகவும் அரிது.

சாதாரணமாகவே தன் உடல்நலனில் அக்கறை செலுத்தும் மேகன், தற்போது கர்ப்பமாகி பிரசவத்துக்காக காத்துக் கொண்டிருப்பதால் அவரது வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள எல்லோரும் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் இந்த பரபர அப்டேட்டுகள், பிரேக்கிங் நியூஸ் எல்லாம்...

மேகன் யார் என்பது தெரியாதவர்களுக்காக இந்த சின்ன முன்னுரை.சார்லஸ் - டயானா தம்பதிகளைத் தெரியும்தானே... அவர்களது புதல்வர் ஹாரியின் அன்பு மனைவிதான் மேகன். அமெரிக்க தந்தைக்கும் ஆப்பிரிக்க தாய்க்கும் பிறந்தவர் மேகன் மார்க்கல். டி.வி தொடர் நடிகையான இவர், ‘சூட்ஸ்’ என்ற அமெரிக்கத் தொடர்மூலம் பிரபலம் ஆனவர்.

முதன்முதலில் 2016-ம் ஆண்டு, மேகனின் ஃபேஷன் டிசைனரான மிஷா நானூ, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றிலிருந்து, அமெரிக்காவுக்கும் லண்டனுக்குமாகப் பறந்து பறந்து காதலித்துள்ளார்கள். ‘திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று மண்டியிட்டு புரோபோஸ் செய்த இளவரசர் ஹாரியின் காதலை, கேள்வியை முடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு பேரரசின் எதிர்கால மன்னனே, மண்டியிட்டு காதலைச் சொல்லியிருக்கிறார் என்றால் பாருங்கள்.

ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ், தனது இளைய மருமகளான மேகனுக்கு, உறுதியும் வளைந்து கொடுக்காத தன்மையுள்ள வீராங்கனையாக இருப்பதால், மென்மையான தன் மகன் ஹாரிக்கு மேகன் ஒரு பலமாக இருப்பார் என்ற எண்ணத்தில் ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டினார்.

திருமணத்தின் போது மேகனின் தந்தை உடல்நலமின்றி இருந்ததால், தந்தையின் நிலையில் மேகனின் கரம்பற்றி அழைத்து வந்து, திருமணம் செய்தும் வைத்துள்ளார்.  ஏற்கனவே ராணி எலிசபெத்தின் மனதில் இடம் பிடித்துவிட்ட மேகன், மாமனாருக்கும் பிரியமான மருமகளாகிவிட்டார்.
இப்படி ஒரு அரச குடும்பமே மேகன் மார்க்லேவை தலையில் வைத்து கொண்டாட காரணம் என்ன?

உறுதியான, நேர்மறையான எண்ணங்கள் கொண்ட மேகன் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் மருமகளாக சேர்வதற்கு முன்பே, அரசியல் ரீதியாக குரல் எழுப்பியவர். 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவளித்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட டோனால்ட் டிரம்ப்பை தவறான கருத்துடையவர் மற்றும் பிரிவினைவாதி என்று தைரியமாக விமர்சனம் செய்தவர்.

மார்க்கல் தன்னை, ஒரு இளம் உலகத்திற்கான சர்வதேச தொண்டு நிறுவனத்தின் ஆலோசகராக  ஈடுபடுத்திக் கொண்டவர். டப்ளினில் 2014-ல் நடந்த உச்சி மாநாட்டில், பாலின சமத்துவம் மற்றும் நவீன கால அடிமைத்தனத்தின் தலைப்புகளில் பேசினார். 2014-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிலும் ஸ்பெயினிலும் யுனைட்டட் சேவை நிறுவனங்களுடன் தானும் இணைந்து செயலாற்றியுள்ளார்.

‘2016ன் வோர்ல்டு விஷன்’ கனடாவின் உலகளாவிய தூதராக, சுத்தமான நீர் பிரச்சாரத்திற்காக ருவண்டாவிற்கு பயணித்தார். அதே ஆண்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்க நம் இந்தியாவிற்கும் வந்தார். இப்படி சமூக சேவையிலும், பொது வாழ்விலும் தன்னை முன்னிறுத்தி வந்திருக்கிறார்.

ஆரோக்கியமான நல்ல பழக்க வழக்கங்கள், நேர்மறை எண்ணங்கள், எப்போதும் புன்னகை தவழும் முகம் என எப்படி பார்த்தாலும், மேகனின் நேர்மறை அணுகுமுறையே அவருடைய அழகு, ஆரோக்கியத்தின் ரகசியமாக இருக்கிறது. இருவருடைய திருமணத்திற்கு முன்பு, நண்பர்களோடு எப்போதும் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என இளவரசர் ஹாரி அனைத்து பத்திரிகைகளிலும் முக்கியச் செய்திப்பொருள் ஆகிவிடுவார்.

ஆனால், அதன்பின் தன் மனைவியின் கோரிக்கையின்படி, ஆல்கஹால் பழக்கத்தை கைவிட்டு தான் எதிர்பார்த்ததைவிடவும் அதிக மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பதை ஒரு பத்திரிக்கை நேர்காணலில், ஹாரி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து மாளிகையின் டைனிங் ஹாலில் இருக்கும் அத்தனை ஜங்க் ஃபுட்களையும் எடுத்துவிட்டு, அதற்கு பதில் ஃப்ரஷ் காய்கறிகள், பழங்களாக நிரப்பி வைத்திருக்கிறார் மேகன் மார்க்கல். தன் கணவர் மட்டுமல்லாமல், அவர் குடும்பத்தாரின் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை செலுத்துபவராகவும், அவ்வப்போது ஆரோக்கியம், ஃபிட்னஸ் சம்பந்தமான டிப்ஸ்களை உலக மக்களுக்கும் கொடுத்து வருகிறார்.

தற்போது தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்கலுக்கு இதோ இந்த வாரத்தில் பிரசவம் நடக்க இருக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்கள் குழந்தையை வரவேற்க ஏற்கனவே வின்ட்சர் நகரத்தில் இதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் காட்டேஜுக்கு சென்று விட்டார்கள்.

வெஜிடேரியன் டயட்டை ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணும் மேகன் கர்ப்பமாக இருக்கும் தனக்கும், கருவிலுள்ள குழந்தைக்காகவும் இரும்புச் சத்து மிகுந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறார். கருவுறுவதற்கு முன்பு கூட, அவரது  உணவுமுறை சுத்தமானதும், சமச்சீரானதாகவும் இருந்தது. ஒரு ஃபேஷன் ஐகானாக இருக்கும் இவர், கர்ப்பமான முதலே தன் உடலுக்குள்ளேயும், தோல் மேற்பரப்பு மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள் முதல் தான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் எந்த ஒரு செயற்கை மணமூட்டியோ, ரசாயனப் பொருட்களோ இல்லாமல் முழுவதும் இயற்கையான விஷயங்களாக இருக்க வேண்டும் என்பதை மிக கண்டிப்பாக பார்த்துக் கொள்கிறார். உடல் மற்றும் மனதிற்கு தரும் ஆரோக்கியமான அணுகுமுறை மூலம், தன் குழந்தைக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்வை கொடுப்பதற்கான அனைத்து விஷயங்களையும் கடைபிடிக்கிறார்.

கையசைத்தால் ஆயிரம் ஊழியர்கள் கை கட்டி வேலை செய்ய இருந்தாலும், ‘தாய் என்ன உண்கிறாளோ, அதையே குழந்தையும் உண்கிறது’, நான் சுத்தமான உணவை உண்ணும் போதுதான், என் குழந்தைக்கு ஒரு சுத்தமான வாழ்க்கையை கொடுக்க முடியும்’ என்ற விஷயத்தில் கண்டிப்பாக இருக்கும் மார்க்கல் அரச குடும்பத்து இளவரசியாக இருந்தாலும் தனக்கான உணவை தானே தயார் செய்கிறார்.  

மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக மேகன் வெளிப்படையாக அறிவித்த டயட் இது. இளவரசி என்பதற்காக ஆடம்பர உணவாக இருக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை. முயன்றால் நாமும் பின்பற்ற முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். காலை உணவில் புரோட்டீன், ஃபைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார். காலை ஸ்நாக்ஸாக கர்ப்பிணிகளுக்கு காலை நேரத்தில் வரும் மயக்கம், வாந்தியை தடுக்கும் வாழைப்பழம், தேன் சேர்ந்த குக்கீஸ்கள்தான் அவருடைய காலை நேர ஹெல்த்தி ஸ்நாக்ஸ்.

மதிய உணவில் சாலட்டுகள், மீன் உணவுகள், ப்ரவுன் ரைஸ், கீரை வகைகள், பயறு வகைகள் என சமச்சீரான உணவாக எடுத்துக் கொள்கிறார். 30 நாளுக்கும் வெவ்வேறு விதமான உணவு அட்டவணை தயாரித்து அதன்படி உணவுகளை எடுத்துக் கொள்கிறார். கர்ப்ப காலத்தில் அதிகம் தேவைப்படும் இரும்புச்சத்துக்கு பெரும்பாலும் இயற்கை உணவுகளையே உண்கிறார். மாலை நேர ஸ்நாக்சில் கண்டிப்பாக இரும்புச் சத்துள்ள ஸ்மூத்திகள், நட்ஸ்கள் இருக்கும்.

இரவு உணவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சோயா பாலில் தயாரிக்கப்பட்ட டோஃபு, ஏழு வகையான காய்கறிகளில் தயாரான உணவு. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த விதைகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்.இரவு படுக்கப் போகும் முன்பு எடுக்கும் ஸ்மூத்திகளிலும் சியா விதைகள், ஃப்ளேக் சீட்ஸ் தூவப்பட்டு மிகவும் ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். இரவு நேரத்தில், பால், பால்பொருட்களுக்கு பதில், சோயா பாலில் தயாரிக்கப்பட்ட சீஸ், டோஃபு போன்றவைதான்.

சரி... மேகனின் உடற்பயிற்சி?

உடற்பயிற்சியென்றால் மேகனுக்கு பிடித்தது யோகாதான். அவர் அம்மா ஒரு யோகா ட்ரெய்னர் என்பதாலேயே யோகா செய்வதை மிக பர்ஃபெக்ட்டாக கடைபிடிக்கிறார். ஹாட் யோகாவை வழக்கமாக செய்யும் மேகன் கருவுற்றபின், அதைத் தவிர்த்து, இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தக்கூடிய மிதமான யோகப்பயிற்சிகளையே செய்கிறார். கருவுற்ற நாளிலிருந்து இதுவரை ஒரு நாளும் யோகா, தியானம்,  மூச்சுப்பயிற்சிகள்  செய்வதை தவறுவதில்லை. மற்றபடி ஜாக்கிங், ரன்னிங், வாக்கிங் என மற்ற ஏரோபிக் பயிற்சிகளையும் செய்கிறார். 28 நாட்கள் வெயிட் லாஸ் சேலஞ்ச்சையும் கடைபிடிக்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட குழந்தை பெறும் வரை எந்தவிதமான அரசு நிகழ்ச்சிகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதில்லை என்ற முக்கியமான கொள்கையை பின்பற்றுகிறார். அதற்கு காரணம், எப்பொழுதும் மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொண்டால் தாய், குழந்தை இருவரது ஆரோக்கியமும் மேம்படும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளார்.

மேகனுடைய பிரசவ தேதியை இன்னும் இங்கிலாந்து அரண்மனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதனால், மேகனுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று சூதாட்டம் எல்லாம் நடந்துகொண்டிருப்பதாகத் தகவல்.

பிரசவமும், எப்போதும், வழக்கமாக பின்பற்றும் நடைமுறையில்லாமல், ‘ஒரு திரவ அணுகுமுறையில், வித்தியாசமாகத் தன் குழந்தையை பெற்றெடுக்க திட்டமிட்டுள்ளார். அதேபோல், பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தைப் பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பையும் இந்த தம்பதி கொண்டிருக்கவில்லை. பிரிட்டிஷ் அரியணை வரிசையில் ஏழாவதாக இருக்கப்போகும் அந்த அரசக்குழந்தையின் பிறப்பு செய்தியை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

- உஷா நாராயணன்